புதன், 5 டிசம்பர், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-17. அரங்கனுக்கு பொயகை ஆழ்வாரின் அர்ப்பணம்.

அரங்கனாதர் கார்த்திகைப் புறப்பாட்டின் பொது

நம்பெருமாள் அரங்கனாதனுக்கு பல ஆழ்வார்களும் பாசுரங்களைப் பாடியுள்ளார்கள். 
நாலாயிரமும் அரங்கனுக்கே என்று சொல்பவர்களும் உண்டு.
பத்து ஆழ்வார்கள் மொத்தம் 247 பாசுரங்கள் பாடியுள்ளார்கள். அவருக்கு புறப்பாடு நடக்கும் 
போது
பெருமாளுக்கு ”பதின்மர் பாடும் பெருமாள்” என்று அருளப்பாடு செய்வார்கள், 
அதில் முதல் ஆழ்வார் பொய்கை ஆழ்வார், தன் முதல் திருவந்தாதியில் ஒரு 
பாசுரமும், கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார் 73 பாசுரமும் பாடியுள்ளார்கள்.

பிர்ஹலாதன் தன் தாயாரின் கர்ப்பத்தில் இருக்கும் போதே பெருமானைப் பற்றி, நாரதர் சொல்ல
கதை கேட்டு, வளர்ந்தான். பெருமானைப் பார்த்து கை தொழுதான். பின்னாளில் வேதாப்பியாசத்தின்
போது, தன் சக மாணவர்களிடத்தில் ”ஒம் நமோ நாராயணாய’ என்று சொல்லுங்கள், ஹிரண்யாய நம” என்று
சொல்லாதீர்கள் என்று சொல்கிறான். 
”நீ மட்டும் அப்படிச் சொல்ல எப்படிக் கற்றுக் கொண்டாய்?” என்று சக மாணவர்கள் கேட்க,
“நான் என் தாயாரில் கர்ப்பத்தில் இருக்கும் போதே அதைக் கற்றுக் கொண்டு விட்டேன்”
என பதில் அளிக்கிறான் பிர்ஹலாதன்.
அதைப் போல,கர்ப்ப காலத்திலேயே பெருமானைக் கண்டேன் என்கிறார் இந்த ஆழ்வார். 
இதில் வேடிக்கை என்னவென்றால் பொய்கை ஆழ்வார் ஒரு தாயாரின் கர்ப்ப சம்பந்தம் 
இல்லாமல் வந்தவர்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார், தன்னுடைய பாசுரத்தில்,
"வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்
        பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
        ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே."
ஒருவன் நூறு வருஷங்கள் வாழ்வதாகக் கொண்டால், அதில் பாதி தூக்கத்திலேயே 
போய் விடும், மீதி பாதியில் பேதை, பாலகன், அதாகம், பிணி, பசி, மூப்பு, துன்பம் எனப்
போய்விடும். அதனால் எனக்குப் பிறவி வேண்டாம் என்று அரஙகனிடம் மன்றாடுகிரார்.
அதுக்காக பெருமான் நம்மை விட்டு விடுவானா?
நாம் முன்பிறவியில் செய்த கர்மத்தைத் தொலைத்தால் தானே பிறவி இல்லாமல் இருக்க 
முடியும்?
கருவில் குழந்தை



அப்படி கர்ப்பத்தில் இருக்கும் போதே கண்டேன் என்கிறார் பொய்கையாழ்வார். கர்ப்பத்திலேயே 
இல்லாதவர்,
கர்ப்ப காலம் என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்து இருக்கிறார் பாருங்கள்.
ஒரு தாயாரின் கர்ப்பத்தில் இருப்பது ஒரு வகையில் ந்ல்லதுதான், ஏனெனில் வெளியில்
வந்தால் எத்தனை சிரமங்கள்? அத்தனையும் மீறி நாம் எப்போது இறைவனை அடைவது?
ஆனால் உண்மையிலேயே கர்ப்ப காலமே மிகக் கஷ்டம் என்று ஆழ்வார் உணர்ந்துள்ளார்
பின்னெ இல்லையா, நாம நம்ம இஷ்டம் போல அங்க உட்காரமுடியுமா, காலைத்தான் நம்ம
இஷ்டத்துக்கு நீட்ட முடியுமா, நமக்கு வேண்டியதை நாம சாப்பிட முடியுமா, புழு, பூச்சி, 
மலம், சீழ் இவைகளுக்கு இடையே மடிச்ச காலை நீட்ட முடியுமா, இப்படி பல முடியுமாக்களை
சிந்தித்து இருப்பார் போல் ஆழ்வார். அது மட்டுமா வெளியில் வந்தால் மட்டும் உடனே
நாம நம் வேலையைச் செய்து கொள்ளமுடியுமா? இதையெல்லாம் ஆழ்வார் சிந்தித்து இருப்பார்
போல். இதையெல்லாம் எப்படி என்னால் மறக்கமுடியும். அதைத்தான் சொல்கிறார், ‘ஒன்றும்
மறந்தறியேன்” என்று.  
திருபாணாழ்வாரைப் போய் கேட்டால் தெரியும், அரங்கனுடைய ஒவ்வொறு அங்கங்களும் எவ்வாறு
அவரை பாதித்ததென்று? ”திருக்கமலப் பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே” என்கிறார் 
அவருடைய பாதத்தை பற்றிப் பாடும் பொது. “செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே”
என்கிறார் வாயைப் பற்றிப் பாடும் போது. “என்னை பேதமை செய்தனவே”, அந்த “நீண்டவப்
பெரிய வாய கண்கள்” என்கிறார் கண்கள் செய்ததை!. எல்லாவற்றுக்கும் மேலாக, “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக்
கானாவே!” என்று அரங்கனோடு ஐக்கியம் ஆகி விடுகிறார். அப்படிப்பட்ட அரங்கனை பொய்கை
ஆழ்வாரால் மட்டும், ”எப்படி மறக்க முடியும் அவனை” என்கிறார்?
அதனால்தான் அங்கிருந்தபடியே பெருமானை கண்டாராம். எந்தப் பெருமானைக் கண்டாராம்?
“ஓதநீர்வண்ணனை” என்கிறார். எந்தப் பெருமான் என்னை ரக்‌ஷிப்பதற்கென்று, வைகுந்தத்தில் இருந்து
விரக்தி ஏற்பட்டு, அரங்கத்தில் வந்து படுத்து இருக்கிறானோ, கர்ப்பத்திலேயே தொழுது
கொண்டு இருக்கும் என்னை போன்றவர்களை காப்பதற்க்கு வந்திருக்கும் அரஙகனைக் கண்டாராம்.
நானோ கர்ப்பத்தில் படுத்துள்ளேன், அவனோ அரஙகத்தில் படுத்துள்ளான். மேகத்தைப் போல
எல்லாருக்கும் அருள் செய்வதற்க்கு என்று வந்து படுத்து இருக்கும் அரங்கணை எப்படி மறப்பேன்
என்று “ஒதநீர் வண்ணனை” என்கிறார்.
“கண்டேன்” என்கிறார், உடனேயே, “கை தொழுதேன்”, என்கிறார். எந்த திசையை நோக்கித்
தொழுதாராம்? “திருவரங்கமேயான் திசை” என்கிறார். அதாவது திருவரங்கன் இருக்கும் திசையை
நோக்கித் தொழுதேன் என்கிறார்.
கருவரங்கத்திலேயே அவனை தொழுங்கள், அப்படி இல்லையா நினைவு தெரிந்த பிறகாவது
அவனை மறக்காதீர்கள், அவன் அருள் கிடைக்காத “ஏழைகாள்” என்று நம்மைப் பார்த்துக்
கூறுகிறார்.
பொய்கை ஆழ்வார் பாசுரம்:
         ஒன்றும் மறந்தறியேன்* ஓதநீர்வண்ணனைநான்*
            இன்றுமறப்பனோ ஏழைகாள்* -அன்று
         கருவரங்கத்துள் கிடந்து* கைதொழுதேன் கணடேன்*
            திருவரங்கமேயான் திசை (1) 2087
வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதனை


முழுதுமாகக்  கேட்க கீழ்கண்ட தொடர்பினை தரவிறக்கம் செய்து கேட்கலாம்.
http://www.mediafire.com/download.php?e8w2ntm2cd4k1an

ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-16. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!! -திருமங்கை ஆழ்வார்.















வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
    பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
    அவர் தம் கலவியெ கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
    உணர்வெணும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
    நாராயணா என்னும் நாமம்.

யார் தெரிந்து கொண்டார், என்ன தெரிந்து கொண்டார்?
எப்படித் தெரிந்து கொண்டார்? யார் சொல்லிக் கொடுத்தார்கள் அவருக்கு?
அப்படி எனன விஷேஷம், அந்த நாமத்தில்? அதனைத் தெரிந்து கொள்ள, தன்னுடைய தவறுகளை மன்னித்த, அவரை எப்படிக் கண்டு கொண்டார்? தன்னுடைய ’ஆடல்மா’  குதிரையில் ஏறி மிக அதிகமான திவ்விய தேசங்களுக்கு சென்று பாசுரங்களைப் பாடியவர்யார்?
என்று பல கேள்விக்ளுக்கு பதில், வேறு யாராக இருக்க முடியும், ‘கலியன்’ என்ற பெயர்  கொண்ட ’திருமஙகையாழ்வாரை”த் தவிர!!!
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் மிக அதிகமான பாசுஙகளை பாடியவர், கிட்டத்தட்ட ஆயிரம் பாசுஙகளுக்கு மேல்,
 எப்படி இறைவனால், நாராயணனால் ஆட்கொள்ளப்பட்டார்
என்பது மிகப் பெரிய கதை!!
திருக்குறையலூர், சோழ நாட்டில் உள்ள சிறிய ஊர், மிகப் பெரிய ஆழ்வாரைக் கொடுக்கும் என்று அவருடைய தந்தை, ஆலிநாடர் கூட, நினைத்து இருக்கமாட்டார். நீலன், அதுதான் தந்தை இட்ட திருநாமம் அவருக்கு. இவருடைய வீரத்துக்கும், விவேகத்துக்கும் உரிய சன்மானத்தை, திருமங்கை என்னும் சிற்றூரை சோழ மன்னன் பரிசாகக் கொடுத்தான்.
’பரகாலன்’ என்ற பட்டப் பெயரோடு வாழ்க்கையை துவங்கிய இவருக்கு விதி என்ன செய்தது!!!!
பாருங்கள்!
சுமங்கலி என்னும் தேவகன்னிகை, தன் பிறப்பு அறிநதவள், ஒரு அந்தணர் வீட்டில் குமுதவல்லி என்னும் பெயரோடு வளர்ந்து வரும் இவர், பரகாலனை மாற்ற வந்தவர் என்றே கொள்ளலாம்.
பரகாலன் குமுதவல்லியை சந்திக்க வேண்டும் என்பது விதி தானே?
என்ன நடந்தது?
கண்டதும் காதல், என்னமோ இந்தக் காலத்தில் மட்டும் தான் நடக்க முடியுமா?
குமுதவல்லியைக் கண்டதும் காதல் கொண்டார், அவள்தான் தன் மனைவி என்பதில் உறுதி கொண்டார்.
'நான் தஙகளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், தங்களுக்குச் சம்மதமா?”
பரகாலன் குமுதவல்லியைப் பார்த்து நேராகவே கேட்கிறார்.
தான் ஒரு வைஷ்ணவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசை கொண்ட குமுதவல்லி, ஒருமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு,
“அதெல்லாம் சரி, நான் உங்களைத் திருமணம் செய்ய வேண்டுமானால்.....”
இழுப்பதைப் பார்த்த பரகாலன் சிறிதே தடுமாறி,
“நீங்கள் என்ன நிபந்தனை போட்டாலும் சம்மதம், அதற்கு நான் தயார்,” என்கிறார்.
“நீங்கள் பஞ்சசம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும், இதுதான் நிபந்தனை,’ என்கிறார் குமுதவல்லி அம்மையார்.
’அப்படி என்றால்.....”,
பரகாலன். இவரோ அந்தணர் அல்ல, அதனால் பஞ்ச ஸ்ம்ஸ்காரம் என்றால்
என்ன என்பது இவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
அதுசரி எத்தனை அந்தணருக்குத் தெரியுங்கிறிஙகளா? அதுவும் சரிதான்.
பெருமாளின் திருஅடையாளங்களான சக்கரம் மற்றும் சங்கு ஆகியவற்றை தங்கள் தோளில் அணிவது, இறைவனின் பனிரெண்டு திருப்பெயர்களை சொல்லிக் கொண்டு பனிரெண்டு இடங்களில் திருமண் அணிதல், தன்னுடைய பெயரை பெருமானின் அல்லது ஆசாரியன் பெயர்கள் ஏதாவது
ஒன்றை குருவின் மூலம் வைக்கப் பெறுதல், மறைபொருளை குருவின் மூலம் காதில் உப்தேசம் பெறுதல், திருவாராதனை செய்யும் முறைகளை முறையாகக் கற்றுக் கொள்ளல்
என்பதே இந்த பஞச ஸ்ம்ஸ்காரம் ஆகும். இப்படிச் செய்தால் ஒருவர் வைஷ்ணவர் என்று பொருள்.
பரகாலனோ அந்தணர் அல்லாதவர்.அவ்ருக்கு யார் இந்த பஞசஸ்ம்ஸ்காரம் செய்து வைப்பார்கள்?
எங்கெங்கோ தேடினார், யாராவது தனக்கு பஞசஸ்ம்ஸ்காரம் செய்து வைப்பார்களா என்று!
ஒருவரும் தயாரில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை?
ஆண்டவன் தானே இந்த விளையாடளை ஆரம்பித்து வைத்தான், அதனால் அவனே தான் இதையும் முடிக்க வேண்டும்.
பார்த்தார், ஆம், அவரையே குருவாகத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானித்து விட்டார்.
திருநரையூர் பெருமானிடம் விண்ணப்பித்தார்,  தனக்கு பஞ்சஸ்ம்ஸ்காரம் செய்து வைககவேண்டும் என.
இறைவனே பஞ்சஸ்ம்ஸ்காரம் செய்து வைத்து ஒரு ரெக்கார்டு உண்டாக்கிவிட்டார் என்றால் பார்த்துக்   கொள்ளுங்கள்
”நீங்கள் சொன்ன மாதிரி நான் அந்தணர் ஆகி விட்டேன், இப்போது திருமணம் செய்து கொள்ளத் தடையில்லையே?”,
மீண்டும் போய் குமுதவல்லியிடம் முறையிட்டார்.
’அதெல்லாம் சரி, இப்போது நீங்கள் ஒரு வருஷத்திற்கு ஆயிரெத்தெட்டு அந்தணர்களுக்கு தினமும் உணவளிக்க வேண்டும், அப்போதுதான் நம் திருமணம்”.
புதிய நிபந்தனையைக் கேட்டு பரகாலன் அசரவில்லை.
“அதற்க்கென்ன செய்துவிட்டால் போயிற்று” என்றார்.
திருமணமும் இனிதாக நடைபெற்றது.
ஆனால்!!!!!!
ஒருத்தருக்கு சாப்பாடு போடுவதே சிரமம், அதுவும் ஆயிரத்தெட்டு பேருக்கு,அதுவும் ஒரு
வருஷத்துக்கு!!!!
முடியுமா?
முடியவில்லை.
தன் செல்வம் கரைந்தது. மன்னனுக்கு கப்பம் கட்ட முடியவில்லை.
பார்த்தார், மன்னன்.  பரகாலனுடன் போரிட்டு அவ்ரைச் சிறை வைத்தார். திரையைக் கொடுக்கிறேன்,
மந்திரியை என்னுடன் காஞ்சீபுரம் அனுப்புங்கள், அங்கு உஙகள் திரையை கொடுக்கிறேன், என்று
மந்திரியைக் வேகவதி ஆற்றின் கரையில் கிடைத்த புதையிலில் ஒரு பகுதியை கப்பமாகக்
கொடுத்து மீதியை அன்னதானத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்.
மீண்டும் பணத்தட்டுப்பாடு.
வெறும் கையால் முழம்போடமுடியுமா?
பார்த்தார், நாலு பேருக்கு நல்லது செய்ய, என்ன செய்தாலும் தகும் என்று ஒரு விதியை சாக்காகக்
கொண்டு வழிப்பறி செய்யத் துவங்கினார்.
அந்த காலத்து ‘ராபின்குட்’ ஆனார்.
செல்வம் உள்ளவர்களை வழிமறித்து, அந்தப் பணத்தில் இருந்து ஏழை அந்தனர்களுக்கு
அன்னமிட்டார்.
விதி யாரையும் விடாது!!
ஆனால் விதியை மாற்றும் சக்தி அவன் ஒருவனுக்கு மட்டும் தான் உண்டு.
பார்த்தான் இறைவன், இவரை ஆட்கொள்ள நேரம் வந்துவிட்டது என, மாறுவேடம் பூண்டு
இறைவனும், இறைவியுமாக மணக்கோலம் பூண்டு எல்லா ஆபரணங்களோடும் திருமணங்கொல்லை
கானகத்தின் வழியே ஆடல் பாடல் இசைக்க செல்கிறான்.
பார்த்தான் பரகாலனும் அவன் கூட்டாளிகளும். நல்ல வேட்டை.
மணமக்களிடமிருந்து எல்லா ஆபரண்ங்களையும் கழட்டச் சொன்னான். பகவான் காலில் இருந்த
மெட்டியை தன் வாயால் கடித்து கழற்றி, நகை மூட்டைகளை கட்டி தூக்க, கனமாக இருந்ததால்
என்ன முயன்றும் முடியவில்லை.
பரகாலன், “என்ன மந்திரவாதியா நீ? என்ன மந்திரம் செய்தாய், இந்த சிறு மூட்டையைத்
தூக்க முடியவில்லை, அந்த மந்திரத்தை எனக்கும் சொல்”.
பரந்தாமன் புன் சிரிப்புடன், “நம் கலியா, அருகில் வா, அந்த மந்திரத்தை உனக்கும் சொல்கிறேன்”,
என்று அருகில் அழைத்து, காதில், “ஓம் நமோ நாராயணாய” என்ற அஷ்டாக்‌ஷர மந்திரத்தை
ஒத, பரகாலன் அப்போதுதான், வந்திருப்பது மானிடன் அல்ல, தன்னை ஆட்கொள்ள் வந்த
பரமன் என்று புரிந்து கொண்டான்.
இறைவன் மீதான பக்தி வெள்ளம் தன்னுள்ளே பாய, பரகால்ன்,
”வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
     பெருந்துயர் இடும்பையில் பிறந்து
 கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
       அவர்தம் கலவியே கருதி
 ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
       உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
 நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
        நாராயணா என்னும் நாமம்”
என்று பாடத் துவஙகினார்.
அத்துடன் நிறுத்திக் கொண்டாரா? இல்லை! பெரிய திருமொழி என்ற வகையில் சுமார் 1100 பாசுரங்களுக்கு
மேல் பாடியுள்ளார். இது போக திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல்,
திருவெழுகூற்றிருக்கை பொரவற்றை பாடியுள்ளார். இதுமட்டுமா! இவர் போகாத ஊர் இல்லை.
தன் ஆடல்மா குதிரையின் மீது ஏறி எல்லா திவ்யதேசங்களையும் பற்றி பாசுரங்கள் இயற்றியுள்ளர்.
  குலம்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
  நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
  வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
   நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
 என்று நாராயனா என்ற சொல் என்னன செய்யும் என்பதை இந்தப் பாசுரத்தில்
சொல்கிறார்.
மாமிசம், எலும்பு, உரோமம் இவைகளால் செய்யப்பட்டு ஒன்பது வாசல் கொண்ட
இந்த சரீரம் விட்டு உயிர் பிரியும் போது உன்னைச் சரண் அடைய் வெண்டும் என்கிறார்.
    ஊனிடை சுவர்வைத்து என்பு தூண் நாட்டி
        உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
      தானுடைக் குரம்பை பிரியும்பொது உன்றன்
        சரணமே சரணம் என்றிருந்தேன்
திருமங்கையாழ்வாரின் எழுகூற்றிருக்கை என்பது கடினமான பாட்டமைப்பு கொண்டது. ஏழு அறையாக்கி
சிறுமிகளின் பாண்டியாட்டம் போல கட்டம் வைத்து புகுந்து வெளிப்படும் அமைப்பு ஆகும். ஒன்றிலிருந்து
ஏழு வரை சொற்கள் ஏறியும் இறக்கியும் சொற்கள் அமைக்கப்படும். இதனை சித்திரக் கவி என்றும்
சொல்வார்கள். இதனை கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு என எழுதினார் என்றும் சொல்வார்கள்.
பல திருக்கோயில்களுக்குச் சென்று அவற்றை செப்பனிட்டு இருக்கிறார். திருவரங்கத்தில்
ஏழு பிரகாரம் உள்ளது. அதில் நான்காவது பிரகாரம் ஆலிநாடன் திருச்சுற்று என்று திருமங்கை
ஆழ்வார் பெயரில் உள்ளது என்றால் இவருடைய பெருமையைப் பாருங்கள்
திருவரஙத்தைப் பற்றி 73 பாசுரங்கள் பாடியுள்ளார். ரங்கனைப் பற்றி மிக அதிகமான் பாசுரங்கள் பாடியவர் என்றும்
சொல்லலாம். திருவரங்கத்தில் வைகுந்த ஏகாதசி உத்சவம் 21 நாட்கள் நடைபெறும், அதனை
முதன்முதலாக ஆரம்பித்து வைத்தவர் திருமஙகை மன்னன் தான். ஒவ்வொரு ஆழ்வாரகளும்
தனித்தனியான வகையில் சிறப்புப் பெற்றவர்கள், அதாவது பெரியாழ்வார், ஆண்டாள் போன்றவகள்
கண்ணனைப் பற்றி அதிகமாகப் பாடியுள்ளார்கள். குலசேகர ஆழ்வார் ராமனைப் பற்றி அதிகமாகப்
பாடியுள்ளார்கள். அதேபோல திருமஙகை ஆழ்வார் அர்ச்சாவதரத்தைப் பற்றி அதிகமான் பாசுரங்களை
இயற்றியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தைப் பற்றியும், திருமங்கை மன்னனைப் பற்றியும் நிறைய எழுதலாம், நேரம்
வரும்போது மீண்டும் எழுதுவோம்.

புதன், 31 அக்டோபர், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-15. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!! ஆண்டள்

ஆண்டாள்



ஸ்ரீரஙகம் ஏன் என்ற பகுதியில்,ஸ்ரீரங்கம் பற்றியும் அந்த ஊர் ஏன் மற்ற ஊர்களை விட சிறந்தது என்பதைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் அரஙக்னை பற்றி ஆழ்வார்கள் பலரும் பாடியுள்ளதில் இதுவரை பார்த்துள்ளோம். இதில் அடுத்து!!!
எத்தனை ஆழ்வார்கள்! பனிரெண்டு ஆழ்வார்கள்! அதில் பதினோரு பேர், 
ஆன்மிகத்தில் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த சமயத்தில் அவர்களுக்கு இடையே  பெண்ணாகப் பிறந்து, அவர்களுக்கு இணையாக, ஏன் அவர்களை விட ஓரு படி மேல்  போய் அரங்கனையே தன் கணவனாக ஆக்கிக் கொண்டவள். அரங்கனுக்காக பல 
பாசுரங்களைப் பாடியுள்ளவர். அவரைப் பற்றித்தான் இந்த ’அரங்கனை ஆராதித்த  ஆழ்வார்கள்’  பகுதியில் பார்ப்போம்.
"கோதை" என்றும், "நாச்சியார்" என்றும்,"சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" என்றும் பல  பெயர்களைப் பெற்றவர் தான் நாம் பார்க்கப்போகும் ஆழ்வார்.
பூமிப் பிராட்டியின் அவதாரமாகவே இவரைக் கொண்டாடுகிறோம்.
ஒரு பிளாஷ்பேக்!!!!
சுயம்புமனு படைப்புத் தொழிலை ஆரம்பிக்கிறான். படைத்தவற்றை எங்கே வைப்பது?
பெருமானை நோக்கி கேட்கிறான், காரணம் பூமியை இரண்யாட்சன் மடித்து கடலுக்குள் மறைத்து விடுகிறான். நாராயணன் வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை எடுத்து வந்து தன் இடது மடியில் வைத்து, பார்க்கிறார். ( சென்னைக்கு அருகில் திருவிடவெந்தை பிரான் 
கோயில் உள்ளது )
பூமாதேவி நடுங்கிக் கொண்டிருக்கிறாள்.
"ஏன் நடுங்குகிறாய், தேவி" 
பிரான் தேவியைப் பார்த்துக் கேக்கிறான்.
"என்னை ரக்ஷித்து விட்டீர்கள், ஆனால் நமது குழந்தைகளை யார் ரக்ஷிப்பார்கள்?
அதனால்தான் நடுங்கிக் கொண்டிருக்கிறேன்" என்கிறாள் தேவி. 
"அவர்களுக்கு ஏது உபாயம் என்று தெரியாமல் சம்சாரத்தில் தவிக்கிறார்கள்" என்கிறாள் தேவி. 
"அவர்களால் பக்தி, கர்ம ஞானம் போன்றவைகள் அவர்களுக்குத் தெரியாது".என்கிறாள் தேவி.
"வாயால் என் நாமத்தைச் சொல்லச் சொல்லு, மனத்தால் என்னை நினைக்கச் சொல்லு, கைகளால் தூய மலர்களால் அர்சிக்கச் சொல்லு, அவர்களை நான் ரக்ஷிக்கிறேன்", 
பகவான் சொல்கிறார் தேவியிடம்.
உடன் நினைத்தாள் தேவி, கீழே இறங்குவது என்று
" இன்றோ  திருவாடிப் பூரம், எமக்காகவன்றோ 
    இங்காண்டாள வதரித்தாள்-குன்றாத 
 வாழ்வான வைகுந்தவான் போகந்தன்னை 
    யிகழ்ந்து   ஆழ்வார் திருமகளாராய்
என்று சுகமான வைகுந்தத்தை விட்டு, நமக்காக வையகத்தில் விஷ்ணு சித்தர் மகளாக  வந்து பிறந்தாள்.
பூமிப்பிராட்டியின் அம்சமாக ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வாருடைய துளசி தோட்டத்தில் 



திருத்துழாய் செடியின் கீழ் அவதரித்தாள். கோதை என்று திருநாமம் சூட்டி,  அக்குழந்தையை சீராட்டி பாலூட்டி வளர்த்து, பரம ஞானத்தையும் வளர்த்து வந்தார் .
தன் இளம் பிராயத்திலேயே. ஆண்டாள் அரங்கனுக்கு என பத்துப் பாசுரங்களைப் பாடியுள்ளார். சிலர் திருப்பாவை முப்பது பாசுரஙக்ளூம் அரஙகனுக்கு என்று சொல்பவர்களும் உண்டு.அதைப் பற்றி
பின்னர் பார்ப்போம். எல்லா ஆழ்வார்களும் சேர்ந்து என்ன சாதித்து இருப்பார்களோ அதனை சிறு வயதிலேயே சாதித்தவர் ஆண்டாள். திருப்பாவை தெரியாதவர்கள் இந்த அவனியில் யாரும் 
கிடையாது. ஆண்டாளின், திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி என்ற இரண்டும் முதலாயிரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவளைச் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்பார்கள்.
சிறு வயது முதற்கொண்டு கண்ணனே என உறுதி கொண்டு,
அவனுக்கு என, தன் தகப்பனார், பெரியாழ்வார், பகபானுக்கு என்ன வந்துவிடுமோ என்று எப்போதும் நினைக்கும் இவர்,
வடபெருங்கோயில் பெருமானுக்கு என கட்டிய புஷ்ப மாலையை, தானே சூட்டிக் கொண்டு,  நாம் கண்ணாடியில் பார்ப்பது போலே, தன் வீட்டில் உள்ள கினற்றில் அழகு பார்த்துக்  கொள்வாள். அலஙாரம் தனக்கு என சூட்டிக் கொள்வதில்லை,
இவை எல்லாம் கண்ணனுக்கு என்பதில் உறுதி பூண்டிருந்தாள். 
“எந்த திவ்யதேசப் பெருமாளை உன் மனதில் கொண்டுள்ளாய்” என்று பெரியாழ்வார்  கேப்பதற்கு
“மானிடருக்கு என பேச்சுப்படில் வாழ்கில்லேன் மன்மதனே” 
என்று தன் தகப்பனாருக்கு பதில் கூறுகிறாள். 
”ஆண்டாளை அழைத்து வா”, என்று பெருமாளும் ஆணையிட,ஆழ்வாரும் மூடு பல்லக்கில்  ஆண்டாளை ஸ்ரீரஙத்துக்கு அழைத்து வர, கர்ப்ப கிரகத்தின் அருகே அழைத்து கொண்டு வந்து நிறுத்தினார்.
திருமணத்திருவாசல் அருகே சென்று திருக்கமலப் பாதத்தை தொட அப்போதே ஆண்டாளும் பரம பதத்திற்கு சென்று விடுகிறாள் என்பது தான் ஆண்டாள் திருக்கல்யாணம் ஆகும்.
ஒரு பெண்ணால் தான் இத்தனை நளினமான விஷயங்களை வெளிப்படுத்த முடியும் என்பதனை ஆண்டாளின் பாசுரங்களிள்
பார்க்கலாம்.
               அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரிதெழுந்த என் தடமுலைகள்
             துவரை பிரானுக்கென்ற சஙக்ற்பித்துத் தொழுது வைத்தேன்
என்று நளினமான விஷயங்களை ஆண்டாள் வெளிப்படுத்துகிறார்.
ஆண்டாளின் திருப்பாவையை, “சங்கத்தமிழ்மாலை” என்றும் சொல்வார்கள்.
கண்ணனை வணங்கிய பெண்ணாகத் தன்னை பாவித்துக் கொண்டு, ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகக் நினைத்துக் கொண்டு, வடபெருங்கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும்
நினைத்து அதில் உள்ள தெய்வத்தை கிருஷ்ணனாகவும் பாவித்து அந்தப் பெண்கள் செய்த நோன்பினை ஆண்டாள் செய்துள்ளார்.
ஆண்டாளின் திருப்பாவையில், நோன்பிற்க்காக செய்யும் காரியங்கள், மழை எப்படிப் பெய்கிறது என்பதை விளக்குவது, வடமதுரை மன்னனை வாயினால் பாடி, மனதினால் சிந்தித்தால் முன்னர் செய்த பாவங்களும், வரப் போகிற பாவங்களும் நெருப்பில் இட்ட தூசி போல ஒழியும் 
என்று சொல்கிற இடத்திலும், அதிகாலையில் நிகழ்கிற சப்தங்களை சொல்வதிலும், தோழி தூங்குவதை கும்பகர்ணனுக்கு ஒப்பிடுவதிலும், இந்த முப்பது பாசுங்களையும் பாடுவர்களுக்கு கிடக்கும் பலன்களை சொல்லுவதிலும் ஆண்டாளுக்கு இணையாக யாரையும் ஒப்பிடமுடியாது.

ஆண்டாள் பெண்கள் போகப் பொருள் அல்ல,பகவானை எழுப்பி அவனை அடையலாம் என்பதை உணர்த்துகிறார்.
தன் 142 பாசுரஙகள் கொண்ட ‘நாச்சியார் திருமொழி’ யில் ஒரு பெண் தன் காதலனை அடைய செய்ய வேண்டிய பிராத்தனைகள், குட்டி தெய்வங்களிடம் வேண்டுதல், இயற்கையிடம் வேண்டுதல், பறவைகளிடம் வேண்டுதல், ’திருமாலை’யே தன் மணவாளனாகத் தேர்ந்தெடுத்து அவனேயே  மணமுடிப்பதை ‘வாரணமாயிரம்’ என்ற பாசுரஙகளின் வாயிலாக வெளிப்படுத்தும் விதம் போன்றவை ஒரு மானிடப்பெண்ணிடம் இருக்குமா என்று சந்தேகப்படும்படி செய்துவிடுகிறார்.
திருவரங்கனை தன்னுடைய இன்தமிழால், ’செங்கோலுடைய திருவரங்கச் செல்வன்’ என்றும்,
‘நளிர் அரங்க நாகனையான்’ என்றும், ‘என்னமுதர்’ என்றும் பலவாறாக நாச்சியார் திருமொழியில் விளக்குகிறார்.
அரங்கனுக்கு என 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.

சனி, 25 ஆகஸ்ட், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-14. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!


அரங்கன் 
கருட வாகனம் கேள்விப் பட்டுள்ளோம், ரங்கநாதன் மாசி மாதம்
கருட வகனத்தில் வருவதைக் காண எல்லா ஊர்களிலும் இருந்து பார்க்க
வருவார்கள். "மாசிக் கருடன் காசிக்குப் போனாலும் கிடைக்காது" ன்னு
ஒரு பழமொழி கூட உண்டு. எதனால அப்படி ஒரு பழமொழின்னு தெரியலே
கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அரங்கனை யானை வாகனத்தில் பார்க்க வேண்டுமே? நிஜ யானையில்
வருவது போலவே இருக்கும். யானை வாஹனம் புறப்பட்டுவிட்டால்
எவ்வளவு வேகம்  தெரியுமா? வாயு வேகம், மனோ வேகம் போல அவ்வளவு
வேகத்தில் சென்று நிலைக்குத் வந்து விடுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
கொஞ்சம் சுணங்கினாலும் போச்சு, 
இது போல பெருமாளுக்கு பல வாகனங்கள். எல்லா வாகனங்களும் ஒன்றுக்கொன்று விசேஷம். தான்.
அப்படி முனிவாகனம்-ன்னு கேள்விப்பட்டுள்ளீர்களா?
அதேன்ன புதுசா சொல்றே?-ன்னு சொல்றது கேட்குது.
ஆமாங்க, அது ஒரு தனிக்கதைங்க!!!
என்னது, அரங்கனை ஆராதித்த ஆழ்வார்கள்-ன்னு தலைப்புப்
போட்டுட்டு கதைங்கர.
ஆமாம், இந்தக் கதையே ஒரு ஆழ்வாரைப் பத்திதான்.
சரி,அந்தக்கதையச், சொல்லு, சொல்லு, கேப்போம்.
சொல்றேன்!!!!
லோக சாரங்க முனிவர்ன்னு ஒருத்தர் ஸ்ரீரங்கத்தில் பெருமாளுக்கு கைகங்கர்யம் செய்து கொண்டு இருந்தார். இவர் பெருந்தன அர்ச்சகர், அதனாலே இவர் வெச்சதுதானே  சட்டமாக இருக்கணும்!
தினப்படி பெருமாளுக்கு திருமஞ்சன தீர்த்தம் அம்மா மண்டபம் காவிரியில் இருந்து  கொண்டு வருவது இவரின் முக்கிய கைங்கங்கர்யம்.
இப்படித்தான் ஒருநாள்!!!!
"கதிரவன் குணதிசை வந்தனைந்தான் கனவிருள் அகன்றது காலையம்பொழுதாய்"
என்பதுபோல சூரியன் உதயமாகும் போது, காவிரிக் கரைக்கு குடத்துடன் லோக சாரங்க  முனிவர் வருகிறார்.
ஸ்ரீரங்கம் அருகில் உள்ள உறையூரில் வாழ்ந்து வந்தவர், பாணர் குலத்தில் பிறந்ததனால்  பாணர் என்று பெயர் பெற்று, அரங்கனைப் பற்றிப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். தன் கையில் வீணையைக் கையில் வைத்துக் கொண்டு பண் இசைப்பதில் வல்லவர்,
தான் தாழ்ந்த குலத்தில் பிறந்தபடியால் ஸ்ரீரங்கத்தின் மண்ணை மிதிக்க மாட்டேன்  என்ற வைராக்கியத்துடன் காவிரிக் கரையில் நின்று கொண்டு அரங்கனைப் பற்றி  தன்னை மறந்த நிலையில் பாடிக் கொண்டிருந்தார்.
தன் முன்னே யார் இருக்கிறார்கள் என்பதை அறியாததால், லோக சாரங்க முனிவர்  வந்ததை இவர் அறியவில்லை.
அவரை தினப்படி பார்க்கும் முனிவருக்கு இவர் பெயர் நன்ராகத் தெரிந்ததால்,
குறுக்கே நின்று கொண்டிருக்கும்  பாணனைப் பார்த்து,
"அடேய், பாணா, என்ன குறுக்கே நின்று கொண்டு இருக்கிறாய், விலகி நில்லு"
அரங்கனை தவிர வேறொன்றும் பாணன் காதில் விழாததால்,
"அரங்கனுக்கு எடுத்துச் செல்லும் குடத்தை விடப் போகிறாயா, இல்லையா?"
ஹு,ஹு, ஒண்ணும் காதில் விழவில்லை
இவன் கவனத்தை எப்படி திருத்துவது? யோசித்தார், அவனைத் தொடமுடியாது, தொட்டால் தீட்டாகிவிடும்  
முனிவர். சுற்றுமுற்றும் பார்த்தார், ஆற்றில் கிடந்த சிறு கல்லை எடுத்தார், பாணன்  மீது எறிந்தார். பாணன் முகத்தில் சரியாக, நெத்தியடி என்பார்களே அதுபோல் சரியாக  நெற்றியில் பட, ரத்தம் பீறிட்டு வருகிறது.
அப்போதுதான் தன் நிலைக்கு வந்தான் பாணன். அபசாராம் செய்துவிட்டோம் என்று  நினைத்து அவரிடம் மன்னிப்புக் கேட்டு அவருக்கு வழிவிட்டான்  பாணன். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் அரங்கன்.
"என்ன கருட சந்நிதி எவ்வளவு நாழி ஆகியும் திறக்கப் படவில்லை"
என்று மனதில் நினைத்துக் கொண்டே, பெருமாள் சந்நிதியும் திறக்க படாததைப்  பார்த்த, சாரங்க முனிவர், தான் ஏதோ பெருமாளிடம் அபசாரப்பட்டு விட்டோம் என்பதை  உணர்ந்து கொண்டார்.
என்று இரவு முனிவரின் கனவில்,
"முனிவரே, நீர் அபசாரம் செய்து விட்டீர், நம் பாணனை கல்லால் அடித்துத்
துன்புறுத்தி விட்டீர், முதல் வேலையாக நாளைக்கு பாணனை உம் தோளில் மேல்  எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வாரும்"
என்று ஆணை இடுகிறான் பெருமான்.
மறுநாள் முதல்வேலையாக காவிரிக் கரையில் பாணனைத் தேடுகிறார். அவரை வணங்கி
"தாங்கள் கோவிலுக்கு வர வேண்டும்" என்கிறார்.
"அடியேன் திருவரங்கத்து மண்ணைத் தீண்ட மாட்டேன், தயவு செய்து மன்னிக்கவும்"
இது பாணனின் கூற்று.
"தேவரீர் திருவடி திருவரங்கத்து மண்ணைத் தீண்டாமல் அடியேன் தங்களை
என் தோளின் மேல் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு திருவரங்கனை சேவிக்கலாம்".
லோகசாரங்க முனிவர் பாணனிடம் மன்றாடுகிறார்.
எவ்வளவு தடுத்தும் கேட்காததால், வேறு வழியின்றி, பாணனும் லோகசாரங்க முனிவர் தோள் மீது ஏறிக் கொண்டு, முனிவர் வழி நடத்த, கர்ப்பகிரகம் அடைகிறார்.
பெருமாளும் தன் திவ்ய மங்கள சொருபத்தை ஆழ்வாருக்கு காட்டி அருளுகிறான்.
அதைக் கண்ட பாணனும், பெருமானின் அங்கங்களை ஒவ்வொன்றாக அனுபவித்துப் பாடுகிறார். திருக்கண்கள் முதல் திருவடி வரை ஒவ்வொரு பாசுரத்தாலும் வர்ணித்து பத்து பாசுரங்கள் கொண்ட "அமலாநிதிபிரான்" என்ற பிரபந்தத்தை, பெருமானுக்கு  சமர்ப்பிக்கிறார். இறுதியில்
"என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா" என்று சொல்லி அரங்கனுடன்  சேருகிறார்.
ஆக முனிவரை வாகனமாகக் கொண்டதால் திருப்பாணாழ்வாருக்கு "முனிவாஹனர்"
என்ற பட்டப்பெயறும் உண்டு
திருப்பாணாழ்வார் 

முனிவர் தோளில்  திருப்பாணாழ்வார் 
நன்றி: http://madhavipanthal.blogspot.in

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-13 அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!


  
நாமங்களின் மகிமையைப் பாடியவர். நாமங்கள் ஒருவனை நரகத்துக்கு செலுத்தாது  என்பதில் கருத்து வேறுபாடு இல்லாதவர்.
அவனின் திருநாமங்களைச் சொன்னால், நமனின் தலையில் வைத்து நடக்கலாம் என்று உறுதியாக இருந்தவர். அவனின் நாமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தால், அரங்கன் கேட்டபோது சொர்க்கம் கூட வேண்டாம், இங்கேயே இருந்து விடுகிறேன் என்று உறுதியாக  நம்பியவர்.
ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதாகக் கொண்டால் பாதி ஆண்டுகள் பசி, பிணி, மூப்பு, துன்பம், இளமை பாலகன் போன்று இவற்றிலேயே கழிந்து விடும் என்பதை உணருங்கள்
என்று நம்மைப் பார்த்து அடிக்காத குறையாகச் சொன்னவர்.
தன்னுடைய வாழ்க்கையைப் பார்த்தாவது அப்படி நடக்காமல் திருத்திக் கொள்ளுங்கள்  என்று நமக்கு உபதேசம் செய்தவர்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அவரின் பெருமையை!!
யார்ரையா அவர்?
கேட்பது காதில் வழிகிறது எனக்கு!
முதலில் அவரின் வாழ்க்கையைப் பாருங்கள்! உங்களுக்கே அவர் யார் என்று தெரிந்துவிடும்!
      திருமண்டங்குடி, கும்பகோணத்துக்கு அருகில் உள்ள ஊர். "விப்ரநாராயனர்" என்று பெயர் சூட்டி, அவருடைய பெற்றோர் அவரை வேதங்களையும் அதன் அங்கங்களையும் கற்பித்தனர்.
கண்டவர் தம் மனத்தையும் அழகையும் கவரும் அரங்கனின் அழகை தரிசித்து, அவனுக்குத்  தொண்டு புரிவதே தான் வாழ்நாளின் லட்சியம் என்று வாழ்ந்து வந்தவர்.
அவனுக்காகத் தோட்டம் அமைத்து, மாலை கட்டி, சூட்டி மகிழ்ந்து வாழ்க்கையைக் கழித்து வந்தார்.
அரங்கன் விளையாட நினைத்தால் யார் என்ன செய்ய முடியும்?
 திருக்கரம்பனூர் என்ற (தற்போதைய உத்தமர் கோயில்) ஊரில் வசித்து வந்த தேவதாசி, தேவதேவி, தன்னுடைய தோழி மற்றும் தான் தமக்கையுடன் உறையூர் மன்னனை தரிசித்துவிட்டு திரும்பும் வழியில், விப்ர நாராயணர் தோட்டத்தின் வழியாகச் செல்ல நேரிடுகிறது.
"எவ்வளவு அழகான தோட்டத்துக்குச் சொந்தமானவர் யாரோ?"
என்று தன் தமக்கையிடம் கேட்கிறாள்.
தூரத்தில் ஏதும் நடக்காதது போலே விப்ரநாராயணர் பூக்களை பறித்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வளவு அழகான தன்னை, தன்னுடைய அழகில் இறுமாப்புக் கொண்டிருந்த தேவதேவி,
"என்னுடைய அழகில் மயங்காத இவர் யார்? இவர் என்ன பித்தரா?"
என்று தன் தமக்கையிடம் கேட்கிறாள்.
" இவர் பித்தர் அல்ல, திருவரங்கனின் தொண்டர். அவனைத் தவிர ஒருவரையும் ஏறெடுத்துப்  பார்க்கமாட்டார். இவரிடம் உன் அழகு ஒன்றும் செய்யாது."
தமக்கை சொல்கிறாள்.
கர்வம் கொண்ட தேவதேவி,
"அப்படியா, பார்த்து விடுகிறேன். இவரை என் அழகுக்கு மயங்க வைத்து, என்னுடைய  அடிமை ஆக்கி விடாவிட்டால் என் பெயர் தேவதேவி அல்ல"
சபதம் இடுகிறாள் தேவதேவி.
அரங்கன் இந்த நாடகத்தைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.
தன்னுடைய நாடகத்தை நடத்த துவங்குகிறான்.
மறுநாளே தன்னுடைய கோலத்தை சாத்விகமாக மாற்றிக் கொண்டு, விப்ரநாராயணர்  திருவடிகளை வணங்கி,
"நான் ஒரு தேவதாசி, என்னுடைய வாழ்க்கையை வீணடித்துவிட்டேன்.
உங்களைப் பார்த்த பின் உங்கள் அடிமையாக இருக்க ஆசைப் படுகிறேன். என்னை உங்கள்  அடிமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு சேவை செய்வதே  என்னுடைய  பாவங்களைப் போக்கும், என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்"
என்று மன்றாடுகிறாள்.
எவ்வளவோ சொல்லியும் தேவதவி கேட்காததால், வேறு வழியின்றி,
"என்னுடைய ஆசிரமத்துக்கு வெளியே இருந்து தோட்டத்தை கவனித்துக்கொள்"
என்று அனுமதித்தார்.
காலங்கள் ஓடின!!
ஒருநாள்!!!
மழை! ஊழி மழை! நிற்கிற வழியாகக் காணோம்.
ஆசிரமத்துக்கு வெளியே மழையில் நனைந்தபடி, தோட்டத்தில் நின்று கொண்டிருந்த  தேவதேவியை பார்க்கிறார்.
"ஆசிரமத்துக்கு உள்ளே வா, இந்த ஆடைகளை உடுத்திக் கொள்"
விப்ரநாராயணர் ஆணையிடுகிறார்.
"இதுக்குத் தானே இத்தனை நாட்கள் காத்துக் கொண்டிருந்தேன்",
என்று நினைத்த தேவதேவி, ஆடைகளை தரித்துக் கொண்டு,
விப்ரநாராயணர் திருவடிகளை வருட, காமதேவன் வசப படுகிறார்.
தான் எதுக்காக வந்தோம் என்பதை மறந்து, சிற்றின்பத்தில் ஈடுபடுகிறார்.
தோட்டத்தை மறந்தார், தேவதேவியே எல்லாம் என்று நினைத்து
காலத்தைக் கழிக்கிறார். அனைத்துச் செல்வங்களையும் இழந்த நிலையில்,
"இனி உனக்கு இங்கு இடமில்லை, வெள்யே போ"
திண்ணைக்கு விரட்டி விடுகிறாள் தேவதேவி.
இத்தனையும் காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்த அரங்கனின் துணைவி, நாச்சியார்,
"விளையாடியது போதும், நம் பக்தனை மீண்டும் நம் தொண்டுக்கு கொண்டு
வாருங்கள்"
என்று அரங்கனுக்கு ஆணையிடுகிறாள்.
நாச்சியார் கடாட்சம் இருந்தால் அதற்குப் பிறகு, "மறு வார்த்தை ஏது? இப்போதே அதற்கு வேண்டியதைச் செய்வோம்" என்று அரங்கனும், தன்னுடைய தங்க வட்டில் ஒன்றை  எடுத்துக் கொண்டு சிறுவன் வடிவில் தேவதேவியிடம் சென்று,
" நான் விப்ரநாராயணனின் தூதன், அவர் இந்த வட்டிலை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்"
என்று வட்டிலை கொடுக்கிறார்.
மறுநாள் கோயிலில் வட்டிலைக் காணாமல், அரசன் பரிஜாதகர், மற்றும் காவலாளிகளைத் தண்டித்தான். அவ்வழியே வந்த தேவதேவியின் தோழி என்ன நடக்கிறது என்பதை  விசாரித்து,
"தங்க வட்டில் தேவதேவியின் தலையணைக்கு அருகில் உள்ளது, இவர்களை
தண்டிக்காதிர்கள்" என்று அரசனிடம் தெரிவிக்கிறாள். உடன் அரசன் தேவதேவியை விசாரிக்க
"விப்ரநாராயணர் தான் அவருடைய தூதன் மூலம் கொடுத்தனுப்பினார்"
என்று அவரைக் காண்பிக்கிறாள்.
"எனக்கு தூதனே கிடையாது"
என்று எத்தனை முறை மன்றாடியும் அரசன் கேட்காமல், விப்ரநாராயணரை சிறையில் அடைத்து  விடுகிறான்.
அன்று இரவில் அரசன் கனவில் அரங்கன் தோன்றி, உண்மையைக் கூறி,
"விப்ரநாராயணர் குற்றமற்றவர், அவரை விடுவித்துவிடு"
என்று தன்னுடைய நாடகத்தைக் கூறி அவரை விடுவிக்கிறான்.
சம்சாரத்தின் தாழ்ச்சியையும், பெருமானின் கருணையையும் உணர்ந்த விப்ரநாராயணர், அதற்கு பிராயச்சித்தமாக தொண்டர்களின் பாததூளியையும், ஸ்ரீபாத தீர்த்தத்தையும்  கொண்டாடுகிறார்.
அதனால் "தொண்டரடிப்பொடி ஆழ்வார் " என்று பெயர் பெறுகிறார். தேவதேவியும் திருந்தி
கோவிலுக்கு தொண்டு புரிந்து தன் வாழ்நாளைக் கழிக்கிறாள்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார், அரங்கனைத் தவிர யாரையும் பாடாத்வர்.
அரங்கனுக்காக 45 பாசுரங்கள் கொண்ட "திருமாலை" பாசுரத்தைப் பாடியுள்ளார்.
தமிழில் அரங்கனுக்கு என "திருப்பள்ளியெழுச்சி" என்ற பாசுரம் பாடியுள்ளார்.
தமிழில் அதற்குப் பிறகுதான் பலரும் திருப்பள்ளியெழுச்சி பாடியுள்ளார்கள் என்றால்  தொண்டரடிபொடி ஆழ்வாரின் மகிமையின் வலிமையைப் பாருங்கள்.
வேறு எந்த அர்ச்சா ரூப பெருமானுக்கும் அமையாத விசேஷம் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள். திருமாலை அறியாதார் திருமாலையே அறியாதவர் என்ற ஒரு சொற்றொடர் கூட
வழக்கில் உள்ளது என்றால் இவருக்கு உள்ள மகிமையைப் பாருங்கள். 


திங்கள், 18 ஜூன், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-12. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!


பெரியாழ்வார்!!
பெரியாழ்வார்


திருவில்லிப்புத்தூர் என்னும் பாண்டிய நாட்டில் முகந்த பட்டர்
என்னும் சோழிய பிராமணர் இருந்தார். அவர் பதுமவல்லி என்னும்
பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது.
விஷ்ணுசித்தர் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.
இயல்பாகவே வாடா பெருங்கோவிலுடையானிடம் பக்தி கொண்டு இருந்தார்.அவருக்கு நந்தவனத்தில் இருந்து புஷ்பங்களைப் மாலையாகக் கட்டி பெருமானுக்குச் சாற்றுவதை  வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அந்தசமயத்தில் பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் ஓர் இரவு
நகர்வலம் வரும்போது  திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு
வழிபோக்கனைக்  கண்டான். அவனை எழுப்பி “நீ யார்?”  என்று கேட்டான்.
அந்தப் புதியவன் “ஐயா!  நான் ஒரு அந்தணன். கங்கையில் நீராடி
வருகிறேன்“ என்றான். மன்னன் அவனை “உனக்குத் தெரிந்த நீதி ஏதும்
உண்டாகில் சொல்“ என்று கேட்டான். அவனும் “மழைக்காலத்தின்
தேவையை மற்ற எட்டு மாதங்களில், இரவின் தேவையை பகலில்,
முதுமையின் தேவையை இளமையில்,  மறுமையின் தேவையை
இம்மையில் தேட முயற்சி செய்ய வேண்டும்“ என்றான். மன்னன்
மறுநாள் தன் குலகுருவான செல்வநம்பியிடம் இரவு நடந்தவை
சொல்லி “மறுமைக்காக நாம் செய்ய வேண்டிய முயற்சி என்ன?”  என்று கேட்டான்.
செல்வநம்பி “நாட்டின் சான்றோரைத் திரட்டி அவர் முன் இக்கேள்வியை
வைப்போம். சரியான விளக்கம் தருவோருக்கு தக்க பரிசாக பொற்கிழி
அளிப்போம்“ என்றான். மன்னனும் மிகுந்த பொற்காசுகளை கொண்ட
பொற்கிழியை ஒரு தோரணத்தில் கட்டி சான்றோரைத் திரட்ட
ஆணையிட்டான்.
ஸ்ரீவில்லிப்புத்தூரிலே பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய
எம்பெருமான் ஸ்ரீ வல்லபத்தேவன் அரசவையில் நடந்த விபரங்களைக்  கூறி
கிழியை அறுத்து வாவென்றார். இது இறைவன் ஆணை என மதுரைக்குப் புறப்பட்டார்.
மதுரையில் ஆன்றோர் நிரம்பிய மன்னனின் அவையை அடைந்தபோது
அரசனும் செல்வநம்பியும் அவரை வரவேற்று பணிந்தனர். அங்கிருந்த
மற்ற அறிஞர்கள் வேதங்களின் சாரம் அறியாதவரை வேந்தன்
வரவேற்பதா?  என்று சலசலத்தனர். ஆழ்வாரும் உண்மையான பரம்பொருள்
திருமாலே என்றும் வைஷ்ணவமே முக்தியளிக்கும்  மதம் என வேதத்தை எடுத்து உவமானம் கூற பொற்கிழி தானாகவே வளைந்து கொடுத்தது.
ஆழ்வாரும் வேந்தரும் மாந்தரும் வியக்க விரைந்து கிழியறுத்தார்.
இது கண்ட மன்னனும், நம்பியும், மற்றுள்ள ஆன்றோரும், மக்களும்
அவரைப் பணிந்தனர். மன்னன் இவருக்கு பட்டர்பிரான் என்ற விருது
கொடுத்து யானை மேலேற்றி “வேதப்பயன் கொள்ள வல்ல மெய்நாவன்
வந்தான்“ என்ற விருது ஊதச்செயது தானும் தன் பரிவாரங்களும்
உடன்வர நகர்வலம் வந்தான். இக்கோலகலத்தைக் காணுமாறு தன்
மக்களை அரசன் பணித்தபோது தன்னுடைய பக்தனின் மாட்சிமை காண
வந்தாற்போல் ஸ்ரீமன் நாராயணன் கருடன் மீதேறி, பிராட்டியருடன்,
தனக்குரிய ஆயுதங்கள் தரித்து, பிரம்மா ஆருத்ரன் மற்றும் இந்திரன்
முதலான தேவர்கள் துதிக்க காட்சி தந்தார்.






ஆழ்வார் எமபெருமானின் கண்ணுக்கினிய பேரழகைக் கண்டு மனமகிழ்ச்சி அடைந்தாலும், அவர் மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி, தான் அமர்ந்திருந்த யானையின் கழுத்து மணியைத் தாளமாகக் கொண்டு, “பல்லாண்டு  பல்லாண்டு பல்லாயிரமாண்டு பலகோடி நூறாயிரம்” என வாழ்த்தி திருப்பல்லாண்டு பாடி அருளினார்.
மன்னன் மற்றுள்ள பக்தர்களையும் தன்னோடு பாடச்செய்தார். இந்த திவ்ய தேசத்தில் விளைந்த இப்பல்லாண்டு தான் எல்லாத் தலங்களிலும் இறைவனுக்கு திருப்பல்லாண்டாக முதன் முதலில் பாடுவதாக  அமைந்து விட்டது. இவர் கண்ணனது திருஅவதாரச் செயல்களை போற்றி 44  திருமொழிகளாகப் பாடினார்.
இவற்றின் மொத்த பாசுரங்கள் 461 ஆகும். திருப்பல்லாண்டு பாசுரங்கள் 12 ஆகும்
மொத்தம் சேர்த்து 473 பாசுரங்கள். இவருடைய பாசுரங்கள்
பெரியாழ்வார் திருமொழி என்று அழைக்கப்பட்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தில்  முதலில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் பாடிய தலங்கள்
1. திருவரங்கம்
2. திருவெள்ளறை
3. திருப்பேர்நகர்
4.கும்பகோணம்
5. திருக்கண்ணபுரம்
6. திருச்சித்திரக்கூடம்
7. திருமாலிருஞ்சோலை
8. திருக்கோட்டியூர்
9. திருவில்லிப்புத்தூர்
10. திருக்குறுங்குடி
11. திரு வேங்கடம்
12. அயோத்தி
13. சாளக்கிராமம்
14. பத்ரிநாத்
15. தேவப்ரயாகை
16. துவாரகை
17. மதுரா
18. ஆய்ப்பாடி
19. திருப்பாற்கடல்
20. பரமபதம்.
 உபதேச ரத்தின மாலையில்,
                 உண்டோ திருப்பல்லானுக்கு ஒப்பதோர் கலை தான்?
      உண்டோ பெரியாழ்வார்க்கொப்பொருவர்?
                தண் தமிழ் நூல் செய்தருளுமாழ்வார்கள்
      தம்மில் அவர் செய்கலையில்
  பைதல் நெஞ்சே! நீ புணர்ந்து பார்
என்கிறார்.
அரங்கநாதன்

அரங்கனுக்கு என 35 பாசுரங்கள் பாடியுள்ளார். அரங்கனைக் கண்ணனாக நினைத்துக் கொண்டு பாடிய பாசுரங்கள் நிறைய. நமன் தன்னைப் பற்றும் போது, அரங்கனை நினைப்போமோ  இல்லையோ, அதனால் இப்போதே சொல்லி விட்டேன், அதனால் நீ என்னை மறக்காமல்  அந்த சமயம் அவனிடமிருந்து என்னைக்காக்க வேண்டும் என்று அரங்கனுக்கே அதிகாரம்
செய்கிறார்.

திங்கள், 11 ஜூன், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-11. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-11. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!
நம்மாழ்வாரின் சரித்திரம். 
 
நம்மாழ்வார், 7ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் அவர் சேனைத்தலைவர் அம்சமாகப் பிறந்தார். தற்போதுள்ள பாண்டிய நாட்டில் உள்ள ஆழ்வார் திருநகரி என்ற திருக்குருகூர் தலத்தில்  அவதரித்தார்.
நம்மாழ்வார், அவதரித்தபோது வாய் திறந்து அழக்கூட இல்லாததால் அவரை இறைவன்  திருவடிகளில் சமர்ப்பித்தனர். அவர் தானாகவே தவழ்ந்து சென்று அருகில் உள்ள  புளியமரத்தின் பொந்தில் போய் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து இருந்தார். அவர் அவ்வாறு  16 ஆண்டு காலம் மோனத்தில் இருந்தார்.
இந்த சமயத்தில் அயோத்தியில் மதுரகவி ஆழ்வார் தெற்குதிசையில் இருந்து ஒரு  அதிசய ஒளியைக் கண்டார்.அதை நோக்கி தன் பயணத்தை மேற்கொண்டார்.
கடைசியில் நம்மாழ்வார் அமர்ந்து இருந்த புளிய மரத்தை அடைந்தார் .
மதரகவியாழ்வாரும் புளிய மரத்தின் பொந்தில் அமர்ந்து  இருந்த சிறுவன் நம்மாழ்வாரைப் பார்த்தவுடன் இவர் இறைவன் அம்சம் எனக் கண்டு
கொண்டார். நம்மாழ்வாரைப் பேச வைக்க புதிர் ஒன்றை வினவினார்.

நம்மாழ்வார்-மதுரகவியாழ்வார்


"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,எதைத் தின்று? எங்கே கிடக்கும்?"

இக்கேள்வியைக் கேட்டவுடன், நம்மாழ்வார், முதன் முறையாகத் தன் திருவாய் திறந்து, விடையளித்தார்.

"அதைத் தின்று; அங்கே கிடக்கும்."

அதாவது, "செத்தது" என்பது நம் உடல்; "சிறியது" என்பது உயிர். உயிரானது உடலினுள்  இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும். என்று, அந்த உயிர் உண்மையை (தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது  இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே
நீங்கா நிலைத்துவிடும்.
பதிலைக் கேட்டதும், மதுரகவியாழ்வாருக்கு, உச்சி குளிர்ந்து, உண்மை விளங்கியது.
அப்பதிலால் ஈர்க்கப்பட்ட மதுரகவியாழ்வார், அந்த கணமே நம்மாழ்வாரின்
திருப்பாதத்தில் விழுந்து வணங்கி,

"என்னைத் தங்கள் சீடனாக ஏற்று, இப்பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க
அருள் புரியவேண்டும்," என்று வேண்டினார்.
நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரைத் தன் சீடனாக ஏற்று அருள் புரிந்தார். நம்மாழ்வார்  பாடும் பாசுரங்களை எல்லாம் ஏட்டுச்சுவடியில் எழுதியவரும், அதை மதுரமான இசையில் பாடியவரும் நம் மதுரகவியாழ்வாரே.
ஆனால், அதற்கு பிறகும் கூட, நம்மாழ்வார் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.

நம்மாழ்வார்

நம்மாழ்வார் தான் இருந்த இடத்தை விட்டு எங்கேயும் போனதில்லை.
எம்பெருமானின் 108 திவ்ய தேசங்களைப் பற்றி நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை  எல்லாம் பாடத்துவங்கின போது, மகாவிஷ்ணு, அன்னை லெட்சுமி தேவியுடன், தன் கருட வாகனத்தில் காட்சியளித்தனர்.
அது மட்டுமல்லாமல், திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில்  தோன்றின.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட (1102) பாடல்கள் நம்மாழ்வாரால்  பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,திருவிருத்தம் -
 இது 100 பாசுரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில், அவர் ரிக் வேதத்தினுடைய  சாராம்சங்களை அமைத்துள்ளார்.
திருவாசிரியம் - இந்நூல் மிகக் குறைவான பாடலைக் கொண்டுள்ளது. அதாவது  7 பாடல்கள் உள்ளன. இதில் யசூர் வேதத்தின்  அம்சங்களைக்கொடுத்தருளியிருக்கிறார்.
பெரிய திருவந்தாதி - இதில் 87 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் அதர்வண வேதத்தின்  கருத்துகளை ருசிக்கலாம்.
விருத்தம், ஆசிரியம், அந்தாதி ஆகிய மூன்றும், ஒரு வகையான செய்யுள் ஆகும.
அவை இறைவனின் பெயரில் பாடப்பெற்றவையால், அவற்றிற்கு திரு என்னும்  அடைமொழி சேர்த்து திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்று அழைக்கப்படுகின்றன.
திருவாய்மொழி - இதில் 1102 பாடல்கள் உள்ளன. இவற்றில் சாம வேதத்தின் சங்கதிகளை சுவைக்கலாம்.
இவ்வாறு, ரிக், யசூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து  தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய  அருளிச்செய்ததினால், நம்மாழ்வார, 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து  இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம்.
இவர் இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் வைத்து பாடினார்.
தாமிரபரணி ஆற்றின் நீரைக் காய்ச்சி ஒரு உருவம் செய்யச் சொன்னார். அதை பார்த்த மதுரகவியாரும், "இது தங்களைப் போல இல்லையே?" என்றார்.
"ஆம்! இது நாம் அல்லோம்! இது நம்மைப் போல் ஒருவன்! நம்மை அத்தனை பேருக்கும்  எடுத்துச் சென்று சேர்க்கப் போகிறவன்!
 "பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்! கலியும் கெடும் கண்டு கொண்மின்" என்று" பின்னாளில் தோன்றப் போகிற உடையவன் இவனே! இவன் பெயர் 
"பவிஷ்யதாச்சார்யன்! "பின்னாள் ஆசான்!" என்று கூறினார்.
"இவர் தான் பின்னாளில் அரங்கனுக்குத் திருத்தொண்டுகள் செய்து பெறும்
புகழ் பெரபோகிறார். இவரை நாளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லுங்கள்"
என்று மதுரகவியாரிடம் சொல்லி விட்டு, மறுமுறை தண்ணீரைக் காய்ச்சி
தன் உருவத்தையும் செய்யச் செய்தார்.
குலமுதல்வன் முதல் தாய் என்றால் ராமானுஜன் வளர்த்த தாய் என்பார்கள்.
          வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்
             ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
          முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
             இதத்தாய் இராமானுசன்!


நம் மாறன், இப்படியே இறைவனைப் பற்றிய இன்சிந்தனையோடு 35 ஆண்டு காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்தார் . அதன் பிறகு இவர் விருப்பத்திற்கிணங்க, இறைவனும் வைகுண்ட ஏகாதசி அன்று இவருக்காகவே சொர்க்கவாசலைத் திறந்து வைத்திருந்து,
நம்மாழ்வாரைத் தம்மொடு இரண்டறக் கலக்கச் செய்துவிட்டார்.

நம்மாழ்வார் அரங்கன் மீது 12 பாசுரங்களை இயற்றி உள்ளார்.

நம்மாழ்வார் கண்ணனைப் பற்றி பாசுரங்கள் பாடியுள்ளார்.

 

புதன், 16 மே, 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-10. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-10. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

குலசேகரஆழ்வார்பிறந்தஊர்
பாம்புக் குடத்தில் கை இட்டவர்.
ஏன் பாம்புக் குடத்தில் கை இடவேண்டும்?
ஏதாவது வேண்டுதலா?அதுக்குன்னு ஒரு பாட்டா?ஆமாங்க! பாம்புக் குடத்தில் கை இட்டும் அவரைப் பாம்பு கடிக்கவில்லைன்னா
பாருங்க!!
வேண்டுதல்லாம் இல்லங்க!! தான் தப்பு செய்துட்டோமோன்னு தன்னைத்தானே வருத்திக்கொள்ள இந்த மாதிரி செய்துட்டவர்.
இப்படியெல்லாம் கூட மக்கள் இந்தக காலத்தில் உண்டா? அப்படின்னு நீங்க
கேட்கறது காதுலே விழுது.
இதெல்லாம் நடந்தது இன்னிக்கு இல்லைங்க,
குலசேகர ஆழ்வார்,
அவர்தான் இத்தனையும் செய்தவர்.
கீழே உள்ள பாசுரத்தைப் படியுங்க, உங்களுக்கே புரியும்.
       "ஆரம் கெடப்பரன் அன்பர் கொள்ளார்* என்று அவர்களுக்கே
              வாரம் கொடு குடப் பாம்பில் கையிட்டவன்* மாற்றலரை
        வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன்* வில்லவர்கோன்
              சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகாமணியெ.
மேலே குறிப்பிட்ட பாடல் அவரைப் பத்தித்தான்
அது குலசேகர ஆழ்வார் பற்றிய சரித்திரம் தெரிந்தால் உஙகளுக்குப் புரிந்துவிடும்.
அது என்னய்யா சரித்திரம் என்கிறீர்களா?
குலசேகரர் சேரநாட்டை ஆண்டு வந்தார்.அவர் வீரமும் விவேகமும் உடைய அரசராக  சிறப்பாக ஆண்டு வந்தார். கடவுள் பக்தி உடையவர்.
ரங்கனாதரிடம் தீவிர பக்தி கொன்டவன்.இவருடைய பக்தி மற்றும் ஆற்றலைக் கண்டு  பான்டிய ராஜா தன் பெண்ணை இவருக்கு மணம் முடித்தான். இவருக்கும் ஒர் ஆண் மகவு  பிறந்த‌து. மகனுக்கு திடவிரதன் என்று பெயர் சூட்டினான்.
நாளாக நாளாக,போரில் பல உயிர்கள் மடிவது குலசேகருக்கு வேதனையைக் கொடுத்தது.
ராமனைப் பற்றி உபன்யாசஙகள் கேட்பதில் ஆர்வம் கொன்டவனாக
இருந்தான்.அந்த சமயத்தில் உபன்யாசகர், ராமன் அசுரர்களை அழிக்க இலக்குமணனை சீதா
பிராட்டிக்கு காவல் வைத்து விட்டு சென்றதை விவரித்துக் கொன்டிருந்தார்.
இதைக் கேட்ட,குலசேகரர உடனே தன் சேன்யங்களை ராமனுக்கு உதவச் செல்லும்படி ஆணை இட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உபன்யாசகர் ராமர் தனியாகவே  அசுரரகளை வென்று விட்டார், மற்றும் இது நடந்தது திரேதாயுகத்தில், இப்போது அல்ல  என்று சொல்ல பின்பு தான் அமைதியானார் என்றால் பார்த்துக்கொள்ளுஙகள்.
இவர் அனுதினமும் பூஜை செய்வதற்காக ஒரு ராமர் விக்கிரஹத்தை சிலை வடிவத்தில்  செய்து பூஜித்து கொன்டே இருந்தார், நாட்டின் மீது அக்கரை இல்லாமல் இருந்து வந்தார்.
இதை அறிந்த அமைச்சர்கள்,இப்படியே போனால் நாட்டின் நிலைமை மோசமாகிவிடும்  என்று நினைத்து, ராமர் விக்கிரஹ்த்தின் மேல் இருந்த ஒரு நவரத்தின மாலையை எடுத்து  ஒளித்து வைத்து விட்டு, அந்தப் பழியை விஷ்னு பக்தர்கள் மேல் போட்டு விட்டனர்  என்றால் பாருங்கள்.
இதை அறிந்த குலசேகரர், புழுவாகத் துடித்தார். "விஷ்ணு பக்தர்கள் ஒரு நாளும் அப்படிச் செய்து இருக்கமாட்டார்கள். அவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப் பட மாட்டார்கள்" என்று திடமாக நம்பினார்.
இதனை மெய்ப்பிக்க உடனே மெய்க்காவலர்களைக் கூப்பிட்டு ஒரு குடத்தை எடுத்து  வரச் சொன்னார். அதில் ஒரு பாம்பை போட்டார். "விஷ்ணு பக்தர்கள் மாலையை எடுத்து  இருந்தார்கள் எனில் இந்தப் பாம்பு என் கைகளைக் கடிக்கட்டும" என்று கைகளை  குடத்துக்குள் விட்டார். என்ன அதிசியம் பாருங்கள்!
பாம்பு அவரை ஒன்றும் செய்யவிலை.
இதனைக் கணட‌அமைச்சர்கள் மறைத்து வைத்திருந்த மாலையை திருப்பிக் கொடுத்து  தாங்கள் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டனர் என்றால் பாருங்கள்.
இதனைத் தான்
 "வாரம் கொடுகுடப் பாம்பில் கையிட்டவன்"
என்று தனியனாக முன்னர்  பார்த்தோம்.
இப்போது புரிந்ததா, குலசேகரனின் விஷ்ணு பக்தி?
இதனால் மனம் நொந்த குலசேகரர் அரசாட்சியை தன்னுடைய புதல்வனிடம் அளித்து விட்டு,இராமபிரானின் பல்வேறு புனிதத் தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டார்.
இராம பிரானைப் போலவே அரங்கனாதனிடமும் பக்தி கொண்டிருந்தார். தான் நீண்ட நாள்  ஆசைப்படி திருவரங்கத்தில் தங்கி எம்பெருமானை சேவித்து, அவ்வழகிய மணவாளனையே தான் திருமகள் சேரகுலவல்லிக்குத் மணம்செய்வித்தார்.
இன்றும் ஸ்ரீராமநவமி அன்று  அரங்கன் சேரகுலவல்லி நாச்சியாரோடு சேர்த்தி கண்டருளுகிறார். குலசேகரன் வீதி என்று  வழங்கும் மூன்றாவது பிரகாரத்தை அரங்கனுக்குக் கட்டினார்.
திருவேங்கடவனைப் பற்றிப்  பாடும்போது, எழுமலையில் மீன், செண்பகப்பூ, பொன்வட்டில் போன்ற ஏதேனும் ஒன்றாக  இருந்து,
    "படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே"
என்று பெருமானின் முன்னே படியாக இருக்க வேண்டினார். பெருமானும் இவர் பக்தியை மெச்சி  திருவேங்கடவன் முன்னால் உள்ள படிக்கு இவர் பெயரே வைத்து,
"குலசேகரன் படி"
என்றே அருளினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பெருமாளிடம் அதிக பக்தி கொனண்டிருந்ததாலோ என்னவோ,
இவர் "குலசேகரப் பெருமாள்" என்று அழைக்கப்பட்டார்.
குலசேரகப்பெருமாள், பெருமாள் மீது பக்தி சொட்ட சொட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
அவை "பெருமாள் திருமொழி" என்று அழைக்கப்படுகிறது.
105 பாசுர‌ங்கள் கொண்டதாகும் அது.
இதில் அரங்கனாதனைப் பற்றி முதல் திருவந்தாதியில் பதினோரு பாசுரங்கள் பக்தி சொட்ட சொட்ட பாடியுள்ளார் என்றால் பாருங்கள்.
மேலும் கண்ணபிரானைப் பற்றி வடமொழியில் " முகுந்த மாலை" என்ற பக்தி ரசம்  சொட்டும் பாசுரங்களையும் பாடியுள்ளார். இதில் என்ன முக்கியமானது என்றால்  வடமொழியில் பாசுரங்களை இயற்றிய ஒரே ஆழ்வார் "குலசேகர ஆழ்வார்" மட்டுமே.
குலசேகர ஆழ்வாரை பெருமாள் அணியும் கெளசத்துபம் என்ற மாலையின் அம்சமாகக்  கருதுவார்கள்.
குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்வசு நக்ஷத்திரத்தில் திருவஞ்சிக்களம் என்ற‌
ஊரில் (கேரளாவில் திருச்சூருக்கு அருகாமையில் உள்ளது) பிறந்தார்.
குலசேகர ஆழ்வார் ராமாவதாராம் பற்றி விஸ்தாராமாக பாசுரங்களாகப் பாடியுள்ளார்.
குலசேகர ஆழ்வார்

திங்கள், 7 மே, 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-9. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!




ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-9. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

"உறையிலாடதவர்" யார்?
ஏன் அவருக்கு அப்படிப் பெயர் வந்தது?
பெருமாள் அவருக்கு பயப்படுவாராமே? அவர் சொன்னால் கேட்பாராமே?
எல்லாம் திருமழிசையாழ்வார் பற்றித்தான் !!!
திருமழிசைமற்றும் திருமழிசை பெருமான்

திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார் அந்தர்யாமி தத்துவத்தையே முக்கியமாகக் கொண்டு அரங்கனுக்கு  என்று பத்துப் பாசுரங்களை இயற்றி உள்ளார்.
திருமழிசையாழ்வார் யார்?
திருமழிசை என்னும் ஊரில் பார்கவ முனி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் புத்திர பாக்யம்  வேண்டி யாகம் இயற்றி, அவர் மனைவியும் கருவுற்றார். 12 மாத கர்ப்ப காலத்திற்குப் பிறகு, முழுமையற்ற நிலையில் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் இருந்ததால், அதை ஒரு மூங்கில் புதரில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
அவர்கள் சென்ற பின்பு, அன்னை மகாலெட்சுமி, அய்யன் விஷ்ணுவுடன் வந்து
அக்குழந்தையை எடுத்து ஆசீர்வதித்து விட்டுச் சென்றனர்.
அவர்களின் அருளால் அக்குழந்தை ஞானமும், முழு வடிவமும் பெற்றது. அவரது வலது  கால் கட்டை விரலில் கூடுதலான ஒரு கண்ணும் இருக்கும். அவ்வழியே வந்த ஹரிஜன இனத்தைச் சேர்ந்த திருவாளன் என்பவர், ஸ்ரீமன் நாராயணின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றான சுதர்சன சக்கரத்தின் அம்சமான அக்குழந்தையை  வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அக்குழந்தையைக் கண்டவுடன் அவரது மனைவியார்  பங்கயச்செல்வி மிகவும் மகிழ்ந்து, தங்களின் குழந்தையற்ற குறையை நீக்கவே  இக்குழந்தை வந்தது என்று எண்ணி அக்குழந்தையை வளர்க்க முடிவு செய்தனர்.
அவர் துணைவியார், அக்குழந்தைக்கு பாலமுது கொடுக்க முயன்ற போது குழந்தை, உணவு உண்ண மறுத்து விட்டது. பல நாள்கள் உணவு
உ ண்ணாமல் இருந்தும் அதன் உடல்நிலை எவ்வித மாறுதலும் இன்றி, நன்றாகவே  இருந்தது. இச்சம்பவம், ஊர் முழுவதும் பரவி, பலர் அக்குழந்தையைக் காண வந்து  சென்றனர்.

ஒரு நாள், குழந்தை பாக்கியமற்ற, வயது முதிர்ந்த தம்பதியர் வந்து அக்குழந்தையைக்  கண்டனர். அவர்கள் குழந்தைக்கு, பாலமுது கொடுத்த போது அக்குழந்தை அதை ஏற்றுக் கொண்டது. ஒருநாள், முதியவர் ஒருவரும் வந்து அக்குழந்தையைக் கண்டார்

அக்குழந்தையின் முகத்தில் தெரிந்த ஞான ஒளியைக் கண்ட அவர், இது எம்பிரான் அருள் பெற்ற, தெய்வக்குழந்தை என்று குறிப்பிட்டு, அக்குழந்தை மிச்சம் வைக்கும் பாலை, அந்த வயது முதிர்ந்த தம்பதிகள்  உண்டால் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும் கூறினார். அதைப் போலவே,  அவர்களும் செய்து, ஒரு ஆண்மகவை ஈன்றனர்.
அக்குழந்தைக்கு கனி கண்ணன் என்று பெயர் சூட்டினர்.

கனி கண்ணன், வேதங்கள், சமய நூல்கள் அனைத்தும் நன்கு கற்றான். அவன் திருமழிசை  ஆழ்வாரின் நெருங்கிய நண்பனாகவும், நாளடைவில் அவரையே குருவாகவும்  ஏற்றுக்கொண்டான்.

பேயாழ்வார், திருமழிசையாழ்வாருக்கு, பக்தி சாரர் என்னும் திருப்பெயரிட்டு அழைத்தார். அதன்பின், திருமழிசையாழ்வார் பல திருத்தலங்களுக்குச் சென்று ஆனந்தக்கண்ணனைக்  கண்ணார தரிசித்து, திருவேக்கா என்னும் ஊரை வந்து அடைந்தார்.
யதோத்தகாரி சன்னதியில் தியான நிலையில் இருந்தார்.
அங்கு, அவருக்குப் பொறுப்பாக அனைத்துப் பணிவிடைகளும் செய்த ஒரு மூதாட்டியின்  அன்பிற்கு மெச்சி, அவருக்கு ஒரு வரம் அளிப்பதாகக் கூறினார். அதைக்கேட்ட  அம்மூதாட்டி, தனக்கு இந்த வயோதிகத் தோற்றம் பிடிக்கவில்லை என்றும், தான் என்றும்  இளமை மாறாத அழகிய இளம்பெண்ணாக இருக்க வரம் தந்தருள வேண்டும் என்று
வேண்டினார். அவர் வேண்டுதலைக் கேட்ட ஆழ்வாரும் அவ்வாறே அருளினார்.
ஒருநாள் நகர்வலம் வந்த பல்லவ மன்னன், அவ்விளம் பெண்ணைக் கண்டு, அவள்  அழகில் மயங்கி, அவளையே மணந்தான்.
ஆண்டுகள் பல கழிந்தன. மன்னனுக்கு மூப்பு நிலை வரத்துவங்கியது. ஆனாலும்,  அவன் மனைவி, அதே இளமை மாறா அழகுடன் இருந்தாள். இதைக்கண்டு அதிசியத்த  பல்லவ மன்னன், அவளின் இளமையின் இரகசியத்தைக் கேட்டான். அவளும்,  திருமழிசையாழ்வாரின் பெருமையை எடுத்துக் கூறினாள்.

மறுநாள், மன்னன் தன் சேவகர்களை அனுப்பி திருமழிசையாழ்வாரை அழைத்து  வரச்சொன்னார். அவர் வர மறுத்து விட்டார். மீண்டும், ஆட்களை அனுப்பினார்.
கனிகண்ணன், அங்கு சென்றார்.மன்னன், கனி கண்ணனிடம், 'என்னைப் புகழ்ந்து  உன் குரு பாட வேண்டும்', என்று கூறினார்.ஆனால், கனி கண்ணனோ,
'எம் குருநாதர் எம்பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் பாட மாட்டார்
என்று கூறினார்.சரி போனால் போகட்டும் விடு நீயாவது என்னைப் பற்றி பாடு"
என்று மன்னன் கனிகண்ணனிடம் ஆணையிட்டார்.
ஆனால் கனிகண்ணனோ பாட மறுத்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன்,
 அவரை அந்த ஊரில் இருக்கக் கூடாது என்று கட்டளையிட்டார்.
கனிகண்ணன் விரைந்து திருமழிசையாழ்வாரிடம் வந்து, அரண்மனையில்
நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, தான் திருவேக்காவை விட்டுப் புறப்படுவதாகவும். அதற்காகத் தன்னை மன்னித்து ஆசி அருள வேண்டும் என்று வேண்டினார்,

கனிகண்ணனார். திருமழிசையாழ்வார் தானும் உடன் வருவதாக கனி கண்ணனிடம் கூறி,  உடன் புறப்பட்டார். புறப்படும் வேளையில், காஞ்சியில் வீற்றிருந்த எம்பெருமானை உடன்  வருமாறு ஆணையிட்டார், ஆழ்வார்





யதோக்காரி பெருமான்

"கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்"
என்று பாடினார் திருமழிசையாழ்வார்.

அவர் சொன்னவுடன், எம் பெருமானும் அவர்களுடன் புறப்பட்டுப் போய்விட்டார். கனிகண்ணன் ஊரை விட்டுச் சென்றதால், காஞ்சி மாநகரம் தன் பொலிவை எல்லாம்  இழந்து, ஒரே நாளில் நலிவுற்றுவிட்டது. மறுநாள் காலை, பணியாளன் ஒருவன் விரைந்து வந்து மன்னனிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினான். அனைத்தையும்  அறிந்த மன்னன், தன் தவற்றை உணர்ந்து அவர்களைத் தேடிச் சென்று, அவர்களின்  காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, அவர்களை மீண்டும் காஞ்சிக்கு வர வேண்டினான்.
அவர்களும், மன்னன் கூற்றுக்கு இசைந்து, காஞ்சிபுரம் செல்ல முடிவு செய்தனர்.
இப்பொழுது,

"கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்;
நீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"

என்று ஆழ்வார் கூற, மீண்டும் ஸ்ரீநிவாசன், காஞ்சியில் வாசம் செய்யத் துவங்கினான்.
நம்ம கனிகண்ணன், கமலக்கண்ணன், திருமழிசையாழ்வார் மூணு பேரும் ஓர் இரவு
ஒரு இடத்துல தங்கியிருந்த இடம்தான் 'ஓர் இரவு இருக்கை' அப்படின்னு
அழைக்கப்படுகிறது. அந்தப் பெயர் மருவி தற்காலத்தில், 'ஓரிக்கை' ன்னு சொல்றாங்க.
அதன் பிறகு, சிறிது காலம் கழித்து திருமழிசையாழ்வாரும், கனிகண்ணனும்
திருக்குடந்தை நோக்கிப் பயணித்தனர். அங்கே காவிரியாற்றில் அவர் பாடிய
பாடல்களை இட்ட போது அனைத்தையும் காவிரித்தாய் எடுத்துக் கொண்டு
திருச்சந்த விருத்தம் (120 பாசுரம்) மற்றும் நாண்முகன் திருவந்தாதி (90 பாசுரம்)
ஆகிய இரண்டை மட்டும், திருமழிசையாழ்வாரின் பொற்பாதத்தில்
சேர்ப்பித்தாள். அவர் அவற்றை எடுத்துக் கொண்டு குடந்தை ஆரவமுதப் பெருமாளிடத்தில்  வந்து சேர்ந்தார். செல்லும் வழியில் "பெரும்புலியூர் " என்ற கிராமத்தில் ஓர்  அந்தணர் வீட்டுத் திண்ணையில் சிறிது நேரம் இளைப்பாறினார்.அங்கு வேதம்  ஓதிக் கொண்டிருந்த அந்தணர்கள், ஆழ்வார் பெருமை அறியாமல்,அவர் தாழ்ந்த  ஜாதி என்று நினைத்து, அவர் காதில் வதம் வேதம் விழக கூடாது என்று வேதம்  ஓதுவதை நிறுத்தி விடுகின்றனர். இதனைக் குறிப்பாக அறிந்த ஆழ்வார்,அங்கிருந்து  செல்லத் தொடங்கினார். அந்தணர்கள் மறுபடியும் ஓதுவதற்கு தொடங்க எண்ணி  விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க, மறந்துபோய் தவித்தார்கள்.இதைக் கண்ட ஆழ்வார்,
விட்ட இடத்தை, நினைவு படுத்த எண்ணி அருகில் இருந்த கருப்பு நெல்லை
தன் நகத்தாலே பிளந்து, அச்செயல் மூலம், விட்ட இடத்தை உணர்த்தி அருளினார்.
"க்ருஷ்ணானாம் வரீஹீணாம் நக நிர்பி ந்தம்" என்ற இடம் தான் அது.
இதை உணர்ந்த அந்தணர்கள் அவரை தெண்டனிட்டு மகிழ்ந்தார்கள்  என்பது சரித்திரம்.
ஆராவமுத பெருமான்.
ஆராவமுதன் எம்பெருமான், இவர் எந்த பக்கம் திரும்பினாலும் அந்தப் பக்கம்
திரும்புவானாம். இதை அறிந்த பெரும்புலியூர் அடிகள் இவருக்கு அக்ரபூஜையும்  செய்தாராம். இதைக் கண்ட பலரும் இவரை ஏசினர். உடன் ஆழ்வாரின் திரு  உள்ளத்திளிருந்து பெருமான் தோன்றி அனைவரது வாயையும் அடைத்தான்.
இவரை இறைவனிடம் உரிமையோடு பேசுபவர். அதனால் இவருக்கு " உறையிலாடதவர்"
என்று பட்டம் உண்டு.
   நடந்த கால்கள் நொந்தவோ நடுங்கு ஞால மேனமாய்,
     இடந்தமெய்கு லுங்கவோவிலங்குமால்வரைச்சுரம்
  கடந்தகால்ப ரந்தகாவிரிக்கரைக்கு டந்தையுள்,
     கிடந்தவாறே ழுந்திருந்து பேசுவாழி கேசனே!!
என்று எம்பெருமானை எழுந்திருந்து பேசச் சொன்னார். இதனால் குடந்தைப் பெருமானும்  எழுந்திருந்த நிலையில் "உத்தான சயன" நிலையில் இன்றும் காட்சி அளிக்கிறார் என்றால் ஆழ்வாருக்கு  எவ்வளவு பெருமை செய்து இருக்கிறார் என்பது புரியும்.
இந்த நெருக்கத்தால், ஆழ்வார் தன் பெயரை "திருமழிசைப் பிரான்" என்றும், பெருமாள்  "ஆராவமுத ஆழ்வார்' என்றும் மாற்றிக்கொண்டு விட்டார்கள் என்றால் பாருங்கள்.
பின், திருக்குடந்தையிலேயே தங்கி எம்பெருமான் பெயரில்
மங்களசாசனம் பாடினார்.

ஞாயிறு, 6 மே, 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-8. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

திருக்கோவிலூர் உலகளந்த பெருமான்



ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-8. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

திருக்கோவிலூர் இடைகழியில் நடந்தது என்ன?
அன்று மழை. இடியுடன் கூடிய மழை. ஊழி பெருநீர் என்பார்களே அப்படி ஒரு மழை.!!!
ஆழ்வார்கள் பாடிய பாசுரத்தில் உள்ளது போல் அப்படி ஒரு மழை.
      












 திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்












 ஸ்ரீரங்கம் ஆண்டாள் உலகளந்த பெருமான் தோற்றத்தில்



கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்
             கதுவாய்ப்பட நீர்முகந்து ஏறி எங்கும்
         குடவாய் பட நின்று மழை பொழியும்
             கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
கடலில் இருக்கும் எல்லாத் தண்ணீரையும் மேகங்கள் மொண்டு கொண்டு அப்படியே  மழையாய் பெய்தால் எப்படி இருக்குமோ அந்த அளவு மழை பொழியும் நாள். இருட்டோ கண்ணனைப் மையிருட்டு. எடுத்து ஒட்டிக கொள்ளலாம் போல இருட்டு. யார் முன்னர் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாத இருட்டு. அந்த சமயத்தில், எங்கு ஒதுங்குவது என்று தெரியாமல், சரி இந்த இடைகழி (இடைகழி என்றால் தெரியாதவர்கள்  வீட்டில் உள்ள முன்னோர்களைக் கேட்கவும்.அதனை ரேழி என்றும் அழைப்பர்.) நமக்குப் போதும்  என்று, அந்த சிறிய இடத்தில் மழைக்காக ஒதுங்குவோம் என நினைத்து ஒதுங்கினார்.
அப்போது பார்த்து மற்றொருவரும் அருகில் வந்து, முன்னவரிடம், "நானும் ஓதுங்கலாமா?"
என்று வினவினார்.
முன்னர் ஒதுங்கின நபரும்
"ஒருவர் உறங்கலாம் ,இருவர் நிற்கலாம். எனவே நீங்களும் உள்ளே வாருங்கள்"
என்று வந்தவருக்கு இன்முகம் தந்து அருளினார்.
மழையோ நின்றபாடில்லை.  அந்த சமயம் பார்த்து, மூன்றாமவர், அதே இடத்துக் வந்து, யாரோ இருக்கிறார்கள் என்பதை  உணர்ந்து, அவர்களிடம்,
"நாமோ ஒரு ஏழை, வெளியே மழை எனவே இந்த இடத்தில் நாம் ஒதுங்கலமா?"
என்று வினவினார்.
முன்னர் ஒதுங்கி இருந்த இருவரும், கும்மிருட்டில் ஒருவருக்கொருவர் பார்த்துக்  கொள்வதாக நினைத்துக் கொண்டு,
"ஒருவர் உறங்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்." என்றனர்.
எவ்வளவு பெருந்தன்மை பாருங்கள். நாமளா இருந்தா என்ன பண்ணுவோம்? இங்கே ஒன்னும் இடம் கிடையாது. எங்களுக்கே இடம் கிடையாது, நீங்க வேறே ஹிம்சை பண்ணாதிங்கோ,  வேறே எங்கேயாவது இடத்தைப் பார்த்துப் போமையா", என்போம்.
மூவரும் அந்த இடைகழியில் சிறிது நேரத்தைப் போக்கினர்.
சிறிது நேரத்தில் மூவருக்கும் மூச்சு முட்டத் தொடங்கியது. ஏனெனில் நாலாவதாக ஒருவர்  வைத்திருப்பதை மூவரும் உணர்ந்தார்கள்.
முதலாமவர், "யாரப்பா இது, இப்படி நெருக்குவது? மூன்று பேருக்கு மேல நிற்கமுடியாத  இடத்தில் நாலாவது நபர?" என்றார்.
இரண்டாமவர், "இந்த இருட்டில் யார் வந்துள்ளார் என்பதை விளக்கை
ஏற்றிப் பார்த்து விடுவோம். அது சரி விளக்குக்கு எங்கே போவது?"
முதலாம்வர்,  "விளக்கு என்பதே விளக்கத்தானே? இல்லாத ஒன்றை வைத்து நாமே ஏற்ற  முடியுமா பார்ப்போம்." என்று சிந்தித்துக் கொண்டே இருக்கும் போது,
"ஓம் நமோ நாராயணாய "
என்ற எட்டு எழுத்து மந்திரத்தில் "நம" என்ற "ந" என்றது "இல்லை", "ம" என்றதும், "இல்லை"
"இல்லை இல்லை", எல்லாம் எனதில்லை, எல்லாம் பரம்பொருள் தானே கொடுத்தது, எனவே  அவனை வைத்தே விளக்கை ஏற்றுவோம்"
என்று சிந்தித்து,
"உலகத்தேயே அகல் விளக்காய் ஏற்றி, அதில் சுழ்ந்த கடலையே நெய்யாக்கி, கதிரவனேயே  நெருப்பாக்கி (திரியாக்கி), சக்கரம் கொண்ட முதல்வனின் திருவடிக்கு சொல் மாலை சூட்டி, மனித குலத்தின்  இருளை நிக்குவோம்",
என்று விளக்கில் இருந்தே விளக்கை எடுக்கிறார்
         வையம் தகளியா வார்கடலே நெய்யாக
                  வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
         சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
                  இடராழி நீங்குகவே என்று!
என்று முதல் பாசுரம் தோன்றியது.
உடனே இரண்டாமவர், முதல் விளக்கிலிருந்து விளக்கை எடுத்து, தன் பங்குக்கு
       "வாழ்வைத் தாங்கும் அன்பை அகல் ஆக்கி, இறைவனிடம் ஆர்வம் ஒன்றையே நெய்யாக்கி  சிந்தனையையே திரியாக்கி, நாராயணனுக்கு ஞானத் தமிழில் சொன்னேன்"
என்று ,
            அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
                இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
            ஞானச் சுடர்விளக் கேற்றினேன்! நாரணற்கு
                ஞானத் தமிழ்புரிந்த நான்
அந்த இரண்டு விளக்குகளும்  வந்திருப்பவன் யார்  என்பதை உணர்த்திவிட்டன.
மூன்றாமவர்  உடனே,
   " உலகனைத்தும் ஆளும் மகாலக்ஷ்மியைக் கண்டேன், அதுவும் ஒப்பிலாத அப்பன் திரு மேனியில்,திருமார்பில் கண்டேன், சங்கு சக்கரங்களுடன் பொன்னாழி கண்டேன்,
             திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
                 அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
             பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
                  என்னாழி வண்ணன்பால் இன்று
மூவரும் உணர்ந்து கொண்டனர் வந்திருப்பது திருமால். தங்களை உய்யக்
கொள்வதற்குதான் வந்திருக்கிறான் என்று உணர்ந்தனர்.
ஆக இத்தனை நேரம் நாம் சொல்ல வந்தது முதலாழ்வார்கள் பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார்  ஆகியோர்களைப் பற்றித்தான். இடைகழி என்ற இடம்  திருகோவிலூர் திவ்யஸ்தலம் தான்.
ஆம், திவ்யப் பிரபந்தம் பிறந்த இடம் தான் திருகோவிலூர். பிரபந்தங்களுக்கு ஆரம்பம்  திருக்கோவிலூர்.
உலகளந்த பெருமான் தன் கையில் சக்கரத்தையும் சங்கையும் மாற்றிப் பிடித்துள்ளான்.
ஆம் வலக்கையில் சங்கையும், இடக்கையில் சக்கரத்தையும் பிடித்துள்ளான்.
பூங்கோவல் நாச்சியார் என்பது தாயாரின் திருநாமம். இன்றைக்கெல்லாம் தாயாரைப்  பார்த்துக் கொண்டே இருக்கலாம். நம்முடைய கண் தாயாருக்கு பட்டு விடும் போல அவ்வளவு அழகு போங்கள்.

முதலாழ்வார்கள் மூவரும் மூன்று திருவந்தாதிகளைப் (ஒவ்வொன்றும் நூறு பாசுரங்கள்  பாடி உள்ளார்கள். அதில் ஒவ்வொருவரும் திருவரங்கனுக்கு எனத் தனித்தனியாக பாசுரம்  பாடியுள்ளார்கள்.
பொய்கை ஆழ்வார்
பொய்கையாழ்வார் திருவரங்கனை கருவரங்கத்திலேயே கண்டாராம், கை தொழுதாராம்  அப்படிப்பட்ட திருவரங்கனை மறப்பேனோ என்கிறார். (இதில் வேடிக்கை என்னவென்றால்  பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார்,மற்றும் பேயாழ்வார் மூவரும் ஒரு தாயாரின்  வயிற்றிலேயே பிறக்கவில்லை என்பது தான் உண்மை)
பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வார் திருவரங்கன் எங்கே உள்ளான், அவனுக்கு என்று மனதில் உள்ளேயே  பெரிய கோயில் கட்டி உள்ளாராம், அதனை பாலாலயமாகக் கொள்ள வேண்டுமாம்,  பின்னர் பெரிய கோயில் கட்டுவேன் என்கிறார்.
பேயாழ்வார்
பேயாழ்வார் ஸ்ரீரங்கம் எதற்குச் சமம் என்று விளக்குகிறார் தன்னுடைய பாசுரத்தில்.
மூன்று ஆழ்வார்களும் வைகுந்தவாசனாகிய, பரவாசுதேவனையே பற்றிப்   பாசுரங்கள் பாடியுள்ளார்கள்.

வியாழன், 3 மே, 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-7. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-7. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

ஸ்ரீரங்கம் ஏன் என்ற தலைப்பில் ஆறு பகுதிகள் பார்த்தோம். மற்ற ஊர்களை விட ஸ்ரீரங்கம்  ஏன் உயர்ந்தது என்ற கேள்விக்கு முடிவில்லாத பதிலைத் தான்  நாம் பெறமுடியும்,  சொல்லிக்கொண்டே போகலாம்,
பிரம்மத்தை நேரில் பார்க்கமுடியாது. அவன் த்ருஷ்டம் அல்ல, அத்ருஷ்டம். கண்களாலோ, காதுகளாலோ, ஏன்  ஐம்புலன்களாலும் உணரமுடியாது..ஏன்? இவைகள் அளாவுக்கு உட்பட்டவை. பின் எப்படிப்  பார்ப்பது? அதாவது அளவுக்கு உட்பட்ட கருவிகளால் அளவுக்கு உட்படாத பிரம்மத்தைப்
காண முடியாது. சாஸ்த்ரம் ஒன்றுதான் அவன் யார் என்று உணர்த்தும். அவன் இன்னான் , இனியான் என்று உணர்த்தும்.' அப்படிப்பட்ட கண்ணால் காணமுடியாத ஸ்ரீமன் நாராயணனை  எங்கே பார்க்கலாம்? ப்ரமாணம், பிரணவாகார விமானத்தில் சேவித்துக் கொள்ளலாம்.
ரங்கனை ஷேஷியாகவும், தங்களை ஷேஷனாகவும் அனுபவித்துப் பாடியுள்ளார்கள்.
ஸ்ரீரங்கம் பிரணவாகார விவானத்தைப் பார்த்தாலே இந்த தத்துவம் அவர்கள் மனதில் படுமாம்.
ஸ்ரீரங்கம் 108 திவ்ய தேசத்தில் பிரதான ஷேத்ரம். எல்லா விஷயங்களிலும் பிரதானமானதாகும்.
ஆத்மாக்கள் எல்லாவற்றிலும், ஆத்மா வேறு, தேகம் வேறு என்று அறியாமல் இருக்கிறோம். மேலும் ஆத்மா பெருமாளுக்கு அடிமை என்று நாம் நினைப்பதில்லை. இங்கு அடிமையாக  இருப்பது தான் விசேஷம். எல்லாரும் பெருமாளுக்கு அடிமையாக இருக்க ஆசைப்பட  வேண்டும். அவனிடம் என்ன குணம் இருக்கு என்று ரங்கனைத் தேர்ந்தெடுக்கவேண்டும்?
"அவனிடம் என்ன குணம் இருக்கு? அவனோ எங்கோ இருக்கிறான், அவனால் என்ன செய்ய முடியும்? அவனுக்குப் போய் அடிமையாக இருக்கிறேன் என்கிறாயே? பக்கத்து விட்டு மனிதன் உனக்கு எல்லா  உதவிகளையும் செய்யமாட்டானா?" என்று தோழி கேட்கிறாளாம். அதற்கு நம்மாழ்வார்,
.  "நம்பி யைத்,தென் குறுங்குடி நின்ற, அச்
   செம்பொ னேதிக ழும்திரு மூர்த்தியை,
   உம்பர் வானவ ராதியஞ் சோதியை,
   எம்பி ரானை யென் சொல்லி மறப்பனோ!! (திருவாய்மொழி 10ம்பத்து 9வது பாசுரம் -2782)
இத்தனை அழகும்,குணங்களும் கொண்ட ,தென்குறுங்குடி நின்ற, தங்கத்தை உருக்கி வார்த்தால் போன்ற  மேனிகொண்ட உம்பர் வானவர் சோதியை ஆன நித்ய விபூதியில் இருக்கும் எனக்கு எல்லாமும்  செய்த அவனை என்ன சொல்லி மறப்பனோ?"
என்று பதில் கூறுகிறார். நம்மைப் படைத்து, காத்து அனைத்தையும் கொடுப்பவனுக்கு அடிமைத்  தொழில் புரிவதில் தப்பில்லை. ரங்கன் ஆண்டான், தாம் அடிமை, என்று அப்போது நாம் அடியேன்  என்கிறோமோ அப்போதே நாம் புனிதமாகிவிட்டோம் என்று பொருள். இதைத் தான் எல்லா ஆழ்வார்களும் தங்கள் பாசுரங்களிலும் சொல்லி உள்ளார்கள். 

அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார்?
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கத்தை ஆழ்வார்கள் எப்படி அனுபவித்தார்கள்?
தமிழில் ஐந்தாவது வேதமாகிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அரங்கனுக்காகவே 247 பாசுரங்களை  அனுபவித்துப் பாடியுள்ளார்கள். பத்து ஆழ்வார்கள் அரங்கனை மங்களாசாசனம்  செய்துள்ளார்கள்.
அதாவது ரங்கன் ஆண்டான், தான் அடிமை என்ற பாவத்தில் பாடியுள்ளார்கள்.

பதின்மர் பாடிய பெருமாள்"

"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய பாசுரங்கள் 247.
இதில் ஒரு விசேஷம் உள்ளது?
என்ன அப்படிங்கிரிங்களா?
தமிழ் எழுத்துக்களில் உள்ள உயிர், உயிர்மெய் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கையும்  அதுதான். தேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம் என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதி உள்ளார்

"ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்!
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்!
தோலாத தனிவீரன் தொழுத கோயில்!
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்!
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்!
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்!
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்!
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே!

முதலாழ்வார்கள் என்று சொல்லகூடிய பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய  மூவரும் அரங்கனைப் பாடியுள்ளார்கள். இவர்கள் சந்தித்த இடம் திருக்கோவிலூர்.
திருக்கோவிலூர் இடைகழியில் நடந்தது என்ன?
பார்ப்போம்!!!!

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

ஸ்ரீரங்கம் ஏன்?-பகுதி-6


ஸ்ரீரங்கத்துக்கு அரங்கன் வந்தார்!!

pranavakara_vimanam_side, sriragamப்ரனவாகாரா விமாநம்
ஸ்ரீரங்கம் ஏன் என்ற தலைப்பில் ஐந்து பகுதிகள் பார்த்தோம். மற்ற ஊர்களை விட ஸ்ரீரங்கம்
ஏன் உயர்ந்தது என்ற கேள்விக்கு முடிவில்லாத பதிலைத் தான்  நாம் பெறமுடியும், சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் அப்படிப்பட்ட ஸ்ரீரங்கத்துக்கு ரங்கநாதர் ஏன் வந்தார்? மற்ற திவ்ய தேசங்களை விட ஸ்ரீரங்கம் அவருக்கு ஏன் பிடித்தது? அதைப் பற்றியது தான் இந்தப் பகுதி.
த்ரேதா யுகம், இது நான்கு யுகங்களில் முதல் யுகம்.
அயோத்யா என்ற அபராஜிதா என்ற ஊரில் இக்ஷ்வாகு என்ற ஷத்திரிய வம்சத்து மன்னன்
ஆண்டு வந்தான். அபராஜிதா என்றால் ஜெயிக்கமுடியாத என்ற பொருளாம்.
அதே சமயத்தில் சத்யா லோகத்தில் பிரம்மா பெருமாளை நோக்கி தவம செய்தார்.
பெருமாளும் மனம்  மகிழ்ந்து
"என்ன வேண்டும்" என்றார்.
"சத்யா லோகத்தில் நான் வணங்க ஏதுவாக விக்கிரஹ ரூபத்தில் தேவரீர் எழுந்தருளவேண்டும்"
Photo0159_001நீர்க் குமிழியாகத் தோன்றிய பிரணவாகார விமாநம்:

 

என்றார்.
அப்போதே திருப்பாற்கடலில் ஒரு நீர்குமிழி உருவாகியது. அது சிறிது சிறிதாக வளர்ந்து,
"ஓம்" என்ற எட்டு எழுத்து மந்திரத்தை உள்ளடக்கிய பிரணவாகார விமானம் உருவாகியது.
அதன் உள்ளே "நாராயணன் என்ற ஜெகநாதன்" என்ற பெயருடன் கூடிய சயனக்கோலத்தில்
இருந்த மூலவர் காட்சி அளித்தார்.
"இந்த விக்கிரஹத்தை வைத்து பூஜை செய்" என்று பெருமாளும் பிரம்மாவுக்கு ஆணை
இட்டார். அந்த விக்கிரஹத்தை கருட பகவான் மூலம் சத்ய லோகத்துக்கு எழுந்தருளப்
பண்ணிக் கொண்டு வந்து ,ரொம்ப வருஷங்கள் பிரம்மாவும், இந்த விக்கிரஹத்தை வைத்து
பூஜைகள் செய்து வந்தார்.Photo123ஸ்ரீரங்க விமாநம்
முன்னரே சொன்ன இக்ஷ்வாகு மன்னன் அடிக்கடி சத்ய லோகத்துக்கு செல்வானாம்.
பூலோகத்துக்கும் சத்யலோகத்துக்கும் 50 கோடி யோசனை தூரமாம். அதாவது 500 கோடி
மைல்களாம். இப்படி இக்ஷ்வாகு மன்னன் பிரம்மாவை பார்த்துப் பேசும் போது, ஒரு சமயம்
பிரணவாகார விமானத்தைப் பார்த்து விட்டான்.
ஆச்சர்யம் அதிகமாகி,
"சயனக் கோலத்தில் இருக்கும் நாராயணனை எங்கள் ஊருக்கு கொடுங்களேன்,
நான் அயோத்தியாவில் பூஜித்து வருகிறேன்"
என்று பிரம்மாவிடம்  வினவினான்.
"இல்லை, இல்லை, நான் பெருமாளிடம் யாசித்து வாங்கிவந்தேன், அதனால் இங்குதான்
இருக்கவேண்டும்",
என்று பிரம்மா சொன்னார்.
"உன்னிடம் தான் ரொம்ப நாட்கள் இருந்துவிட்டாரே? நான் என்னுடைய சரயு நதிக்கரையில்
வைத்து கொஞ்ச நாட்கள் பூஜை செய்கிறேனே. மேலும் பெருமாள் இங்கிருந்து என்ன
உபயோகம்? அவருடைய தயை, கருணை போன்ற குணங்களை வெளிப்படுத்த சத்யலோகம்
சரியில்லை, பூலோகத்தில் தான் தப்பு பண்றவன் நிறையப் பேர் உள்ளார்கள். பூலோகத்தில்
தான் அவரின் கருணைக்கு வேலை, ஆதலால் பெருமாள் பூலோகத்தில் இருக்கவேண்டும்."
என்று இக்ஷ்வாகு பிடிவாதம் பிடித்தார்.
வேறே வழில்லாமல்
"சரி, பெருமாள் நினைத்தார் என்றால் நாம் என்ன செய்யமுடியும், அவர் விருப்பபடுவதால்
தானே உன் கண்ணில் இத்தனை நாட்கள் படாமல் இன்று பட்டு இருக்கிறார்."
என்று பிரம்மா வேறு வழியன்றி, மனசில்லாமல், இக்ஷ்வாகு எடுத்துச் செல்ல அனுமதித்தார்.
உடனே பிரணவாகார விமானத்தை கருடன் மேல் ஆரோகணித்து அயோத்திக்கு
எழுந்தருளப் பண்ணினார்.இக்ஷ்வாகு. இக்ஷ்வாகு பூஜை செய்தபிறகு, அவன் காலத்திற்கு
பிறகு 35 அரசர்கள் திருவாராதனம் செய்துள்ளார்களாம்.
ஆனால்!!!
பெருமாளுக்கு மனக்குறை!!!
என்னையா மனக்குறை என்கிறீர்களா?
திருவாராதனம் செய்யும் போது என்ன செய்யக்கூடாதாம்?
பேசக்கூடாதாம், முடியுமா? திருவாராதனம் செய்யும் போது தான் போன் வரும், அப்பத்தான்
ஏதாவது சாமானை கடையில் இருந்து வாங்கி வா என்பார்கள்.
புஷ்பம் வாங்கி வந்தவுடன் முகர்ந்து பார்ப்போம், கூடாதாம். இல்லையா பின்னே?
அப்பத்தான் முதுகு அரிக்கும், சொரியக் கூடாது, முடியுமா பாருங்கள்!
இப்படி பலவிதமான அபசாரங்கள் செய்வோம், இத்தனையும் பொறுத்துக் கொள்கிறார் பெருமாள்!
ஆனால் அவன் ஆராதனைக்கு எளியவன்.
வேறே சிந்தனை செய்யாமல், அவன் மீது மட்டும் சிந்தனையுடன் செய்யவேண்டுமாம்.
அந்தக் காலத்திலேயே சரியான முறையில் திருவாராதனம் செய்யவில்லை
போலிருக்கு. அதுதான் பெருமாளுக்கு மனக்குறை என்று சொன்னோம்.
பார்த்தார். தானே தான் போய் திருவாராதானம் செய்ய வேண்டும் என நினைத்தார்.
ராமனாக அவதரிப்பது என்று முடிவெடுத்தார். தசரதனுக்கு மகனாகப் பிறக்கத் தீர்மானித்தார்.
ஓ!!
இதுதான் காரணமா பூலோகத்தில் பிறக்க?
நாங்கள் என்னவோ ராவணனை சம்ஹாரம் செய்ய என்று நினைத்தோம்!
அப்படி இருந்திருந்தால் எங்கு வேண்டுமானாலும் பிறந்து இருக்கலாமே? தசரதனுக்கு
பிறப்பதன் மூலம் தான் நினைத்த மாதிரி இரண்டு காரியங்களையும் பூர்த்தி செய்து
கொண்டார்.
அதுசரிய்யா, எப்ப ரங்கநாதர் ஸ்ரீரங்கத்துக்கு வந்தார்? அதச்சொல்லுமைய்யா! கேட்பது புரியுது!
அயோத்தியில் ராம பட்டாபிஷேகம் முடிவடைகிறது. எல்லாரும் விடை பெற்றுக்
கொள்கிறார்கள். எல்லாருக்கும் அவரவர்களுக்கு ஏற்ப பரிசுகளைக் கொடுத்து
அனுப்புகிறான் ராமன். விபிஷனனை கூப்பிட்டு
"ஆராதாய ஜகந்நாதம் இஷ்வாகு குல தெய்வதம்"
என்று சொல்லி, இக்ஷ்வாகு குலம் ஆராதனம் செய்த பெருமாளை விபிஷனனிடம் கொடுத்தார்.
விபிஷணனும் மகிழ்ச்சியாக தான் ஊர் இலங்கை நோக்கி கிளம்பினான்.

Photo0137
அப்படிப் பறந்து செல்லும் போது இந்த ஊரின் மேல் பயணித்தான். அப்ப இந்த ஊருக்கு
சேஷ பீடம் என்று பெயராம். அந்த சமயம் பங்குனி பிரம்மோத்சவம் உத்சவம் நேரம்.
ராமன் விமானத்தைக் கொடுக்கும் போதே எல்லா உத்சவங்களையும் விடாமல் செய்யும்படி
ஆணையிட்டுள்ளார். எனவே அங்கேயே உத்சவத்தை நடத்த தீர்மானித்து ஊரைப் பார்க்கிறான்.
"வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆளும் சோலை
      கொண்டல்மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
          அண்டர் கோன் அமரும் சோலை அணி
திருவரங்கம் என்னா" 

என்றபடி ஊரின் இரு பக்கமும் காவிரியும் கொள்ளிடமும் (வடதிருக்காவிரி) சூழ்ந்த, பெருக்கெடுத்து ஓடும் நதிகளைப் பார்க்கிறான். அப்படிப்பட்ட இந்த சேஷ பீடத்தில் விமானத்தை ஏளப் பண்ணினான். ஒன்பது நாட்கள் பங்குனி பிரம்மோத்சவத்தை நடத்தினான்.
விமானத்தை எடுத்துக்கொண்டு இலங்கைக்கு பயணிக்கத் தீர்மானித்தான்.
ஆனால்!!!
பெருமாள் அசைவதாகத் தெரியவில்லை. அந்த சமயத்தில் இந்த ஊர் அரசன் தர்மவர்மா
"பெருமாளை இங்கேயே விட்டு விட்டுச் செல்லுமே" என்று விபிஷணனிடம் மன்றாடுகிறான்.
"இல்லை, இல்லை, ராமன் எனக்கு என கொடுத்த பெருமாள், நான் எங்க ஊருக்குத்தான்
எடுத்துச் செல்வேன்" என்கிறான் விபிஷணன்.
"ஒண்ணு பண்ணுவோம், பெருமாளையே கேட்போம். அவன் உன்னோடு வந்தால் நீ எடுத்துப்
போகலாம்" எகிறான் தர்மவ்ர்மா.
"அதுவும் சரிதான்" என்று விபிஷணனும் ஒத்துக் கொண்டு பெருமாளைப் பார்க்கிறார்கள்.
பெருமாள் முகத்தைப் பார்த்தான் விபிஷணன், அவர் இங்கேயே இருக்கத் தீர்மானித்து
விட்டார் என்பதை உணர்ந்து கொண்ட விபிஷணன்,
"சரி நானும் இங்கேயே உங்களுடனேயே இருந்து விடுகிறான்"
என்று பெருமாளிடம் வேண்டுகிறான்.
"அது சரியில்லை, உனக்கு என ஊர் உள்ளது, அதற்காகத் தான் ராமன் உனக்கு
பட்டாபிஷேகம் செய்துள்ளான். எனவே இலங்கைக்குக் கிளம்பு" என்கிறார் பெருமாள்.
"உங்களை எப்படி விட்டுவிட்டுப் போவது" என்கிறான் விபிஷணன்.
"கவலைப் படாதே, இங்கிருந்து கொண்டே உன்னைப்  பார்த்துக்கொள்கிறேன்"
என்று அவனுக்கு அபயப் பிரதானம் கொடுத்து,
   "குடதிசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி
     வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
     கடல்நிறக் கடவுள் எந்தை அரவனைத் துயிலுமா கண்டு"
என்று தொடண்ரடிப்பொடி ஆழ்வார் சொன்னதைப் போல,
"உன்னப் பார்த்துக் கொண்டே இங்கேயே இருக்கிறேன்"
என்று சொல்லி தென் திசை இலங்கையை நோக்கி சயனித்துக் கொண்டிருக்கிறான்,
அன்று தொடக்கமாக இன்று வரை,
          "நல்லார்கள் வாழும் நளிரங்கமாக
             அத்தர் பத்தர் சுற்றி வாழும் அந்தனிற் அரங்கமாக
"
 
          "வண்பெரு வானகம் உய்ய அமரர் உய்ய 
             மண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்ய
       துன்பமிகு துயர் அகல அயர்வு ஒன்றில்லாச் 
          சுகம்வளர அகமகிழும் தொண்டர்வாழ
     அன்போடு தென்திசை நோக்கி பள்ளி கொள்ளும்"

என்று குலசேகரர் சொன்னபடி எல்லாரோடும் சேர்ந்து என்னிக்கு சேவிக்கப் போகிறேனோ?
என்றபடி நம்குலம் இருக்கும் வரை இருந்து, நம் அனைவருக்கும் அருள் பாலித்துக்
கொண்டேதான் இருப்பார் என்பதில் ஐயமில்லை.
ஸ்ரீ. உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து. நன்றியுடன் 

http://krishnalakshmi48.opendrive.com/files/54741267_j0Tcb_7df9/part1margazhi.mp3

https://krishnalakshmi48.opendrive.com/files?54741267_j0Tcb