சனி, 17 மார்ச், 2012

ஸ்ரீரங்கம் பகுதி-5

ஸ்ரீரங்கம் பகுதி-5

IP02-5648
முற்கலன், பூலோக வாழ்வு முடிந்த படியால் அவனை இழுத்து வந்து நரகத்தின் வாசலில்
நிறுத்துகின்றனர். நரகத்தின் உள்ளிருந்து எமன் (நமன்) வெளியே வந்து
"ஏன்யா, இப்படி வந்து நிற்கிறாய்?

நீ ஒருதடவையாவது கடவுள் நாமத்தை சொல்லாமல் என்ன செய்தாய்? கடவுள் நாமத்தைச் சொல்வதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்
தெரியுமா?
"சஹஸ்ரநாமம் என பகவானின் நாமங்கள் ஆயிரம் உள்ளதே? அதில் ஒரு நாமத்தையாவது
சொல்லி இருக்கலாமே?
                "ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே!
              சஹஸ்ரநாம தத் துல்யம் ராமநாம வராநநே!!"
என்று ராம நாமம் கூடவா உனக்குத் தெரியாது? என்று கடவுள் நாமத்தின் மகிமையைப் பற்றி முற்கலனுக்கு விளக்கிச் சொல்லிக்
கொண்டிருந்தான் எமன்."
"ரங்கா" என்று ஒருதடவை சொல்லி இருந்தால் நரகத்திற்கு வந்திருக்க வேண்டாமே?
         "அறிவிலா மனிதர் எல்லாம்* அரங்கமென்று

                  அழைப்பராகில்*
            பொறியில்வாழ் நரகம் எல்லாம்* புல்லெழுந்து

                  ஒழியுமன்றோ?"
அறிவு இல்லாத மனிதன் கூட ஓரு தடவை "அரங்கா" என்று அழைத்தால் நரகம் எல்லாம் புல் முளைத்துப் போயிருக்கும்.  எனக்கு வேலை இருந்திருக்காதே ஐயா! இது மட்டுமா
"அரங்கா" என்று சொல்லாத உனக்கு, இடும் சோற்றை நாய்க்கு இடுங்கள், அது கூட
நன்றியோடு இருந்திருக்கும் ஐயா!"
   "               அணி திருவரங்கம் என்னா*
       மிண்டர் பாய்ந்து உண்ணும சோற்றை* விலக்கி நாய்க்கு இடுமினீரே!"
"உங்களுக்காகத் தானே தொண்டரடிப்பொடிஆழ்வார், போன்ற ஆழ்வார்கள் எல்லாம்,
சொல்லி இருக்கிறார்கள். நீ ஒரு தடவை கூட சொல்லவில்லை போலிருக்கு"
என்று எமன் முற்கலனிடம் நாமத்தின் மகிமையை விளக்கிச் சொல்லி விட்டு தன் வேலையாளிடம்,
"இவனை நரகத்துக்கு இழுத்துப் போங்கள்"
என்று ஆணை இட்டுவிட்டு தான் இருப்பிடத்தை நோக்கி நகருகிறான்.
நரகத்தைக் காணோம்!
உள்ளே செல்ல முற்படும், எமனை காவலாளி தடுத்து
"உங்களுக்கு வேலையில்லை, நரகம் எல்லாம் சொர்க்கமாகிவிட்டது ஐயா"
"என்னப்பாசொல்கிறாய்?" என்று எமன் கேட்க,
"ஆம் ஐயா, நாமத்தின் மேன்மையை நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, இங்கு அதனைக்
கேட்டுக்கொண்டிருந்த எல்லாரும் சொர்க்கத்துக்குப் போய் விட்டார்கள்,  நரகம் இல்லாமல்
போய்விட்டது ஐயா!" என்று காவலாளி சொன்னான்.
"நமனும் முற்கலனும் பேச* நரகில் நின்றார்கள் கேட்க*
நரகமே சொர்க்கமாகும்* நாமங்கள் உடைய நம்பி*"

அப்படிப்பட்டது அரங்கனின் நாமம். நாமத்துக்கே  அப்படின்னா, அந்த ஊருக்கு எப்படி
இருக்கும்.
இது மட்டுமா?
"உன் கடைசி ஆசை என்ன?" ன்னு
வயதானவர்களைக் கேட்டுப் பாருங்கள்,
"கடைசிக் காலத்திலே என்னைக் கொண்டு போய் பாடுவான்துறையிலே சேத்துடுங்கப்பா" என்பார்கள்.
அதென்ன பாடுவாந்துரைங்கிங்களா?

Photo0182நன்றி: கிஞ்சித்காரம் டிரஸ்ட் 2012ஆண்டு நாட்காட்டி

திருமங்கை மன்னன் படித்துறை, கொள்ளிடத்தின்
கரையில் உள்ளது.
இது திருமங்கை ஆழ்வார் பற்றியது.
திருமங்கை மன்னன் அரங்கனால் ஆட்கொள்ளப்பட்டபின், அவனுக்காக பல இடங்களிலும்
பொன், பொருள் இவற்றைத் திருடி, திருவரங்கத்தின் திருமதிளைக் கட்டினான். ஸ்ரீரங்கத்தில் இவர்
பெயரில் "ஆலீ நாடன் திருச்சுற்று" ஒரு திருச்சுற்று உள்ளது.
மதில் கட்டுவதற்கு உதவிய கம்மாளர்களுக்கு பாக்கி கொடுக்க முடியாமல், படகில் ஏற்றி
ஆற்றில் தள்ளினார்.
பெருமானின் அருளால், எதிர்த்து வந்த அவர்களின் பேரன்களை, காவேரி நீராழி மண்டபத்தில்
நின்று கொண்டு, இறந்து போனவர்களை அழைக்கச் சொன்னார்.  பித்ருக்கள் அனைவரும்
பெருமாளோடு அங்கு தோன்றி
"நாங்கள் ஆழ்வார் அருளோடு பெருமாளோடு சுகமாக  இருக்கிறோம் நீங்களும்
ஆழ்வாரையே தஞ்சமாக பற்றி இருங்கள்"
என்று கூறினர்.
அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை பார்த்து
" உம் விருப்பத்தைக் கேளும்" என வினவ
ஆழ்வார்,
      "தங்கள் தசாவதாரங்களை காண்பிக்கவேண்டும்"
என்றார். மேலும் "என்ன விருப்பம்?" என பெருமான் கேட்க,
"நம் பக்தர்களுக்கு உயர் கதி அளிக்கவேண்டும்', என ஆழ்வார் கேட்க,
"உம் வாளை வேகமாக வீசும், அது எங்கு விழுகிறதோ அங்கு இறுதிச் சடங்குகளை
செய்பவர்களுக்கு உயர்கதி அளிப்போம்",
என்றான் அரங்கன்.
ஆழ்வார் தான் வாளை வேகமாக வீச, அது வடதிருக்காவிரியின் கரையில் விழ, அங்கு
"பாடிய வாளன் துறை" என்ற பெயரோடு இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடமாயிற்று.
அதைத் தான் "பாடுவாந்துரை, பாடுவந்துறை" என்று சொல்லுகிறார்கள்.
அப்படி பாடுவாந்துரையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றால் முக்தி நிச்சயம்.
அதற்காகவவாது ஸ்ரீரங்கத்தில் இறக்க வேண்டும் என்று பலரும் விருப்பப்படுவார்கள்
ஆக ஸ்ரீரங்கத்தில் இருந்தாலும் சொர்க்கம், மறைந்த பின்னும் சொர்க்கம்.
அதனால் தான் ஸ்ரீரங்கத்தை பூலோக சொர்க்கம் Photo0181என்கிறார்களோ?

நன்றி: கிஞ்சித்காரம் டிரஸ்ட் 2012ஆண்டு நாட்காட்டி

ஸ்ரீ..உ.வே. வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

திங்கள், 12 மார்ச், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-4.


ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-4.

"ஏன் ஸ்வாமி வருத்தமாக உள்ளீர்? நானும் இரண்டு நாளாகப் பார்க்கிறேன்,எதேயோ  பறிகொடுத்தமாதிரி உள்ளிர்கள்?"
தாயார் வைகுந்தத்தில் ஸ்ரீமன் நாராயணனைப் பார்த்துக் கேட்கிறார்.
"நேற்றைக்கு பூலோகம் சென்று இருந்தேன், அங்கு தீபாவளி சமயம். ஒரு வீட்டில்  நடந்த சம்பவம் என்னை பாதிtத் து விட்டது, அதனை நினைத்துத் தான் வருத்தமாக  உள்ளேன்" என்று நாராயணன் லட்சுமியைப் பார்த்துச் சொன்னார்.
"அப்படி என்ன அங்கு நடந்து விட்டது, நானும் தெரிந்து கொள்ளக்கூடாதா ஸ்வாமி?"
"தாராளமாகத் தெரிந்து கொள்".
"கேள்"
பூலோகத்தில் ஒருநாள்:
"ஏன் அம்மா, வருத்தமாக இருக்கே? எல்லாச் சாமான்களும் தான் தீபாவளிக்கு வாங்கி  போட்டுட்டேனே? இன்னும் ஏதாவது வேண்டுமானால் சொல்லு, அதையும் வாங்கிண்டு  வரேன்."
மூத்த பையன் தான் தாயிடம், அவள் வருத்தமாக இருப்பதைப் பார்த்து, வினவினான். தாய்க்கு மூன்று மகன்கள், இருவர் அவளோடு உள்ளார்கள், மூன்றாவது மகனுக்கு  கல்யாணமாகி அவன் தன் மனைவியுடன் அமெரிக்காவில் தற்போதுதான் சென்றுள்ளான், மூத்த மகன் கேட்டவுடன், "இப்போது வரதராஜன் என்ன செய்யரானோ? அவனுக்கு  தீபாவளின்னு தெரியுமோ இல்லையோ? அவன் மனைவிக்கு பட்சணம் எல்லாம் செய்யத்
தெரியுமோ தெரியாதோ? அவனும் நம்மோடு இருந்திருந்தால் நன்னா இருந்து இருக்கும். ஹும், அவனும் நம்மோடு இல்லையேன்னு தான் வருத்தமாக இருக்கு" என்றாள்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்ற மருமகள்கள்,
"குத்துக்கல்லாட்டம் நாம ரெண்டு பேர் இங்க இருக்கோம், நம்மளைப் பத்திக் கவலைபடாம, அம்மா இருக்காளா, இல்லையான்னு இதுநாள் வரை கவலைப் படாத வரதராஜனையும்  அவன் பெண்டாட்டியைப் பத்தி கவலைப்படுதே இந்தக் கிழம்" ன்னு  அந்த இரண்டு மருமகள்களும் மாமியாருக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள், 
அதே நினைச்சேன், நாம அப்படி கவலைபடாம இருக்கோமேன்னு வருத்தமாக இருக்கு"  பூலோகத்தில் நடந்த, பார்த்த கதையை லட்சுமியிடம் விவரித்தார்,  நாராயணன்.
"அதற்கும் நீங்கள் வருத்தப் படுவதற்கும் என்ன ஸ்வாமி உள்ளது?'
லக்ஷ்மி ஒண்ணும் புரியாமல் வினவினாள்.
"என்ன அப்படிச் சொல்லிட்ட?  நாம் வைகுந்த்தத்தில் சௌக்கியமா இருக்கோம்,  பூலோகத்தில் எத்தனை பேர் கஷ்டப் படறாங்க? அவங்களும் வைகுந்தத்திற்கு வர  வேண்டாமா? அவர்களும் நம்மோடு இருந்தால், அந்தத் தாயாரைப் போல நாமும்  மகிழ்ச்சியாக இருக்கலாமே? அதுக்குத் தான் வருத்தப் பட்டேன்" ன்னு நாராயணன்
லட்சுமியிடம் தான் வருத்தத்தை கொட்டினான்.
"நீங்க சொல்றது சரிதான். அதுக்கு இப்ப என்ன செய்ய உத்தேசம்?"
"நாம பூலோகத்துக்கு போயிட்டா?"  நாராயணன் பதில் சொன்னான்.
"நாம பூலோகத்துலே எந்த இடத்துக்கு போவது?"
"தொண்டரடிப்பொடி ஆழ்வார் மூணாவது விபுதி வேணும்ன்னு சொன்னாரில்லே, அந்தத் திருவரங்கம் போயிடுவோம், அங்கிருந்து கொண்டு எல்லோரையும் திருத்தி  வைகுந்தம் அனுப்பிடுவோம். திருமங்கை ஆழ்வார் அர்ச்சாவதாரம் பற்றி நிறையப்  பாடியுள்ளார், அதனாலே 106 திவ்ய தேசங்கள் தோறும் இருந்து பக்தர்களைத்  திருத்தி வைகுந்தம் அனுப்பிடுவோம். "வைகுந்தம் புகுவது மன்னவர் விதி?"
அதனால் எல்லோரையும் திருத்தி இங்கு அனுப்பிடுவோம். கிளம்ப தயாராக இரு"
என்று நாராயணன் ஸ்ரீரங்கம் வந்தடைந்தான்.
ஆக ஸ்ரீரங்கம் மூணாவது விபுதி ஆனது. ஆயிரங்கால் மண்டபம்
ஆயிரங்கால் மண்டபம் மற்றொரு பகுதி
அதுக்கு ஏற்றாற்போல் ஸ்ரீரங்கத்தில் ஆயிரம் கால் மண்டபத்தில் நித்ய விபுதி, லீலா விபுதி  மாதிரி, வைகுந்த ஏகாதசியின் போது உண்டாக்குகிறார்கள். ஆயிரக்கால் மண்டபத்தில்,  953 கல் தூண்கள்( ஒவ்வொன்றும் 19 அடி உயரம் கொண்டவை) திருமாமணி மண்டபத்தைச் சுற்றி நித்ய விபுதியாகவும், ஒவ்வொரு ஆண்டும் 47 மரத்தூண்கள் ( ஆக மொத்தம்  1000 தூண்கள்) வெளியே போடற கொட்டகை லீலா விபுதி எனவும் மாறுகிறது.
திருமாமணி மண்டபத்தில் ராபத்து உத்சவத்தின் போது  அரையர் பண் இசைத்து பாடி  வைகுந்தத்தில் உள்ளது போல நடைபெறுகிறது.
என்ன, ஸ்ரீரங்கம் வைகுந்தம் இல்லையா?
உடனே புறப்படுங்கள் வைகுந்தத்திற்கு!!!
ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து திரட்டியவை


ஞாயிறு, 4 மார்ச், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-3

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-3

"நல்லார்கள் வாழும் நளிரங்கம்"- என்று ஆழ்வார்கள் ஸ்ரீரங்கத்தைப் பற்றி பாசுரங்கள் இயற்றியுள்ளனர்.
"மற்ற ஊர்களில் இல்லாத சிறப்பு என்னய்யா ஸ்ரீரங்கத்தில் உள்ளது?"
என்ற கேள்விக்கு முன்னரே இரு பகுதிகளில் விளக்கி உள்ளோம். அதன் தொடர்ச்சியாக இங்கு மேலும் ஸ்ரீரங்கத்தின் மேன்மையைப் பார்ப்போம்.
கோயில், திருமலை, காஞ்சி, திருநாராயணபுரம் என்று நான்கு ஊர்களைச் சொல்லுவார்கள்.
கோயில் என்றால் ஸ்ரீரங்கத்தைத் தான் குறிக்கும்.இது போக மண்டபம் என்பார்கள்.
அதே போல, புஷ்ப மண்டபம் திருமலை ஆகும். அதனால் தான் திருமலையில் தோமாலா சேவை பிரசித்தி பெற்றது. தியாக மண்டபம் என்று பெயர் பெற்றது
காஞ்சி வரதர். எல்லா முக்கியமான ஆழ்வார்கள், ஆசாரியகள் பிறந்தது காஞ்சியில். ஆனால் கடைசியில் சேர்ந்தது ஸ்ரீரங்கத்தில். அதனால் காஞ்சி தியாக மண்டபம் ஆயிற்று.
 திருநாராயணபுரம் என்று  சொல்லப்படும் மேல்கோட்டை ஞான மண்டபம் என்பார்கள்.
ஆக எல்லாவற்றிலும் முதலாக உள்ளது ஸ்ரீரங்கம் ஆகும்.
108 திவ்ய ஷேத்ரங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். அதனை வளர்த்தால் எல்லா ஷேத்ரங்களையும் வளர்த்தது போல் ஆகும்.அதனாலும் இது முதன்மை பெற்று விளங்குகிறது.

"டாக்டர், ரெண்டு நாளா உடல் நலமில்லாமல் உள்ளது" நான் டாக்டரிடம் போனேன்.
"சோதித்துப் பார்த்து விடுவோம்" என்று டாக்டர் எல்லா சோதனைகளையும் செய்தார்.
"இத்தனை பரிசோதனைகள் செய்ய வேண்டுமா டாக்டர்?"
"நீங்க டாக்டரா, நான் டாக்டரா?"
"அதுக்கில்லை டாக்டர்" ன்னு நான் இழுத்தேன்.
"நீங்கள் எங்கு உள்ளீர்கள்" இது டாக்டர்.
"நான் ஸ்ரீரங்கத்தில் உள்ளேன்,டாக்டர்"
"உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது, சக்கரை வியாதியும் உள்ளது" ன்னு
ஒண்ணொண்ணா ஆரம்பித்தார்.
நான் மூர்ச்சை ஆகாத குறை.
"கவலைப்படாதிர்கள், இதுக்கெல்லாம் நான் சொல்றதை கவனமாகச் செய்தால் வியாதியை  சுலபமாகப் போக்கிடலாம்"
"சொல்லுங்க, டாக்டர்"
"ஒண்ணுமில்லை. தினமும் காலை மாலை நிறைய நடக்கணும். ஸ்ரீரங்கத்து சித்திரை  வீதியை ரெண்டு சுத்து சுத்திட்டு வாங்க போறும், நான் கொடுக்கிற மாத்திரையை விடாம  சாப்பிடுங்க'".
ஆம், ஸ்ரீரங்கம் பெரிய கோயில் என்பதால் வீதிகளும் பெரிது தான்.
ஸ்ரீரங்கம் சித்திரை மற்றும் உத்திரை வீதிகள், எட்டையும் ஒரு தடவை சத்தி வந்தால் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர்  ஆகுமாம். அப்பறம் எந்த வியாதியும் நில்லாமல்  போய் விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

பிள்ளையாருக்கும், முருகனுக்கும் மாம்பழத்தைப் பெற சிவபெருமான் ஒரு போட்டி நடத்தினார். யார் முதலில் உலகத்தைச் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் இந்தப் பழம் என்கிறார்.

முருகன் தனது மயில் வாகனத்தை எடுத்துக் கொண்டு வலம்
வரக் கிளம்புகிறான். புத்திசாலியான பிள்ளையார் நாரதரிடம் கேக்கிறான்,
"உலகம் என்பது என்ன? அம்மை அப்பன் என்பது என்ன?"
"அம்மை அப்பன் என்பதும், உலகம் என்பதும் ஒன்று தான்" என்று நாரதர் கூற,
அம்மை அப்பனனி ஒரு தடவை சுற்றி வந்து தந்தையிடமிருந்து பழத்தைப் பெற்றதைப்  பார்த்த, முருகனுக்கு, கோபம் வந்து பழனி மலைக்குச் செல்கிறான் என்பது நமக்குத்  தெரிந்த கதை தான்.
அது போல ஸ்ரீரங்கம் ஏழு மதில்களைக் கொண்டதால், அதனை பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம், மஹர்லோகம்,ஜநோலோகம், தபோலோகம், ஸத்யலோகம்  என ஏழு  லோகங்களை அடக்கியது என்றும் சொல்லலாம்.
அதனால் ஏழு லோகங்களில் வாழ்ந்த பெருமை ஸ்ரீரங்கத்தில் கிடைக்கும்.
முன்னரே சொல்லியபடி, தொண்டரடிப் ஆழ்வார் தன்னுடைய திருமாலையில், நாம்
"நாம் யாரை வணங்குவது"
என்ற சந்தேகத்திற்கு,
 "சிலையினால் செற்ற தேவனே தேவன் ஆவான்"
என்று,
"யார் அந்த இலங்கை மன்னன் ராவணனை வென்றானோ, அந்த ராமனை வணங்கு"
என ராமனை வணங்கச் சொன்னார். நாம் உடனே,
"ராமன் வாழ்ந்தது  த்ரேதா யுகம், ஆனால் நாம் இருப்பதோ கலியுகம்"
என்றோம்.
"அப்படியா சரி, "கற்றினம் மேய்த்த எந்தைக் கழலிணை பணிமிநீரே"
என்று மாடு மேய்ப்பவனாக, வெண்ணெய் திருடும் சாதாரணமான கண்ணன்
திருவடிகளைப் பற்றுங்கள்"
என்று கண்ணனை பற்றச் சொன்னார்.
நாம் உடனே " இதிலும் குறை உள்ளதே, கண்ணனும் கலியுகத்தில் இல்லையே?
அவனும் துவாபரயுகத்தில் வாழ்ந்தவன் தானே? என்றோம்.
ஆழ்வாரும் உடனே,
" நாட்டினான் தெய்வமெங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
 காட்டினான் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம்"
என்று எல்லா விபவாவதாரங்களுக்கும் பிரதிநிதியாக, எல்லா
அர்ச்சாவதார திவ்ய தேசங்களுக்கும் பிரதிநிதியாக ரங்கநாதன் சேவை
சாதிக்கிறான், அவன் திருவடிகளைப் பற்றுங்கள்"
என்று அரங்கனைக் காட்டினார்.
ஆக,
"அடியார்கள் வாழ! அரங்க நகர் வாழ!
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ!!
கடல் சூழ்ந்த மன்னுலுகம் வாழ!
மணவாள மாமுனியே இன்னும் ஒரு
நூற்றாண்டு இரும்!!!."
என்று கூற்று  சரிதானே!

ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்
ஸ்வாமி தேசிகன்

"ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்!
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்!
தோலாத தனிவீரன் தொழுத கோயில்!
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்!
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்!
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்!
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்!
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே!

கருத்து:
ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து எடுக்கப்பட்டது