வியாழன், 8 செப்டம்பர், 2011

பெரியாழ்வார் அரங்கனைப் பற்றிய பாசுரங்கள்



பெரியாழ்வார் 
திருவில்லிப்புத்தூர் என்னும் பாண்டிய நாட்டில் முகந்த பட்டர்
என்னும் சோழிய பிராமனர் இருந்தார். அவர் பதுமவல்லி என்னும்
பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது.
விஷ்ணுசித்தர் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.
இயல்பாகவே வாடா பெருங்கோவிலுடையானிடம் பக்தி கொண்டு இருந்தார்.அவருக்கு நந்தவனத்தில் இருந்து புஷ்பங்களைப் மாலையாகக் கட்டி பெருமானுக்குச் சாற்றுவதை  வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அந்தசமயத்தில் பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் ஓர் இரவு
நகர்வலம் வரும்போது  திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு
வழிபோக்கனைக்  கண்டான். அவனை எழுப்பி “நீ யார்?”  என்று கேட்டான்.
அந்தப் புதியவன் “ஐயா!  நான் ஒரு அந்தணன். கங்கையில் நீராடி
வருகிறேன்“ என்றான். மன்னன் அவனை “உனக்குத் தெரிந்த நீதி ஏதும்
உண்டாகில் சொல்“ என்று கேட்டான். அவனும் “மழைக்காலத்தின்
தேவையை மற்ற எட்டு மாதங்களில், இரவின் தேவையை பகலில்,
முதுமையின் தேவையை இளமையில்,  மறுமையின் தேவையை
இம்மையில் தேட முயற்சி செய்ய வேண்டும்“ என்றான். மன்னன்
மறுநாள் தன் குலகுருவான செல்வநம்பியிடம் இரவு நடந்தவை
சொல்லி “மறுமைக்காக நாம் செய்ய வேண்டிய முயற்சி என்ன?”  என்று கேட்டான்.

செல்வநம்பி “நாட்டின் சான்றோரைத் திரட்டி அவர் முன் இக்கேள்வியை
வைப்போம். சரியான விளக்கம் தருவோருக்கு தக்க பரிசாக பொற்கிழி
அளிப்போம்“ என்றான். மன்னனும் மிகுந்த பொற்காசுகளை கொண்ட
பொற்கிழியை ஒரு தோரணத்தில் கட்டி சான்றோரைத் திரட்ட
ஆணையிட்டான்.

ஸ்ரீவில்லிப்புத்தூரிலே பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய
எம்பெருமான் ஸ்ரீ வல்லபத்தேவன் அரசவையில் நடந்த விபரங்களைக்  கூறி
கிழியை அறுத்து வாவென்றார். இது இறைவன் ஆணை என மதுரைக்குப் புறப்பட்டார்.

மதுரையில் ஆன்றோர் நிரம்பிய மன்னனின் அவையை அடைந்தபோது
அரசனும் செல்வநம்பியும் அவரை வரவேற்று பணிந்தனர். அங்கிருந்த
மற்ற அறிஞர்கள் வேதங்களின் சாரம் அறியாதவரை வேந்தன்
வரவேற்பதா?  என்று சலசலத்தனர். ஆழ்வாரும் உண்மையான பரம்பொருள்
திருமாலே என்றும் வைஷ்ணவமே முக்தியளிக்கும்  மதம் என வேதத்தை எடுத்து உவமானம் கூற பொற்கிழி தானாகவே வளைந்து கொடுத்தது.
ஆழ்வாரும் வேந்தரும் மாந்தரும் வியக்க விரைந்து கிழியறுத்தார்.

இது கண்ட மன்னனும், நம்பியும், மற்றுள்ள ஆன்றோரும், மக்களும்
அவரைப் பணிந்தனர். மன்னன் இவருக்கு பட்டர்பிரான் என்ற விருது
கொடுத்து யானை மேலேற்றி “வேதப்பயன் கொள்ள வல்ல மெய்நாவன்
வந்தான்“ என்ற விருது ஊதச்செயது தானும் தன் பரிவாரங்களும்
உடன்வர நகர்வலம் வந்தான். இக்கோலகலத்தைக் காணுமாறு தன்
மக்களை அரசன் பணித்தபோது தன்னுடைய பக்தனின் மாட்சிமை காண
வந்தாற்போல் ஸ்ரீமன் நாராயணன் கருடன் மீதேறி, பிராட்டியருடன்,
தனக்குரிய ஆயுதங்கள் தரித்து, பிரம்மா ஆருத்ரன் மற்றும் இந்திரன்
முதலான தேவர்கள் துதிக்க காட்சி தந்தார். ஆழ்வார் எமபெருமானின்
கண்ணுக்கினிய பேரழகைக் கண்டு மனமகிழ்ச்சி அடைந்தாலும், அவர்
மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி, தான் அமர்ந்திருந்த
யானையின் கழுத்து மணியைத் தாளமாகக் கொண்டு, “பல்லாண்டு
பல்லாண்டு பல்லாயிரமாண்டு பலகோடி நூறாயிரம்” என வாழ்த்தி
திருப்பல்லாண்டு பாடி அருளினார். மன்னன் மற்றுள்ள பக்தர்களையும்
தன்னோடு பாடச்செய்தார்.இந்த திவ்ய தேசத்தில் விளைந்த இப்பல்லாண்டு தான் எல்லாத் தலங்களிலும் இறைவனுக்கு திருப்பல்லாண்டாக முதன் முதலில் பாடுவதாக  அமைந்து விட்டது. இவர் கண்ணனது திருஅவதாரச் செயல்களை போற்றி 44 திருமொழிகளாகப் பாடினார்.

இவற்றின் மொத்த பாசுரங்கள் 461 ஆகும். திருப்பல்லாண்டு பாசுரங்கள் 12 ஆகும்
மொத்தம் சேர்த்து 473 பாசுரங்கள். இவருடைய பாசுரங்கள்
பெரியாழ்வார் திருமொழி என்று அழைக்கப்பட்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதலில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் பாடிய தலங்கள்
1. திருவரங்கம்
2. திருவெள்ளறை
3. திருப்பேர்நகர்
4.கும்பகோணம்
5. திருக்கண்ணபுரம்
6. திருச்சித்திரக்கூடம்
7. திருமாலிருஞ்சோலை
8. திருக்கோட்டியூர்
9. திருவில்லிப்புத்தூர்
10. திருக்குறுங்குடி
11. திரு வேங்கடம்
12. அயோத்தி
13. சாளக்கிராமம்
14. பத்ரிநாத்
15. தேவப்ரயாகை
16. துவாரகை
17. மதுரா
18. ஆய்ப்பாடி
19. திருப்பாற்கடல்
20. பரமபதம்.



அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?
அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்
"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

பெரியாழ்வார் திருவரங்கனைப் பற்றி 35 பாடல்கள் பாடியுள்ளார்.
அவை திருமொழி, என்று பெயரில் வழங்கப்படுகிறது.
அவற்றை பின் வரும் பகுதிகளில் காணலாம்.

 முதல் பகுதி
திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்.

நாத முனிகள் அருளிச் செய்தது.

குருமுக மனதீத்ய ப்ராஹவேதான சேஷாந்
நரபதி பரக்லுப்தம் ஸுல்க மாதாது காம:!
ஸ்வஸுர மமரவந்த்யம்ரங்கனாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுலதிலகம்தம்  விஷ்ணுசித்தம்  நமாமி !!

பாண்டியப் பட்டர் அருளிச் செய்தது.

மின்னார் தடமதில்சூழ் வில்லிபுத்தூரென்று  ஒரு கால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம்* - முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம்,* கீழ்மையினிற்சேரும் -
வழியறுத்தோம்  நெஞ்சமே ! வந்து

பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று*
ஈண்டியசங்கம் எடுத்தூத*-- வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்*
பாதங்கள் யாமுடைய பற்று.
திருமொழி
1. கருவுடை மேகங்கள் கண்டால்* உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்*
  உருவுடையாய்! உலகேழும்* உண்டாக வந்து பிறந்தாய்!*
  திருவுடையாள் மணவாளா!* திருவரங்கத்தே கிடந்தாய்!*
  மருவி மணம் கமழ்கின்ற* மல்லிகைப் பூச் சூட்டவாராய் . 2.7.2

2.சீமாலிகன் அவனோடு* தோழமை கொள்ளவும் வல்லாய்*
 சாமாறு அவனை நீ எண்ணிச்* சக்கரத்தால்த்தலைக்கொண்டாய் !*
 ஆமாரறியும் பிரானே! அணியரங்கத்தே கிடந்தாய்!*
 ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!* இருவாட்சிப் பூச் சூட்ட வாராய். 2.7.3

3.வண்டு களித்திருக்கும் பொழில்சூழ்
 வருபுனல் காவிரி தென்நரங்கன்
பண்டவன் செய்த கிரிடையெல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டிவை பாடிக்குனிக்க வல்லார்
கோவிந்தன் அடியார்களாகி என் திசைக்கும்  விளக்காகி நிற்பார்
இணையடி என் தலை மேலனவே                              

4.கண்ணி நன் மாமத்தில் சூழ்தரு* பூம்பொழில் காவிரித் தென்னரங்கம்*
 மன்னியசீர் மதுசுதனா! கேசவா!* பாவியேன்வாழுகந்து*
 உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலேயூட்டி ஒருப்படுத்தேன்*
 என்னில் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என் குட்டனே முத்தம்தா. 3.3.2


தொடருவோம்