சனி, 20 ஜூலை, 2013

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-18. அரங்கனுக்கு பூதத்தாழ்வாரின் அர்ப்பணம்.



ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-18. அரங்கனுக்கு பூதத்தாழ்வாரின் அர்ப்பணம்.


பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள்?  ,
விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் 
என்பது அர்ச்சை நிலை, திருபாற்கடல் ஒரு நிலை, மண்மீது உழல்வாய் 
என்று அவதாரங்கள் நிலை, இவற்றுள் எங்கும் மறைந்து உழல்வாய் 
என்ற அந்தர்யாமி நிலை. இந்த ஐந்து நிலைகளில்  எளிமையான் 
நிலை அர்ச்சாவதாரம் என்ற அர்ச்சை நிலை. 
என்னன்னு கேட்கிறிங்களா?
பாருங்க, வைகுந்த பெருமானைப் போய் உடனே பார்த்துவிட்டு 
வரமுடியுமா? யாரை வேணா கேளுங்க,108 திவ்ய தேசத்தை பார்த்தாச்சா, 
அப்படின்னு?
வைகுந்தம், திருபாற்கடல் இவற்றைப் பார்த்தாச்சா?-ன்னு கேளுங்க. 
என்ன பதில் வரும்?
வராது!!!
வைகுந்தம் போய் விட்டு வந்து
   "நாம் வைகுந்தம் போய்விட்டு வைத்தேன், நீங்க பார்த்தாச்சா?"
என்று சொல்ல முயுமா? அதுசரி, திருபாற்கடலைப் போய், 
பெருமாளைப் பார்த்துவிட்டு  பாற்கடலில் நீந்திவிட்டு வந்தேன்னு 
சொன்னா யார் நம்புவாங்க.
அந்த இரு நிலைகளும் இந்த உடலோடு போய் பார்க்க முடியாதுன்னு
எல்லாருக்கும் தெரியும். அதுசரிய்யா ராமன், கண்ணன், போன்ற 
அவதாரங்களை பார்த்தேன்னு சொன்ன, நாம என்ன கேட்போம்,
"என்ன சினிமா பார்த்தியா?"
அப்படின்னு தானே கேட்கத் தோன்றும். இல்லையா பின்னே? 
அவதாரங்கள் எல்லாம்  நம்ம காலத்திலேயா நடந்தது? காலத்தால் 
போகமுடியாத நிலைகள் அவை.  என்ன, அவதாரங்கள் நடந்த 
இடமான அயோத்தி, மதுரா, துவாரகா போன்ற  இடங்களைப் 
போய் பார்த்து அனுபவித்து விட்டு வந்து மகிழலாம்.
"நான் பெருமானை நேத்தி ஏன் கனவுல வந்தார்" என்றும், 
நமக்குள்ளே உள்ளார் என்று சொல்லமுடியுமா? ஆழ்வார்கள் 
எல்லாம் தான் ஏன் மனதுக்குள் பெருமான்  வந்தார் என்று 
சொல்ல முடியுமே தவிர, நம்மைப் போல் உள்ளவர்கள், ஏழைகள்
"இன்னிக்கு என்ன சமையல் பண்ணே? என்ன நகை வாங்கினே?" 
என்று சொல்ல முடியுமே தவிர பெருமாள் நமக்குள்ளே உள்ளார் 
என்று சொன்னால் யாரும் நம்பாட்டார்கள்.
இப்படி பெருமானின் ஐந்து நிலைகளில், நான்கு நிலைகள் நம்மால் 
நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலைகள்.
அப்ப ஜந்தாவதான நிலை அர்ச்சாவதார நிலை தான் நமக்கு ஏத்த நிலை.
திருமங்கைஆழ்வார் சொல்றாராம், ஜீவன் இந்த உடலோட 
வைகுந்தத்துக்கு போகமுடியாதாம், அது இந்த நாட்டிலேயே 
இல்லை, போனா திரும்பி வரமுடியாதாம்,
இப்படி இருக்கும் போது தரையில் கிடக்கும் முயல் 
மாமிசத்தை விட்டு, ஆகாயத்திலே போற காக்கை மாமிசத்துக்க்கு 
ஆசைப் படுவது போல இருக்குன்னு சொல்றார். முயல் மாமிசம் என்பது
அர்ச்சையாம், காக்கை மாமிசம் என்பது வைகுந்தமாம்.
அப்படி பெருமை கொண்டது அர்ச்சாவதாரம் என்கிற விக்கிரஹ 
ருபத்தில் நிலை.
ராமானுஜர் தன்னுடைய காலக்‌ஷேபத்தில் சொல்வதை வேளுக்குடி ஸ்வாமிகள்
சொல்றார்,
”அவன் இவன் என்று கூழேன்மின் நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும்  நீள் கடல் வண்ணனே”
அதாவது “அவன்”னான, வைகுந்த நாதனும் “இவன்”னான் அர்ச்சாவதாரமான பெருமாளும்
ஒன்று என நினைக்காதீர், அவனுக்கு இருக்கும் பெருமை இவனுக்கு உண்டா என்று கேட்பது போலத் தோன்றும், அப்படியில்லை,
“அவன்”னுக்குக் கொடுக்கும் ஸ்வரத்தை கொஞசம் குறைத்துக் கொண்டு, “இவன்”னுக்குக் கொடுக்கும் ஸ்வரத்தை கூட்டி பின் அர்த்தத்தைப் பாருங்கள் என்கிறாறாம்.
“அவன்” என்ற வைகுந்த நாதன் என்ன பெரியவனா, அவனை நாம் எப்போது பார்க்கப்  போகிறோம், இல்லை “அவனை”ப் பார்த்துவிட்டு வந்து ஏதாவது உபன்யாசம் பண்ண  முடியுமா, “அவனை”ப் பார்த்தேன்னு யாருக்கிட்டயாவது பீத்திக்க முடியுமா?
இப்படி ஒண்ணுமே செய்ய முடியாத “அவன்” பெரியவனா, இல்ல,
“இவன்”னான அர்ச்சாவதார அரஙகனாதனை என்ன்ன்ன நாம நினைக்கிறோமோ அந்தந்த விதத்தில் அலங்காரம் செய்து பார்க்ககூடிய “இவன்” பெரியவனா என்று பார்த்தால், “இவன்”தான் பெரியவன் என்று ராமானுஜர் தன்னுடைய உபன்யாசத்தில் சொல்வாராம்.
இப்படி அர்ச்சாவதாரத்துக்கு ஒரு தனிப் பெருமை உண்டு.
அதிலும் அரங்கனுக்குத் தனிப் பெருமை.
அரங்கனுக்கு பதின்மர் பாடும் பெருமாள் என்று பெயர். ஆம், எல்லா ஆழ்வார்களும் அவருக்கு பாசுரம் பாடியுள்ளார்கள். மொத்தம் 247 பாசுரங்கள்.  மற்ற எல்லா திவ்யதேசப்பெருமானுக்கும் இல்லாத இந்தச்சிறப்பு, அரங்கனுக்கு மட்டுமே உண்டு.
முந்தைய பகுதியில் பேயாழ்வார் அரங்கனுக்கு அர்ப்பணம் செய்த பாசுரத்தைப் பார்த்தோம்.  
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் நூறு பாசுரங்கள் பாடியுள்ளார்.
அதில் 4 பாசுரங்கள், அதாவது, 28, 46, 70 மற்றும் 88 வது
பாசுரங்கள் அரங்கனுக்கு என அமைந்தவை
மேற்சொன்ன ஐந்து நிலைகளையும் திருவங்கத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்.
பஞ்சப் பிரகாரமும் ஸ்ரீரங்கத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
அதாவது வைகுண்ட நாதனே அரங்கன், திருப்பாற்கடல் நாதனே அரங்கன்,
விபவ வாசுதேவனே அரங்கன், நான்காவது நிலை அந்தர்யாமியே அரங்கன்,
மற்றும் அர்ச்சாவதார திருவேங்கடநாதனே அரங்கன் என்று ஐந்து நிலையையும் அரங்கனுக்கு சமர்ப்பிக்கிறார் பூதத்தாழ்வார்.
இந்தப் பாசுரத்தில் வைகுந்தம்,திருப்பாற்கடல்,விபவாதாரம்,அந்தர்யாமி, மற்றும் அர்ச்சாவாதரம் என்ற நிலைகளை எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு இடத்தை ஒப்பிடுகிறார். இதில் திருவேஙகடத்தை அர்ச்சாவதார நிலைக்கு திருவரங்கத்துக்கு ஒப்பிடுகிறார். மேலும் அரங்கம் “நினைப்பரிய நீள் அரங்கம்”, என்று பெரிய அரங்கம், நினைக்கமுடியாது அளவு என்று கூறுகிறார்.
ஆமாம், திருவரங்கம் கோயில் மிகக் பெரியது தான்.  6,79,0000 சதுர அடி, 156 ஏக்கர் பரப்பளவு, சுற்றளவு 4km,   7 பிரகாரங்கள் கொண்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய கோபுரம் 236 அடி உயரம் கொண்டது மொத்த கோபுரங்கள் 21 கொண்டது உலத்திலேயே இது ஒன்றுதான். 2700 அடி வடக்கு தெற்காக , 2200 அடி கிழக்கு மேற்காக மிக  நீளமாக உள்ளது திருவரங்கம் என்றால் பார்த்துக்கொள்ளூங்கள்!!
இதில் எல்லா ஆழ்வார்களுக்கும் சன்னிதி உள்ளது. எல்லா பெருமாளுக்கும், அதாவது ராமருக்கு, கிருஷ்ணருக்கு,
பார்த்தசாரதிக்கு, உடையவருக்கு என்று எல்லாருக்கும் சன்னிதி உண்டு. 40 சன்னிதிகள் உண்டு. இங்கு உள்ள கருடன்  மிகப் பெரிய கருடன்.
ஏகப்பட்ட உப சன்னிதிகளுடன் கொண்ட ஒரே கோயில் இது தான் என்றால் அது மிகையாகாது.
அதன் விஸ்தீரணத்தைக் காட்டும் வரைபடத்தை கொடுத்துள்ளேன், நீங்களே பார்த்துக்கொள்ளூங்கள் ஸீரங்கம் எவ்வளவு
பெரிய கோயில் என்று!!!!!
பூதத்தாழ்வார் இந்தப் பாசுரத்தின் மூலம் மற்றொன்றையும் சொல்கிறார். அதாவது ‘ம்னம்” என்பது ஒரு திவ்ய்தேசம் எனக் கொள்ளலாம். ஆம், மனத்தை ஒரு திவ்யதேசமாக கொள்வதை விட்டு வேறு இடத்தை ஏன் தேடுகிறாய்? என்று சொல்லாமல் சொல்கிறார்.
108 திவ்யதேசத்தையும் மனத்திலேயே கொண்டு வாருங்கள், அப்புறம் எதற்கு மற்ற எல்லா இடத்திலேயும் அவனைத் தேடுகிறாய் என்றும் கொள்ளலாம்.
வைகுந்த நாதனுக்கு ‘தேவாதிதேவன் எனப்படுவான்”, ”மாவாய் பிளந்த மகன்” என்பதன் மூலம் விபவாதாரத்துக்கு  

உதாரணம் சொல்கிறார். அதாவது கேசி என்கிற குதிரையை அடக்கிய கிருஷ்ணாவதாரத்தை சொல்கிறார்.
எல்லா திவ்யதேசங்களையும் என்னுடைய மனத்தில் மகாலயமாக வைத்துள்ளேன், மற்ற எல்லா இடத்திலும் பாலாயமாக
உள்ளது என்று தன் மனத்தைக் கூறுகிறார்.
அந்த பாசுரம்.

      மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
  நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்
      தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்
  மாவாய் பிளந்த மகன்.                                                        28

உ.வே.வேளுக்குடி ஸீகிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸீரங்க மஹாத்மியம்  உபன்யாசத்தில் இருந்து 

எடுக்கப்பட்டது. 

புதன், 5 டிசம்பர், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-17. அரங்கனுக்கு பொயகை ஆழ்வாரின் அர்ப்பணம்.

அரங்கனாதர் கார்த்திகைப் புறப்பாட்டின் பொது

நம்பெருமாள் அரங்கனாதனுக்கு பல ஆழ்வார்களும் பாசுரங்களைப் பாடியுள்ளார்கள். 
நாலாயிரமும் அரங்கனுக்கே என்று சொல்பவர்களும் உண்டு.
பத்து ஆழ்வார்கள் மொத்தம் 247 பாசுரங்கள் பாடியுள்ளார்கள். அவருக்கு புறப்பாடு நடக்கும் 
போது
பெருமாளுக்கு ”பதின்மர் பாடும் பெருமாள்” என்று அருளப்பாடு செய்வார்கள், 
அதில் முதல் ஆழ்வார் பொய்கை ஆழ்வார், தன் முதல் திருவந்தாதியில் ஒரு 
பாசுரமும், கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார் 73 பாசுரமும் பாடியுள்ளார்கள்.

பிர்ஹலாதன் தன் தாயாரின் கர்ப்பத்தில் இருக்கும் போதே பெருமானைப் பற்றி, நாரதர் சொல்ல
கதை கேட்டு, வளர்ந்தான். பெருமானைப் பார்த்து கை தொழுதான். பின்னாளில் வேதாப்பியாசத்தின்
போது, தன் சக மாணவர்களிடத்தில் ”ஒம் நமோ நாராயணாய’ என்று சொல்லுங்கள், ஹிரண்யாய நம” என்று
சொல்லாதீர்கள் என்று சொல்கிறான். 
”நீ மட்டும் அப்படிச் சொல்ல எப்படிக் கற்றுக் கொண்டாய்?” என்று சக மாணவர்கள் கேட்க,
“நான் என் தாயாரில் கர்ப்பத்தில் இருக்கும் போதே அதைக் கற்றுக் கொண்டு விட்டேன்”
என பதில் அளிக்கிறான் பிர்ஹலாதன்.
அதைப் போல,கர்ப்ப காலத்திலேயே பெருமானைக் கண்டேன் என்கிறார் இந்த ஆழ்வார். 
இதில் வேடிக்கை என்னவென்றால் பொய்கை ஆழ்வார் ஒரு தாயாரின் கர்ப்ப சம்பந்தம் 
இல்லாமல் வந்தவர்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார், தன்னுடைய பாசுரத்தில்,
"வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்
        பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
        ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே."
ஒருவன் நூறு வருஷங்கள் வாழ்வதாகக் கொண்டால், அதில் பாதி தூக்கத்திலேயே 
போய் விடும், மீதி பாதியில் பேதை, பாலகன், அதாகம், பிணி, பசி, மூப்பு, துன்பம் எனப்
போய்விடும். அதனால் எனக்குப் பிறவி வேண்டாம் என்று அரஙகனிடம் மன்றாடுகிரார்.
அதுக்காக பெருமான் நம்மை விட்டு விடுவானா?
நாம் முன்பிறவியில் செய்த கர்மத்தைத் தொலைத்தால் தானே பிறவி இல்லாமல் இருக்க 
முடியும்?
கருவில் குழந்தை



அப்படி கர்ப்பத்தில் இருக்கும் போதே கண்டேன் என்கிறார் பொய்கையாழ்வார். கர்ப்பத்திலேயே 
இல்லாதவர்,
கர்ப்ப காலம் என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்து இருக்கிறார் பாருங்கள்.
ஒரு தாயாரின் கர்ப்பத்தில் இருப்பது ஒரு வகையில் ந்ல்லதுதான், ஏனெனில் வெளியில்
வந்தால் எத்தனை சிரமங்கள்? அத்தனையும் மீறி நாம் எப்போது இறைவனை அடைவது?
ஆனால் உண்மையிலேயே கர்ப்ப காலமே மிகக் கஷ்டம் என்று ஆழ்வார் உணர்ந்துள்ளார்
பின்னெ இல்லையா, நாம நம்ம இஷ்டம் போல அங்க உட்காரமுடியுமா, காலைத்தான் நம்ம
இஷ்டத்துக்கு நீட்ட முடியுமா, நமக்கு வேண்டியதை நாம சாப்பிட முடியுமா, புழு, பூச்சி, 
மலம், சீழ் இவைகளுக்கு இடையே மடிச்ச காலை நீட்ட முடியுமா, இப்படி பல முடியுமாக்களை
சிந்தித்து இருப்பார் போல் ஆழ்வார். அது மட்டுமா வெளியில் வந்தால் மட்டும் உடனே
நாம நம் வேலையைச் செய்து கொள்ளமுடியுமா? இதையெல்லாம் ஆழ்வார் சிந்தித்து இருப்பார்
போல். இதையெல்லாம் எப்படி என்னால் மறக்கமுடியும். அதைத்தான் சொல்கிறார், ‘ஒன்றும்
மறந்தறியேன்” என்று.  
திருபாணாழ்வாரைப் போய் கேட்டால் தெரியும், அரங்கனுடைய ஒவ்வொறு அங்கங்களும் எவ்வாறு
அவரை பாதித்ததென்று? ”திருக்கமலப் பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே” என்கிறார் 
அவருடைய பாதத்தை பற்றிப் பாடும் பொது. “செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே”
என்கிறார் வாயைப் பற்றிப் பாடும் போது. “என்னை பேதமை செய்தனவே”, அந்த “நீண்டவப்
பெரிய வாய கண்கள்” என்கிறார் கண்கள் செய்ததை!. எல்லாவற்றுக்கும் மேலாக, “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக்
கானாவே!” என்று அரங்கனோடு ஐக்கியம் ஆகி விடுகிறார். அப்படிப்பட்ட அரங்கனை பொய்கை
ஆழ்வாரால் மட்டும், ”எப்படி மறக்க முடியும் அவனை” என்கிறார்?
அதனால்தான் அங்கிருந்தபடியே பெருமானை கண்டாராம். எந்தப் பெருமானைக் கண்டாராம்?
“ஓதநீர்வண்ணனை” என்கிறார். எந்தப் பெருமான் என்னை ரக்‌ஷிப்பதற்கென்று, வைகுந்தத்தில் இருந்து
விரக்தி ஏற்பட்டு, அரங்கத்தில் வந்து படுத்து இருக்கிறானோ, கர்ப்பத்திலேயே தொழுது
கொண்டு இருக்கும் என்னை போன்றவர்களை காப்பதற்க்கு வந்திருக்கும் அரஙகனைக் கண்டாராம்.
நானோ கர்ப்பத்தில் படுத்துள்ளேன், அவனோ அரஙகத்தில் படுத்துள்ளான். மேகத்தைப் போல
எல்லாருக்கும் அருள் செய்வதற்க்கு என்று வந்து படுத்து இருக்கும் அரங்கணை எப்படி மறப்பேன்
என்று “ஒதநீர் வண்ணனை” என்கிறார்.
“கண்டேன்” என்கிறார், உடனேயே, “கை தொழுதேன்”, என்கிறார். எந்த திசையை நோக்கித்
தொழுதாராம்? “திருவரங்கமேயான் திசை” என்கிறார். அதாவது திருவரங்கன் இருக்கும் திசையை
நோக்கித் தொழுதேன் என்கிறார்.
கருவரங்கத்திலேயே அவனை தொழுங்கள், அப்படி இல்லையா நினைவு தெரிந்த பிறகாவது
அவனை மறக்காதீர்கள், அவன் அருள் கிடைக்காத “ஏழைகாள்” என்று நம்மைப் பார்த்துக்
கூறுகிறார்.
பொய்கை ஆழ்வார் பாசுரம்:
         ஒன்றும் மறந்தறியேன்* ஓதநீர்வண்ணனைநான்*
            இன்றுமறப்பனோ ஏழைகாள்* -அன்று
         கருவரங்கத்துள் கிடந்து* கைதொழுதேன் கணடேன்*
            திருவரங்கமேயான் திசை (1) 2087
வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதனை


முழுதுமாகக்  கேட்க கீழ்கண்ட தொடர்பினை தரவிறக்கம் செய்து கேட்கலாம்.
http://www.mediafire.com/download.php?e8w2ntm2cd4k1an

ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-16. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!! -திருமங்கை ஆழ்வார்.















வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
    பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
    அவர் தம் கலவியெ கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
    உணர்வெணும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
    நாராயணா என்னும் நாமம்.

யார் தெரிந்து கொண்டார், என்ன தெரிந்து கொண்டார்?
எப்படித் தெரிந்து கொண்டார்? யார் சொல்லிக் கொடுத்தார்கள் அவருக்கு?
அப்படி எனன விஷேஷம், அந்த நாமத்தில்? அதனைத் தெரிந்து கொள்ள, தன்னுடைய தவறுகளை மன்னித்த, அவரை எப்படிக் கண்டு கொண்டார்? தன்னுடைய ’ஆடல்மா’  குதிரையில் ஏறி மிக அதிகமான திவ்விய தேசங்களுக்கு சென்று பாசுரங்களைப் பாடியவர்யார்?
என்று பல கேள்விக்ளுக்கு பதில், வேறு யாராக இருக்க முடியும், ‘கலியன்’ என்ற பெயர்  கொண்ட ’திருமஙகையாழ்வாரை”த் தவிர!!!
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் மிக அதிகமான பாசுஙகளை பாடியவர், கிட்டத்தட்ட ஆயிரம் பாசுஙகளுக்கு மேல்,
 எப்படி இறைவனால், நாராயணனால் ஆட்கொள்ளப்பட்டார்
என்பது மிகப் பெரிய கதை!!
திருக்குறையலூர், சோழ நாட்டில் உள்ள சிறிய ஊர், மிகப் பெரிய ஆழ்வாரைக் கொடுக்கும் என்று அவருடைய தந்தை, ஆலிநாடர் கூட, நினைத்து இருக்கமாட்டார். நீலன், அதுதான் தந்தை இட்ட திருநாமம் அவருக்கு. இவருடைய வீரத்துக்கும், விவேகத்துக்கும் உரிய சன்மானத்தை, திருமங்கை என்னும் சிற்றூரை சோழ மன்னன் பரிசாகக் கொடுத்தான்.
’பரகாலன்’ என்ற பட்டப் பெயரோடு வாழ்க்கையை துவங்கிய இவருக்கு விதி என்ன செய்தது!!!!
பாருங்கள்!
சுமங்கலி என்னும் தேவகன்னிகை, தன் பிறப்பு அறிநதவள், ஒரு அந்தணர் வீட்டில் குமுதவல்லி என்னும் பெயரோடு வளர்ந்து வரும் இவர், பரகாலனை மாற்ற வந்தவர் என்றே கொள்ளலாம்.
பரகாலன் குமுதவல்லியை சந்திக்க வேண்டும் என்பது விதி தானே?
என்ன நடந்தது?
கண்டதும் காதல், என்னமோ இந்தக் காலத்தில் மட்டும் தான் நடக்க முடியுமா?
குமுதவல்லியைக் கண்டதும் காதல் கொண்டார், அவள்தான் தன் மனைவி என்பதில் உறுதி கொண்டார்.
'நான் தஙகளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், தங்களுக்குச் சம்மதமா?”
பரகாலன் குமுதவல்லியைப் பார்த்து நேராகவே கேட்கிறார்.
தான் ஒரு வைஷ்ணவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசை கொண்ட குமுதவல்லி, ஒருமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு,
“அதெல்லாம் சரி, நான் உங்களைத் திருமணம் செய்ய வேண்டுமானால்.....”
இழுப்பதைப் பார்த்த பரகாலன் சிறிதே தடுமாறி,
“நீங்கள் என்ன நிபந்தனை போட்டாலும் சம்மதம், அதற்கு நான் தயார்,” என்கிறார்.
“நீங்கள் பஞ்சசம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும், இதுதான் நிபந்தனை,’ என்கிறார் குமுதவல்லி அம்மையார்.
’அப்படி என்றால்.....”,
பரகாலன். இவரோ அந்தணர் அல்ல, அதனால் பஞ்ச ஸ்ம்ஸ்காரம் என்றால்
என்ன என்பது இவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
அதுசரி எத்தனை அந்தணருக்குத் தெரியுங்கிறிஙகளா? அதுவும் சரிதான்.
பெருமாளின் திருஅடையாளங்களான சக்கரம் மற்றும் சங்கு ஆகியவற்றை தங்கள் தோளில் அணிவது, இறைவனின் பனிரெண்டு திருப்பெயர்களை சொல்லிக் கொண்டு பனிரெண்டு இடங்களில் திருமண் அணிதல், தன்னுடைய பெயரை பெருமானின் அல்லது ஆசாரியன் பெயர்கள் ஏதாவது
ஒன்றை குருவின் மூலம் வைக்கப் பெறுதல், மறைபொருளை குருவின் மூலம் காதில் உப்தேசம் பெறுதல், திருவாராதனை செய்யும் முறைகளை முறையாகக் கற்றுக் கொள்ளல்
என்பதே இந்த பஞச ஸ்ம்ஸ்காரம் ஆகும். இப்படிச் செய்தால் ஒருவர் வைஷ்ணவர் என்று பொருள்.
பரகாலனோ அந்தணர் அல்லாதவர்.அவ்ருக்கு யார் இந்த பஞசஸ்ம்ஸ்காரம் செய்து வைப்பார்கள்?
எங்கெங்கோ தேடினார், யாராவது தனக்கு பஞசஸ்ம்ஸ்காரம் செய்து வைப்பார்களா என்று!
ஒருவரும் தயாரில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை?
ஆண்டவன் தானே இந்த விளையாடளை ஆரம்பித்து வைத்தான், அதனால் அவனே தான் இதையும் முடிக்க வேண்டும்.
பார்த்தார், ஆம், அவரையே குருவாகத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானித்து விட்டார்.
திருநரையூர் பெருமானிடம் விண்ணப்பித்தார்,  தனக்கு பஞ்சஸ்ம்ஸ்காரம் செய்து வைககவேண்டும் என.
இறைவனே பஞ்சஸ்ம்ஸ்காரம் செய்து வைத்து ஒரு ரெக்கார்டு உண்டாக்கிவிட்டார் என்றால் பார்த்துக்   கொள்ளுங்கள்
”நீங்கள் சொன்ன மாதிரி நான் அந்தணர் ஆகி விட்டேன், இப்போது திருமணம் செய்து கொள்ளத் தடையில்லையே?”,
மீண்டும் போய் குமுதவல்லியிடம் முறையிட்டார்.
’அதெல்லாம் சரி, இப்போது நீங்கள் ஒரு வருஷத்திற்கு ஆயிரெத்தெட்டு அந்தணர்களுக்கு தினமும் உணவளிக்க வேண்டும், அப்போதுதான் நம் திருமணம்”.
புதிய நிபந்தனையைக் கேட்டு பரகாலன் அசரவில்லை.
“அதற்க்கென்ன செய்துவிட்டால் போயிற்று” என்றார்.
திருமணமும் இனிதாக நடைபெற்றது.
ஆனால்!!!!!!
ஒருத்தருக்கு சாப்பாடு போடுவதே சிரமம், அதுவும் ஆயிரத்தெட்டு பேருக்கு,அதுவும் ஒரு
வருஷத்துக்கு!!!!
முடியுமா?
முடியவில்லை.
தன் செல்வம் கரைந்தது. மன்னனுக்கு கப்பம் கட்ட முடியவில்லை.
பார்த்தார், மன்னன்.  பரகாலனுடன் போரிட்டு அவ்ரைச் சிறை வைத்தார். திரையைக் கொடுக்கிறேன்,
மந்திரியை என்னுடன் காஞ்சீபுரம் அனுப்புங்கள், அங்கு உஙகள் திரையை கொடுக்கிறேன், என்று
மந்திரியைக் வேகவதி ஆற்றின் கரையில் கிடைத்த புதையிலில் ஒரு பகுதியை கப்பமாகக்
கொடுத்து மீதியை அன்னதானத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்.
மீண்டும் பணத்தட்டுப்பாடு.
வெறும் கையால் முழம்போடமுடியுமா?
பார்த்தார், நாலு பேருக்கு நல்லது செய்ய, என்ன செய்தாலும் தகும் என்று ஒரு விதியை சாக்காகக்
கொண்டு வழிப்பறி செய்யத் துவங்கினார்.
அந்த காலத்து ‘ராபின்குட்’ ஆனார்.
செல்வம் உள்ளவர்களை வழிமறித்து, அந்தப் பணத்தில் இருந்து ஏழை அந்தனர்களுக்கு
அன்னமிட்டார்.
விதி யாரையும் விடாது!!
ஆனால் விதியை மாற்றும் சக்தி அவன் ஒருவனுக்கு மட்டும் தான் உண்டு.
பார்த்தான் இறைவன், இவரை ஆட்கொள்ள நேரம் வந்துவிட்டது என, மாறுவேடம் பூண்டு
இறைவனும், இறைவியுமாக மணக்கோலம் பூண்டு எல்லா ஆபரணங்களோடும் திருமணங்கொல்லை
கானகத்தின் வழியே ஆடல் பாடல் இசைக்க செல்கிறான்.
பார்த்தான் பரகாலனும் அவன் கூட்டாளிகளும். நல்ல வேட்டை.
மணமக்களிடமிருந்து எல்லா ஆபரண்ங்களையும் கழட்டச் சொன்னான். பகவான் காலில் இருந்த
மெட்டியை தன் வாயால் கடித்து கழற்றி, நகை மூட்டைகளை கட்டி தூக்க, கனமாக இருந்ததால்
என்ன முயன்றும் முடியவில்லை.
பரகாலன், “என்ன மந்திரவாதியா நீ? என்ன மந்திரம் செய்தாய், இந்த சிறு மூட்டையைத்
தூக்க முடியவில்லை, அந்த மந்திரத்தை எனக்கும் சொல்”.
பரந்தாமன் புன் சிரிப்புடன், “நம் கலியா, அருகில் வா, அந்த மந்திரத்தை உனக்கும் சொல்கிறேன்”,
என்று அருகில் அழைத்து, காதில், “ஓம் நமோ நாராயணாய” என்ற அஷ்டாக்‌ஷர மந்திரத்தை
ஒத, பரகாலன் அப்போதுதான், வந்திருப்பது மானிடன் அல்ல, தன்னை ஆட்கொள்ள் வந்த
பரமன் என்று புரிந்து கொண்டான்.
இறைவன் மீதான பக்தி வெள்ளம் தன்னுள்ளே பாய, பரகால்ன்,
”வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
     பெருந்துயர் இடும்பையில் பிறந்து
 கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
       அவர்தம் கலவியே கருதி
 ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
       உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
 நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
        நாராயணா என்னும் நாமம்”
என்று பாடத் துவஙகினார்.
அத்துடன் நிறுத்திக் கொண்டாரா? இல்லை! பெரிய திருமொழி என்ற வகையில் சுமார் 1100 பாசுரங்களுக்கு
மேல் பாடியுள்ளார். இது போக திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல்,
திருவெழுகூற்றிருக்கை பொரவற்றை பாடியுள்ளார். இதுமட்டுமா! இவர் போகாத ஊர் இல்லை.
தன் ஆடல்மா குதிரையின் மீது ஏறி எல்லா திவ்யதேசங்களையும் பற்றி பாசுரங்கள் இயற்றியுள்ளர்.
  குலம்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
  நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
  வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
   நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
 என்று நாராயனா என்ற சொல் என்னன செய்யும் என்பதை இந்தப் பாசுரத்தில்
சொல்கிறார்.
மாமிசம், எலும்பு, உரோமம் இவைகளால் செய்யப்பட்டு ஒன்பது வாசல் கொண்ட
இந்த சரீரம் விட்டு உயிர் பிரியும் போது உன்னைச் சரண் அடைய் வெண்டும் என்கிறார்.
    ஊனிடை சுவர்வைத்து என்பு தூண் நாட்டி
        உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
      தானுடைக் குரம்பை பிரியும்பொது உன்றன்
        சரணமே சரணம் என்றிருந்தேன்
திருமங்கையாழ்வாரின் எழுகூற்றிருக்கை என்பது கடினமான பாட்டமைப்பு கொண்டது. ஏழு அறையாக்கி
சிறுமிகளின் பாண்டியாட்டம் போல கட்டம் வைத்து புகுந்து வெளிப்படும் அமைப்பு ஆகும். ஒன்றிலிருந்து
ஏழு வரை சொற்கள் ஏறியும் இறக்கியும் சொற்கள் அமைக்கப்படும். இதனை சித்திரக் கவி என்றும்
சொல்வார்கள். இதனை கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு என எழுதினார் என்றும் சொல்வார்கள்.
பல திருக்கோயில்களுக்குச் சென்று அவற்றை செப்பனிட்டு இருக்கிறார். திருவரங்கத்தில்
ஏழு பிரகாரம் உள்ளது. அதில் நான்காவது பிரகாரம் ஆலிநாடன் திருச்சுற்று என்று திருமங்கை
ஆழ்வார் பெயரில் உள்ளது என்றால் இவருடைய பெருமையைப் பாருங்கள்
திருவரஙத்தைப் பற்றி 73 பாசுரங்கள் பாடியுள்ளார். ரங்கனைப் பற்றி மிக அதிகமான் பாசுரங்கள் பாடியவர் என்றும்
சொல்லலாம். திருவரங்கத்தில் வைகுந்த ஏகாதசி உத்சவம் 21 நாட்கள் நடைபெறும், அதனை
முதன்முதலாக ஆரம்பித்து வைத்தவர் திருமஙகை மன்னன் தான். ஒவ்வொரு ஆழ்வாரகளும்
தனித்தனியான வகையில் சிறப்புப் பெற்றவர்கள், அதாவது பெரியாழ்வார், ஆண்டாள் போன்றவகள்
கண்ணனைப் பற்றி அதிகமாகப் பாடியுள்ளார்கள். குலசேகர ஆழ்வார் ராமனைப் பற்றி அதிகமாகப்
பாடியுள்ளார்கள். அதேபோல திருமஙகை ஆழ்வார் அர்ச்சாவதரத்தைப் பற்றி அதிகமான் பாசுரங்களை
இயற்றியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தைப் பற்றியும், திருமங்கை மன்னனைப் பற்றியும் நிறைய எழுதலாம், நேரம்
வரும்போது மீண்டும் எழுதுவோம்.

புதன், 31 அக்டோபர், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-15. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!! ஆண்டள்

ஆண்டாள்



ஸ்ரீரஙகம் ஏன் என்ற பகுதியில்,ஸ்ரீரங்கம் பற்றியும் அந்த ஊர் ஏன் மற்ற ஊர்களை விட சிறந்தது என்பதைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் அரஙக்னை பற்றி ஆழ்வார்கள் பலரும் பாடியுள்ளதில் இதுவரை பார்த்துள்ளோம். இதில் அடுத்து!!!
எத்தனை ஆழ்வார்கள்! பனிரெண்டு ஆழ்வார்கள்! அதில் பதினோரு பேர், 
ஆன்மிகத்தில் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த சமயத்தில் அவர்களுக்கு இடையே  பெண்ணாகப் பிறந்து, அவர்களுக்கு இணையாக, ஏன் அவர்களை விட ஓரு படி மேல்  போய் அரங்கனையே தன் கணவனாக ஆக்கிக் கொண்டவள். அரங்கனுக்காக பல 
பாசுரங்களைப் பாடியுள்ளவர். அவரைப் பற்றித்தான் இந்த ’அரங்கனை ஆராதித்த  ஆழ்வார்கள்’  பகுதியில் பார்ப்போம்.
"கோதை" என்றும், "நாச்சியார்" என்றும்,"சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" என்றும் பல  பெயர்களைப் பெற்றவர் தான் நாம் பார்க்கப்போகும் ஆழ்வார்.
பூமிப் பிராட்டியின் அவதாரமாகவே இவரைக் கொண்டாடுகிறோம்.
ஒரு பிளாஷ்பேக்!!!!
சுயம்புமனு படைப்புத் தொழிலை ஆரம்பிக்கிறான். படைத்தவற்றை எங்கே வைப்பது?
பெருமானை நோக்கி கேட்கிறான், காரணம் பூமியை இரண்யாட்சன் மடித்து கடலுக்குள் மறைத்து விடுகிறான். நாராயணன் வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை எடுத்து வந்து தன் இடது மடியில் வைத்து, பார்க்கிறார். ( சென்னைக்கு அருகில் திருவிடவெந்தை பிரான் 
கோயில் உள்ளது )
பூமாதேவி நடுங்கிக் கொண்டிருக்கிறாள்.
"ஏன் நடுங்குகிறாய், தேவி" 
பிரான் தேவியைப் பார்த்துக் கேக்கிறான்.
"என்னை ரக்ஷித்து விட்டீர்கள், ஆனால் நமது குழந்தைகளை யார் ரக்ஷிப்பார்கள்?
அதனால்தான் நடுங்கிக் கொண்டிருக்கிறேன்" என்கிறாள் தேவி. 
"அவர்களுக்கு ஏது உபாயம் என்று தெரியாமல் சம்சாரத்தில் தவிக்கிறார்கள்" என்கிறாள் தேவி. 
"அவர்களால் பக்தி, கர்ம ஞானம் போன்றவைகள் அவர்களுக்குத் தெரியாது".என்கிறாள் தேவி.
"வாயால் என் நாமத்தைச் சொல்லச் சொல்லு, மனத்தால் என்னை நினைக்கச் சொல்லு, கைகளால் தூய மலர்களால் அர்சிக்கச் சொல்லு, அவர்களை நான் ரக்ஷிக்கிறேன்", 
பகவான் சொல்கிறார் தேவியிடம்.
உடன் நினைத்தாள் தேவி, கீழே இறங்குவது என்று
" இன்றோ  திருவாடிப் பூரம், எமக்காகவன்றோ 
    இங்காண்டாள வதரித்தாள்-குன்றாத 
 வாழ்வான வைகுந்தவான் போகந்தன்னை 
    யிகழ்ந்து   ஆழ்வார் திருமகளாராய்
என்று சுகமான வைகுந்தத்தை விட்டு, நமக்காக வையகத்தில் விஷ்ணு சித்தர் மகளாக  வந்து பிறந்தாள்.
பூமிப்பிராட்டியின் அம்சமாக ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வாருடைய துளசி தோட்டத்தில் 



திருத்துழாய் செடியின் கீழ் அவதரித்தாள். கோதை என்று திருநாமம் சூட்டி,  அக்குழந்தையை சீராட்டி பாலூட்டி வளர்த்து, பரம ஞானத்தையும் வளர்த்து வந்தார் .
தன் இளம் பிராயத்திலேயே. ஆண்டாள் அரங்கனுக்கு என பத்துப் பாசுரங்களைப் பாடியுள்ளார். சிலர் திருப்பாவை முப்பது பாசுரஙக்ளூம் அரஙகனுக்கு என்று சொல்பவர்களும் உண்டு.அதைப் பற்றி
பின்னர் பார்ப்போம். எல்லா ஆழ்வார்களும் சேர்ந்து என்ன சாதித்து இருப்பார்களோ அதனை சிறு வயதிலேயே சாதித்தவர் ஆண்டாள். திருப்பாவை தெரியாதவர்கள் இந்த அவனியில் யாரும் 
கிடையாது. ஆண்டாளின், திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி என்ற இரண்டும் முதலாயிரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவளைச் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்பார்கள்.
சிறு வயது முதற்கொண்டு கண்ணனே என உறுதி கொண்டு,
அவனுக்கு என, தன் தகப்பனார், பெரியாழ்வார், பகபானுக்கு என்ன வந்துவிடுமோ என்று எப்போதும் நினைக்கும் இவர்,
வடபெருங்கோயில் பெருமானுக்கு என கட்டிய புஷ்ப மாலையை, தானே சூட்டிக் கொண்டு,  நாம் கண்ணாடியில் பார்ப்பது போலே, தன் வீட்டில் உள்ள கினற்றில் அழகு பார்த்துக்  கொள்வாள். அலஙாரம் தனக்கு என சூட்டிக் கொள்வதில்லை,
இவை எல்லாம் கண்ணனுக்கு என்பதில் உறுதி பூண்டிருந்தாள். 
“எந்த திவ்யதேசப் பெருமாளை உன் மனதில் கொண்டுள்ளாய்” என்று பெரியாழ்வார்  கேப்பதற்கு
“மானிடருக்கு என பேச்சுப்படில் வாழ்கில்லேன் மன்மதனே” 
என்று தன் தகப்பனாருக்கு பதில் கூறுகிறாள். 
”ஆண்டாளை அழைத்து வா”, என்று பெருமாளும் ஆணையிட,ஆழ்வாரும் மூடு பல்லக்கில்  ஆண்டாளை ஸ்ரீரஙத்துக்கு அழைத்து வர, கர்ப்ப கிரகத்தின் அருகே அழைத்து கொண்டு வந்து நிறுத்தினார்.
திருமணத்திருவாசல் அருகே சென்று திருக்கமலப் பாதத்தை தொட அப்போதே ஆண்டாளும் பரம பதத்திற்கு சென்று விடுகிறாள் என்பது தான் ஆண்டாள் திருக்கல்யாணம் ஆகும்.
ஒரு பெண்ணால் தான் இத்தனை நளினமான விஷயங்களை வெளிப்படுத்த முடியும் என்பதனை ஆண்டாளின் பாசுரங்களிள்
பார்க்கலாம்.
               அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரிதெழுந்த என் தடமுலைகள்
             துவரை பிரானுக்கென்ற சஙக்ற்பித்துத் தொழுது வைத்தேன்
என்று நளினமான விஷயங்களை ஆண்டாள் வெளிப்படுத்துகிறார்.
ஆண்டாளின் திருப்பாவையை, “சங்கத்தமிழ்மாலை” என்றும் சொல்வார்கள்.
கண்ணனை வணங்கிய பெண்ணாகத் தன்னை பாவித்துக் கொண்டு, ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகக் நினைத்துக் கொண்டு, வடபெருங்கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும்
நினைத்து அதில் உள்ள தெய்வத்தை கிருஷ்ணனாகவும் பாவித்து அந்தப் பெண்கள் செய்த நோன்பினை ஆண்டாள் செய்துள்ளார்.
ஆண்டாளின் திருப்பாவையில், நோன்பிற்க்காக செய்யும் காரியங்கள், மழை எப்படிப் பெய்கிறது என்பதை விளக்குவது, வடமதுரை மன்னனை வாயினால் பாடி, மனதினால் சிந்தித்தால் முன்னர் செய்த பாவங்களும், வரப் போகிற பாவங்களும் நெருப்பில் இட்ட தூசி போல ஒழியும் 
என்று சொல்கிற இடத்திலும், அதிகாலையில் நிகழ்கிற சப்தங்களை சொல்வதிலும், தோழி தூங்குவதை கும்பகர்ணனுக்கு ஒப்பிடுவதிலும், இந்த முப்பது பாசுங்களையும் பாடுவர்களுக்கு கிடக்கும் பலன்களை சொல்லுவதிலும் ஆண்டாளுக்கு இணையாக யாரையும் ஒப்பிடமுடியாது.

ஆண்டாள் பெண்கள் போகப் பொருள் அல்ல,பகவானை எழுப்பி அவனை அடையலாம் என்பதை உணர்த்துகிறார்.
தன் 142 பாசுரஙகள் கொண்ட ‘நாச்சியார் திருமொழி’ யில் ஒரு பெண் தன் காதலனை அடைய செய்ய வேண்டிய பிராத்தனைகள், குட்டி தெய்வங்களிடம் வேண்டுதல், இயற்கையிடம் வேண்டுதல், பறவைகளிடம் வேண்டுதல், ’திருமாலை’யே தன் மணவாளனாகத் தேர்ந்தெடுத்து அவனேயே  மணமுடிப்பதை ‘வாரணமாயிரம்’ என்ற பாசுரஙகளின் வாயிலாக வெளிப்படுத்தும் விதம் போன்றவை ஒரு மானிடப்பெண்ணிடம் இருக்குமா என்று சந்தேகப்படும்படி செய்துவிடுகிறார்.
திருவரங்கனை தன்னுடைய இன்தமிழால், ’செங்கோலுடைய திருவரங்கச் செல்வன்’ என்றும்,
‘நளிர் அரங்க நாகனையான்’ என்றும், ‘என்னமுதர்’ என்றும் பலவாறாக நாச்சியார் திருமொழியில் விளக்குகிறார்.
அரங்கனுக்கு என 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.

சனி, 25 ஆகஸ்ட், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-14. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!


அரங்கன் 
கருட வாகனம் கேள்விப் பட்டுள்ளோம், ரங்கநாதன் மாசி மாதம்
கருட வகனத்தில் வருவதைக் காண எல்லா ஊர்களிலும் இருந்து பார்க்க
வருவார்கள். "மாசிக் கருடன் காசிக்குப் போனாலும் கிடைக்காது" ன்னு
ஒரு பழமொழி கூட உண்டு. எதனால அப்படி ஒரு பழமொழின்னு தெரியலே
கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அரங்கனை யானை வாகனத்தில் பார்க்க வேண்டுமே? நிஜ யானையில்
வருவது போலவே இருக்கும். யானை வாஹனம் புறப்பட்டுவிட்டால்
எவ்வளவு வேகம்  தெரியுமா? வாயு வேகம், மனோ வேகம் போல அவ்வளவு
வேகத்தில் சென்று நிலைக்குத் வந்து விடுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
கொஞ்சம் சுணங்கினாலும் போச்சு, 
இது போல பெருமாளுக்கு பல வாகனங்கள். எல்லா வாகனங்களும் ஒன்றுக்கொன்று விசேஷம். தான்.
அப்படி முனிவாகனம்-ன்னு கேள்விப்பட்டுள்ளீர்களா?
அதேன்ன புதுசா சொல்றே?-ன்னு சொல்றது கேட்குது.
ஆமாங்க, அது ஒரு தனிக்கதைங்க!!!
என்னது, அரங்கனை ஆராதித்த ஆழ்வார்கள்-ன்னு தலைப்புப்
போட்டுட்டு கதைங்கர.
ஆமாம், இந்தக் கதையே ஒரு ஆழ்வாரைப் பத்திதான்.
சரி,அந்தக்கதையச், சொல்லு, சொல்லு, கேப்போம்.
சொல்றேன்!!!!
லோக சாரங்க முனிவர்ன்னு ஒருத்தர் ஸ்ரீரங்கத்தில் பெருமாளுக்கு கைகங்கர்யம் செய்து கொண்டு இருந்தார். இவர் பெருந்தன அர்ச்சகர், அதனாலே இவர் வெச்சதுதானே  சட்டமாக இருக்கணும்!
தினப்படி பெருமாளுக்கு திருமஞ்சன தீர்த்தம் அம்மா மண்டபம் காவிரியில் இருந்து  கொண்டு வருவது இவரின் முக்கிய கைங்கங்கர்யம்.
இப்படித்தான் ஒருநாள்!!!!
"கதிரவன் குணதிசை வந்தனைந்தான் கனவிருள் அகன்றது காலையம்பொழுதாய்"
என்பதுபோல சூரியன் உதயமாகும் போது, காவிரிக் கரைக்கு குடத்துடன் லோக சாரங்க  முனிவர் வருகிறார்.
ஸ்ரீரங்கம் அருகில் உள்ள உறையூரில் வாழ்ந்து வந்தவர், பாணர் குலத்தில் பிறந்ததனால்  பாணர் என்று பெயர் பெற்று, அரங்கனைப் பற்றிப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். தன் கையில் வீணையைக் கையில் வைத்துக் கொண்டு பண் இசைப்பதில் வல்லவர்,
தான் தாழ்ந்த குலத்தில் பிறந்தபடியால் ஸ்ரீரங்கத்தின் மண்ணை மிதிக்க மாட்டேன்  என்ற வைராக்கியத்துடன் காவிரிக் கரையில் நின்று கொண்டு அரங்கனைப் பற்றி  தன்னை மறந்த நிலையில் பாடிக் கொண்டிருந்தார்.
தன் முன்னே யார் இருக்கிறார்கள் என்பதை அறியாததால், லோக சாரங்க முனிவர்  வந்ததை இவர் அறியவில்லை.
அவரை தினப்படி பார்க்கும் முனிவருக்கு இவர் பெயர் நன்ராகத் தெரிந்ததால்,
குறுக்கே நின்று கொண்டிருக்கும்  பாணனைப் பார்த்து,
"அடேய், பாணா, என்ன குறுக்கே நின்று கொண்டு இருக்கிறாய், விலகி நில்லு"
அரங்கனை தவிர வேறொன்றும் பாணன் காதில் விழாததால்,
"அரங்கனுக்கு எடுத்துச் செல்லும் குடத்தை விடப் போகிறாயா, இல்லையா?"
ஹு,ஹு, ஒண்ணும் காதில் விழவில்லை
இவன் கவனத்தை எப்படி திருத்துவது? யோசித்தார், அவனைத் தொடமுடியாது, தொட்டால் தீட்டாகிவிடும்  
முனிவர். சுற்றுமுற்றும் பார்த்தார், ஆற்றில் கிடந்த சிறு கல்லை எடுத்தார், பாணன்  மீது எறிந்தார். பாணன் முகத்தில் சரியாக, நெத்தியடி என்பார்களே அதுபோல் சரியாக  நெற்றியில் பட, ரத்தம் பீறிட்டு வருகிறது.
அப்போதுதான் தன் நிலைக்கு வந்தான் பாணன். அபசாராம் செய்துவிட்டோம் என்று  நினைத்து அவரிடம் மன்னிப்புக் கேட்டு அவருக்கு வழிவிட்டான்  பாணன். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் அரங்கன்.
"என்ன கருட சந்நிதி எவ்வளவு நாழி ஆகியும் திறக்கப் படவில்லை"
என்று மனதில் நினைத்துக் கொண்டே, பெருமாள் சந்நிதியும் திறக்க படாததைப்  பார்த்த, சாரங்க முனிவர், தான் ஏதோ பெருமாளிடம் அபசாரப்பட்டு விட்டோம் என்பதை  உணர்ந்து கொண்டார்.
என்று இரவு முனிவரின் கனவில்,
"முனிவரே, நீர் அபசாரம் செய்து விட்டீர், நம் பாணனை கல்லால் அடித்துத்
துன்புறுத்தி விட்டீர், முதல் வேலையாக நாளைக்கு பாணனை உம் தோளில் மேல்  எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வாரும்"
என்று ஆணை இடுகிறான் பெருமான்.
மறுநாள் முதல்வேலையாக காவிரிக் கரையில் பாணனைத் தேடுகிறார். அவரை வணங்கி
"தாங்கள் கோவிலுக்கு வர வேண்டும்" என்கிறார்.
"அடியேன் திருவரங்கத்து மண்ணைத் தீண்ட மாட்டேன், தயவு செய்து மன்னிக்கவும்"
இது பாணனின் கூற்று.
"தேவரீர் திருவடி திருவரங்கத்து மண்ணைத் தீண்டாமல் அடியேன் தங்களை
என் தோளின் மேல் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு திருவரங்கனை சேவிக்கலாம்".
லோகசாரங்க முனிவர் பாணனிடம் மன்றாடுகிறார்.
எவ்வளவு தடுத்தும் கேட்காததால், வேறு வழியின்றி, பாணனும் லோகசாரங்க முனிவர் தோள் மீது ஏறிக் கொண்டு, முனிவர் வழி நடத்த, கர்ப்பகிரகம் அடைகிறார்.
பெருமாளும் தன் திவ்ய மங்கள சொருபத்தை ஆழ்வாருக்கு காட்டி அருளுகிறான்.
அதைக் கண்ட பாணனும், பெருமானின் அங்கங்களை ஒவ்வொன்றாக அனுபவித்துப் பாடுகிறார். திருக்கண்கள் முதல் திருவடி வரை ஒவ்வொரு பாசுரத்தாலும் வர்ணித்து பத்து பாசுரங்கள் கொண்ட "அமலாநிதிபிரான்" என்ற பிரபந்தத்தை, பெருமானுக்கு  சமர்ப்பிக்கிறார். இறுதியில்
"என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா" என்று சொல்லி அரங்கனுடன்  சேருகிறார்.
ஆக முனிவரை வாகனமாகக் கொண்டதால் திருப்பாணாழ்வாருக்கு "முனிவாஹனர்"
என்ற பட்டப்பெயறும் உண்டு
திருப்பாணாழ்வார் 

முனிவர் தோளில்  திருப்பாணாழ்வார் 
நன்றி: http://madhavipanthal.blogspot.in

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-13 அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!


  
நாமங்களின் மகிமையைப் பாடியவர். நாமங்கள் ஒருவனை நரகத்துக்கு செலுத்தாது  என்பதில் கருத்து வேறுபாடு இல்லாதவர்.
அவனின் திருநாமங்களைச் சொன்னால், நமனின் தலையில் வைத்து நடக்கலாம் என்று உறுதியாக இருந்தவர். அவனின் நாமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தால், அரங்கன் கேட்டபோது சொர்க்கம் கூட வேண்டாம், இங்கேயே இருந்து விடுகிறேன் என்று உறுதியாக  நம்பியவர்.
ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதாகக் கொண்டால் பாதி ஆண்டுகள் பசி, பிணி, மூப்பு, துன்பம், இளமை பாலகன் போன்று இவற்றிலேயே கழிந்து விடும் என்பதை உணருங்கள்
என்று நம்மைப் பார்த்து அடிக்காத குறையாகச் சொன்னவர்.
தன்னுடைய வாழ்க்கையைப் பார்த்தாவது அப்படி நடக்காமல் திருத்திக் கொள்ளுங்கள்  என்று நமக்கு உபதேசம் செய்தவர்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அவரின் பெருமையை!!
யார்ரையா அவர்?
கேட்பது காதில் வழிகிறது எனக்கு!
முதலில் அவரின் வாழ்க்கையைப் பாருங்கள்! உங்களுக்கே அவர் யார் என்று தெரிந்துவிடும்!
      திருமண்டங்குடி, கும்பகோணத்துக்கு அருகில் உள்ள ஊர். "விப்ரநாராயனர்" என்று பெயர் சூட்டி, அவருடைய பெற்றோர் அவரை வேதங்களையும் அதன் அங்கங்களையும் கற்பித்தனர்.
கண்டவர் தம் மனத்தையும் அழகையும் கவரும் அரங்கனின் அழகை தரிசித்து, அவனுக்குத்  தொண்டு புரிவதே தான் வாழ்நாளின் லட்சியம் என்று வாழ்ந்து வந்தவர்.
அவனுக்காகத் தோட்டம் அமைத்து, மாலை கட்டி, சூட்டி மகிழ்ந்து வாழ்க்கையைக் கழித்து வந்தார்.
அரங்கன் விளையாட நினைத்தால் யார் என்ன செய்ய முடியும்?
 திருக்கரம்பனூர் என்ற (தற்போதைய உத்தமர் கோயில்) ஊரில் வசித்து வந்த தேவதாசி, தேவதேவி, தன்னுடைய தோழி மற்றும் தான் தமக்கையுடன் உறையூர் மன்னனை தரிசித்துவிட்டு திரும்பும் வழியில், விப்ர நாராயணர் தோட்டத்தின் வழியாகச் செல்ல நேரிடுகிறது.
"எவ்வளவு அழகான தோட்டத்துக்குச் சொந்தமானவர் யாரோ?"
என்று தன் தமக்கையிடம் கேட்கிறாள்.
தூரத்தில் ஏதும் நடக்காதது போலே விப்ரநாராயணர் பூக்களை பறித்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வளவு அழகான தன்னை, தன்னுடைய அழகில் இறுமாப்புக் கொண்டிருந்த தேவதேவி,
"என்னுடைய அழகில் மயங்காத இவர் யார்? இவர் என்ன பித்தரா?"
என்று தன் தமக்கையிடம் கேட்கிறாள்.
" இவர் பித்தர் அல்ல, திருவரங்கனின் தொண்டர். அவனைத் தவிர ஒருவரையும் ஏறெடுத்துப்  பார்க்கமாட்டார். இவரிடம் உன் அழகு ஒன்றும் செய்யாது."
தமக்கை சொல்கிறாள்.
கர்வம் கொண்ட தேவதேவி,
"அப்படியா, பார்த்து விடுகிறேன். இவரை என் அழகுக்கு மயங்க வைத்து, என்னுடைய  அடிமை ஆக்கி விடாவிட்டால் என் பெயர் தேவதேவி அல்ல"
சபதம் இடுகிறாள் தேவதேவி.
அரங்கன் இந்த நாடகத்தைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.
தன்னுடைய நாடகத்தை நடத்த துவங்குகிறான்.
மறுநாளே தன்னுடைய கோலத்தை சாத்விகமாக மாற்றிக் கொண்டு, விப்ரநாராயணர்  திருவடிகளை வணங்கி,
"நான் ஒரு தேவதாசி, என்னுடைய வாழ்க்கையை வீணடித்துவிட்டேன்.
உங்களைப் பார்த்த பின் உங்கள் அடிமையாக இருக்க ஆசைப் படுகிறேன். என்னை உங்கள்  அடிமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு சேவை செய்வதே  என்னுடைய  பாவங்களைப் போக்கும், என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்"
என்று மன்றாடுகிறாள்.
எவ்வளவோ சொல்லியும் தேவதவி கேட்காததால், வேறு வழியின்றி,
"என்னுடைய ஆசிரமத்துக்கு வெளியே இருந்து தோட்டத்தை கவனித்துக்கொள்"
என்று அனுமதித்தார்.
காலங்கள் ஓடின!!
ஒருநாள்!!!
மழை! ஊழி மழை! நிற்கிற வழியாகக் காணோம்.
ஆசிரமத்துக்கு வெளியே மழையில் நனைந்தபடி, தோட்டத்தில் நின்று கொண்டிருந்த  தேவதேவியை பார்க்கிறார்.
"ஆசிரமத்துக்கு உள்ளே வா, இந்த ஆடைகளை உடுத்திக் கொள்"
விப்ரநாராயணர் ஆணையிடுகிறார்.
"இதுக்குத் தானே இத்தனை நாட்கள் காத்துக் கொண்டிருந்தேன்",
என்று நினைத்த தேவதேவி, ஆடைகளை தரித்துக் கொண்டு,
விப்ரநாராயணர் திருவடிகளை வருட, காமதேவன் வசப படுகிறார்.
தான் எதுக்காக வந்தோம் என்பதை மறந்து, சிற்றின்பத்தில் ஈடுபடுகிறார்.
தோட்டத்தை மறந்தார், தேவதேவியே எல்லாம் என்று நினைத்து
காலத்தைக் கழிக்கிறார். அனைத்துச் செல்வங்களையும் இழந்த நிலையில்,
"இனி உனக்கு இங்கு இடமில்லை, வெள்யே போ"
திண்ணைக்கு விரட்டி விடுகிறாள் தேவதேவி.
இத்தனையும் காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்த அரங்கனின் துணைவி, நாச்சியார்,
"விளையாடியது போதும், நம் பக்தனை மீண்டும் நம் தொண்டுக்கு கொண்டு
வாருங்கள்"
என்று அரங்கனுக்கு ஆணையிடுகிறாள்.
நாச்சியார் கடாட்சம் இருந்தால் அதற்குப் பிறகு, "மறு வார்த்தை ஏது? இப்போதே அதற்கு வேண்டியதைச் செய்வோம்" என்று அரங்கனும், தன்னுடைய தங்க வட்டில் ஒன்றை  எடுத்துக் கொண்டு சிறுவன் வடிவில் தேவதேவியிடம் சென்று,
" நான் விப்ரநாராயணனின் தூதன், அவர் இந்த வட்டிலை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்"
என்று வட்டிலை கொடுக்கிறார்.
மறுநாள் கோயிலில் வட்டிலைக் காணாமல், அரசன் பரிஜாதகர், மற்றும் காவலாளிகளைத் தண்டித்தான். அவ்வழியே வந்த தேவதேவியின் தோழி என்ன நடக்கிறது என்பதை  விசாரித்து,
"தங்க வட்டில் தேவதேவியின் தலையணைக்கு அருகில் உள்ளது, இவர்களை
தண்டிக்காதிர்கள்" என்று அரசனிடம் தெரிவிக்கிறாள். உடன் அரசன் தேவதேவியை விசாரிக்க
"விப்ரநாராயணர் தான் அவருடைய தூதன் மூலம் கொடுத்தனுப்பினார்"
என்று அவரைக் காண்பிக்கிறாள்.
"எனக்கு தூதனே கிடையாது"
என்று எத்தனை முறை மன்றாடியும் அரசன் கேட்காமல், விப்ரநாராயணரை சிறையில் அடைத்து  விடுகிறான்.
அன்று இரவில் அரசன் கனவில் அரங்கன் தோன்றி, உண்மையைக் கூறி,
"விப்ரநாராயணர் குற்றமற்றவர், அவரை விடுவித்துவிடு"
என்று தன்னுடைய நாடகத்தைக் கூறி அவரை விடுவிக்கிறான்.
சம்சாரத்தின் தாழ்ச்சியையும், பெருமானின் கருணையையும் உணர்ந்த விப்ரநாராயணர், அதற்கு பிராயச்சித்தமாக தொண்டர்களின் பாததூளியையும், ஸ்ரீபாத தீர்த்தத்தையும்  கொண்டாடுகிறார்.
அதனால் "தொண்டரடிப்பொடி ஆழ்வார் " என்று பெயர் பெறுகிறார். தேவதேவியும் திருந்தி
கோவிலுக்கு தொண்டு புரிந்து தன் வாழ்நாளைக் கழிக்கிறாள்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார், அரங்கனைத் தவிர யாரையும் பாடாத்வர்.
அரங்கனுக்காக 45 பாசுரங்கள் கொண்ட "திருமாலை" பாசுரத்தைப் பாடியுள்ளார்.
தமிழில் அரங்கனுக்கு என "திருப்பள்ளியெழுச்சி" என்ற பாசுரம் பாடியுள்ளார்.
தமிழில் அதற்குப் பிறகுதான் பலரும் திருப்பள்ளியெழுச்சி பாடியுள்ளார்கள் என்றால்  தொண்டரடிபொடி ஆழ்வாரின் மகிமையின் வலிமையைப் பாருங்கள்.
வேறு எந்த அர்ச்சா ரூப பெருமானுக்கும் அமையாத விசேஷம் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள். திருமாலை அறியாதார் திருமாலையே அறியாதவர் என்ற ஒரு சொற்றொடர் கூட
வழக்கில் உள்ளது என்றால் இவருக்கு உள்ள மகிமையைப் பாருங்கள். 


திங்கள், 18 ஜூன், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-12. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!


பெரியாழ்வார்!!
பெரியாழ்வார்


திருவில்லிப்புத்தூர் என்னும் பாண்டிய நாட்டில் முகந்த பட்டர்
என்னும் சோழிய பிராமணர் இருந்தார். அவர் பதுமவல்லி என்னும்
பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது.
விஷ்ணுசித்தர் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.
இயல்பாகவே வாடா பெருங்கோவிலுடையானிடம் பக்தி கொண்டு இருந்தார்.அவருக்கு நந்தவனத்தில் இருந்து புஷ்பங்களைப் மாலையாகக் கட்டி பெருமானுக்குச் சாற்றுவதை  வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அந்தசமயத்தில் பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் ஓர் இரவு
நகர்வலம் வரும்போது  திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு
வழிபோக்கனைக்  கண்டான். அவனை எழுப்பி “நீ யார்?”  என்று கேட்டான்.
அந்தப் புதியவன் “ஐயா!  நான் ஒரு அந்தணன். கங்கையில் நீராடி
வருகிறேன்“ என்றான். மன்னன் அவனை “உனக்குத் தெரிந்த நீதி ஏதும்
உண்டாகில் சொல்“ என்று கேட்டான். அவனும் “மழைக்காலத்தின்
தேவையை மற்ற எட்டு மாதங்களில், இரவின் தேவையை பகலில்,
முதுமையின் தேவையை இளமையில்,  மறுமையின் தேவையை
இம்மையில் தேட முயற்சி செய்ய வேண்டும்“ என்றான். மன்னன்
மறுநாள் தன் குலகுருவான செல்வநம்பியிடம் இரவு நடந்தவை
சொல்லி “மறுமைக்காக நாம் செய்ய வேண்டிய முயற்சி என்ன?”  என்று கேட்டான்.
செல்வநம்பி “நாட்டின் சான்றோரைத் திரட்டி அவர் முன் இக்கேள்வியை
வைப்போம். சரியான விளக்கம் தருவோருக்கு தக்க பரிசாக பொற்கிழி
அளிப்போம்“ என்றான். மன்னனும் மிகுந்த பொற்காசுகளை கொண்ட
பொற்கிழியை ஒரு தோரணத்தில் கட்டி சான்றோரைத் திரட்ட
ஆணையிட்டான்.
ஸ்ரீவில்லிப்புத்தூரிலே பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய
எம்பெருமான் ஸ்ரீ வல்லபத்தேவன் அரசவையில் நடந்த விபரங்களைக்  கூறி
கிழியை அறுத்து வாவென்றார். இது இறைவன் ஆணை என மதுரைக்குப் புறப்பட்டார்.
மதுரையில் ஆன்றோர் நிரம்பிய மன்னனின் அவையை அடைந்தபோது
அரசனும் செல்வநம்பியும் அவரை வரவேற்று பணிந்தனர். அங்கிருந்த
மற்ற அறிஞர்கள் வேதங்களின் சாரம் அறியாதவரை வேந்தன்
வரவேற்பதா?  என்று சலசலத்தனர். ஆழ்வாரும் உண்மையான பரம்பொருள்
திருமாலே என்றும் வைஷ்ணவமே முக்தியளிக்கும்  மதம் என வேதத்தை எடுத்து உவமானம் கூற பொற்கிழி தானாகவே வளைந்து கொடுத்தது.
ஆழ்வாரும் வேந்தரும் மாந்தரும் வியக்க விரைந்து கிழியறுத்தார்.
இது கண்ட மன்னனும், நம்பியும், மற்றுள்ள ஆன்றோரும், மக்களும்
அவரைப் பணிந்தனர். மன்னன் இவருக்கு பட்டர்பிரான் என்ற விருது
கொடுத்து யானை மேலேற்றி “வேதப்பயன் கொள்ள வல்ல மெய்நாவன்
வந்தான்“ என்ற விருது ஊதச்செயது தானும் தன் பரிவாரங்களும்
உடன்வர நகர்வலம் வந்தான். இக்கோலகலத்தைக் காணுமாறு தன்
மக்களை அரசன் பணித்தபோது தன்னுடைய பக்தனின் மாட்சிமை காண
வந்தாற்போல் ஸ்ரீமன் நாராயணன் கருடன் மீதேறி, பிராட்டியருடன்,
தனக்குரிய ஆயுதங்கள் தரித்து, பிரம்மா ஆருத்ரன் மற்றும் இந்திரன்
முதலான தேவர்கள் துதிக்க காட்சி தந்தார்.






ஆழ்வார் எமபெருமானின் கண்ணுக்கினிய பேரழகைக் கண்டு மனமகிழ்ச்சி அடைந்தாலும், அவர் மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி, தான் அமர்ந்திருந்த யானையின் கழுத்து மணியைத் தாளமாகக் கொண்டு, “பல்லாண்டு  பல்லாண்டு பல்லாயிரமாண்டு பலகோடி நூறாயிரம்” என வாழ்த்தி திருப்பல்லாண்டு பாடி அருளினார்.
மன்னன் மற்றுள்ள பக்தர்களையும் தன்னோடு பாடச்செய்தார். இந்த திவ்ய தேசத்தில் விளைந்த இப்பல்லாண்டு தான் எல்லாத் தலங்களிலும் இறைவனுக்கு திருப்பல்லாண்டாக முதன் முதலில் பாடுவதாக  அமைந்து விட்டது. இவர் கண்ணனது திருஅவதாரச் செயல்களை போற்றி 44  திருமொழிகளாகப் பாடினார்.
இவற்றின் மொத்த பாசுரங்கள் 461 ஆகும். திருப்பல்லாண்டு பாசுரங்கள் 12 ஆகும்
மொத்தம் சேர்த்து 473 பாசுரங்கள். இவருடைய பாசுரங்கள்
பெரியாழ்வார் திருமொழி என்று அழைக்கப்பட்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தில்  முதலில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் பாடிய தலங்கள்
1. திருவரங்கம்
2. திருவெள்ளறை
3. திருப்பேர்நகர்
4.கும்பகோணம்
5. திருக்கண்ணபுரம்
6. திருச்சித்திரக்கூடம்
7. திருமாலிருஞ்சோலை
8. திருக்கோட்டியூர்
9. திருவில்லிப்புத்தூர்
10. திருக்குறுங்குடி
11. திரு வேங்கடம்
12. அயோத்தி
13. சாளக்கிராமம்
14. பத்ரிநாத்
15. தேவப்ரயாகை
16. துவாரகை
17. மதுரா
18. ஆய்ப்பாடி
19. திருப்பாற்கடல்
20. பரமபதம்.
 உபதேச ரத்தின மாலையில்,
                 உண்டோ திருப்பல்லானுக்கு ஒப்பதோர் கலை தான்?
      உண்டோ பெரியாழ்வார்க்கொப்பொருவர்?
                தண் தமிழ் நூல் செய்தருளுமாழ்வார்கள்
      தம்மில் அவர் செய்கலையில்
  பைதல் நெஞ்சே! நீ புணர்ந்து பார்
என்கிறார்.
அரங்கநாதன்

அரங்கனுக்கு என 35 பாசுரங்கள் பாடியுள்ளார். அரங்கனைக் கண்ணனாக நினைத்துக் கொண்டு பாடிய பாசுரங்கள் நிறைய. நமன் தன்னைப் பற்றும் போது, அரங்கனை நினைப்போமோ  இல்லையோ, அதனால் இப்போதே சொல்லி விட்டேன், அதனால் நீ என்னை மறக்காமல்  அந்த சமயம் அவனிடமிருந்து என்னைக்காக்க வேண்டும் என்று அரங்கனுக்கே அதிகாரம்
செய்கிறார்.