சனி, 18 ஜூன், 2011


குலசேகரஆழ்வார் பிறந்த ஊர் திருவஞ்சிக்களம் கேரளா.

குலசேகரஆழ்வார்


குலசேகர ஆழ்வார்- தொடர்ச்சி
அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?
அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்
"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்க‌நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

குலசேரகப்பெருமாள், பெருமாள் மீது பக்தி சொட்ட சொட்ட
பாடல்கள் பாடியுள்ளார்.
அவை "பெருமாள் திருமொழி" என்று அழைக்கப்படுகிறது.
105 பாசுர‌ங்கள் கொண்டதாகும் அது.
இதில் அரங்கனாதனைப் பற்றி முதல் திருவந்தாதியில்
பதினோரு பாசுரங்கள் பக்தி சொட்ட சொட்ட
பாடியுள்ளார் என்றால் பாருங்கள்.
இரண்டாம் திருவந்தாதியில் ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளார்.
மூன்றாம் திருவந்தாதியில் பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார்.

மேலும் கண்ணபிரானைப் பற்றி வடமொழியில் " முகுந்த மாலை" என்ற
பக்தி ரசம் சொட்டும் பாசுரங்களையும் பாடியுள்ளார்.
இதில் என்ன முக்கியமானது என்றால் வடமொழியில் பாசுரங்களை
இயற்றிய ஒரே ஆழ்வார் "குலசேகர ஆழ்வார்" மட்டுமே.
குலசேகர ஆழ்வாரை பெருமாள் அணியும் கௌஸ்துபம் என்ற மாலையின் அம்சமாகக் கருதுவார்கள்
குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்வசு நகஷ்த்திரத்தில்
திருவஞ்சிக்களம் என்ற‌
ஊரில் (கேரளாவில் திருச்சூருக்கு அருகாமையில் உள்ளது) பிறந்தார்.

மூன்றாம் திருமொழி.

1.மெய்யில் வாழ்க்கையை* மெய்யெனெக் கொள்ளும்* இவ்
வையம் தன்னோடும்* கூடுவது இல்லையான்*
ஐயனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டொழிந்தேன்* எந்தன் மாலுக்கே.

2.நூலினேரிடையார்* திறத்தே நிற்கும்*
ஞாலம் தன்னோடும்* கூடுவதில்லையான்*
ஆலியா அழையா* அரங்கா! என்று*
மாலெழுந்து ஒழிந்தேன்* எந்தன் மாலுக்கே.

3.மாரனார்* வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும்*
பாரினாரொடும்* கூடுவதில்லையான்*
ஆர மார்வன்* அரங்கன் அனந்தன்* நல்
நாரணன்* நரகாந்தகன் பித்தனே.

4.உண்டியே உடையே*உகந்ததோடும்,* இம்
மண்டலத்தோடும்* கூடுவது இல்லையான்*
அண்ட வாணன்* அரங்கன் வ்ன் பேய்முலை*
உண்ட வாயன் தன்* உன்மத்தன் காண்மினே.

5.தீதில் நன்னெறி நிற்க* அல்லாதுசெய்*
நீதி யாரொடும்* கூடுவது இல்லையான்*
ஆதி ஆயன்* அரங்கன், அந்தாமரைப்*
பேதை மாமணவாளன்* தன் பித்தனே.

6.எம்பரத்தர்* அல்லாரொடும் கூடலன்*
உம்பர் வாழ்வை* ஒன்றாக கருதிலன்*
தம்பிரான்* அமரர்க்கு அரங்க நகர்*
எம்பிரானுக்கு* எழுமையும் பித்தனே.


7.எத்திரத்திலும்* யாரொடும் கூடும்* அச்
சித்தந் தன்னைத்* தவிர்த்தனன் செங்கண்மால்*
அத்தனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பித்தனாய் ஒழிந்தேன்* எம் பிரானுக்கே.

8.பேயரே* எனக்கு யாவரும்* யானும் ஓர்
பேயனே* எவர்க்கும் இது பேசியென்*
ஆயனே!* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பேயனாய் ஒழிந்தேன்* எம் பிரானுக்கே.

9.## அங்கை யாழி* அரங்கன் அடியினை*
தங்கு சிந்தை* தனிப்பெரும் பித்தனாய்*
கொங்கர் கோன்* குலசேகரன் சொன்னசொல்*
இங்கு வல்லவர்க்கு* ஏதமொன்றில்லையே (2)


10.## தேவரையும் அசுரரையும்* திசைகளையும் படைத்தவனே*
யாவரும் வந்து அடி வணங்க* அரங்கநகர்த் துயின்ற‌வனே*
காவிரிநல் நதிபாயும்* கணபுரத்தென் கருமணியே*
ஏவரிவெஞ் சிலைவலவா* இராகவனே தாலேலோ. (2)