செவ்வாய், 10 ஏப்ரல், 2012

ஸ்ரீரங்கம் ஏன்?-பகுதி-6


ஸ்ரீரங்கத்துக்கு அரங்கன் வந்தார்!!

pranavakara_vimanam_side, sriragamப்ரனவாகாரா விமாநம்
ஸ்ரீரங்கம் ஏன் என்ற தலைப்பில் ஐந்து பகுதிகள் பார்த்தோம். மற்ற ஊர்களை விட ஸ்ரீரங்கம்
ஏன் உயர்ந்தது என்ற கேள்விக்கு முடிவில்லாத பதிலைத் தான்  நாம் பெறமுடியும், சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் அப்படிப்பட்ட ஸ்ரீரங்கத்துக்கு ரங்கநாதர் ஏன் வந்தார்? மற்ற திவ்ய தேசங்களை விட ஸ்ரீரங்கம் அவருக்கு ஏன் பிடித்தது? அதைப் பற்றியது தான் இந்தப் பகுதி.
த்ரேதா யுகம், இது நான்கு யுகங்களில் முதல் யுகம்.
அயோத்யா என்ற அபராஜிதா என்ற ஊரில் இக்ஷ்வாகு என்ற ஷத்திரிய வம்சத்து மன்னன்
ஆண்டு வந்தான். அபராஜிதா என்றால் ஜெயிக்கமுடியாத என்ற பொருளாம்.
அதே சமயத்தில் சத்யா லோகத்தில் பிரம்மா பெருமாளை நோக்கி தவம செய்தார்.
பெருமாளும் மனம்  மகிழ்ந்து
"என்ன வேண்டும்" என்றார்.
"சத்யா லோகத்தில் நான் வணங்க ஏதுவாக விக்கிரஹ ரூபத்தில் தேவரீர் எழுந்தருளவேண்டும்"
Photo0159_001நீர்க் குமிழியாகத் தோன்றிய பிரணவாகார விமாநம்:

 

என்றார்.
அப்போதே திருப்பாற்கடலில் ஒரு நீர்குமிழி உருவாகியது. அது சிறிது சிறிதாக வளர்ந்து,
"ஓம்" என்ற எட்டு எழுத்து மந்திரத்தை உள்ளடக்கிய பிரணவாகார விமானம் உருவாகியது.
அதன் உள்ளே "நாராயணன் என்ற ஜெகநாதன்" என்ற பெயருடன் கூடிய சயனக்கோலத்தில்
இருந்த மூலவர் காட்சி அளித்தார்.
"இந்த விக்கிரஹத்தை வைத்து பூஜை செய்" என்று பெருமாளும் பிரம்மாவுக்கு ஆணை
இட்டார். அந்த விக்கிரஹத்தை கருட பகவான் மூலம் சத்ய லோகத்துக்கு எழுந்தருளப்
பண்ணிக் கொண்டு வந்து ,ரொம்ப வருஷங்கள் பிரம்மாவும், இந்த விக்கிரஹத்தை வைத்து
பூஜைகள் செய்து வந்தார்.Photo123ஸ்ரீரங்க விமாநம்
முன்னரே சொன்ன இக்ஷ்வாகு மன்னன் அடிக்கடி சத்ய லோகத்துக்கு செல்வானாம்.
பூலோகத்துக்கும் சத்யலோகத்துக்கும் 50 கோடி யோசனை தூரமாம். அதாவது 500 கோடி
மைல்களாம். இப்படி இக்ஷ்வாகு மன்னன் பிரம்மாவை பார்த்துப் பேசும் போது, ஒரு சமயம்
பிரணவாகார விமானத்தைப் பார்த்து விட்டான்.
ஆச்சர்யம் அதிகமாகி,
"சயனக் கோலத்தில் இருக்கும் நாராயணனை எங்கள் ஊருக்கு கொடுங்களேன்,
நான் அயோத்தியாவில் பூஜித்து வருகிறேன்"
என்று பிரம்மாவிடம்  வினவினான்.
"இல்லை, இல்லை, நான் பெருமாளிடம் யாசித்து வாங்கிவந்தேன், அதனால் இங்குதான்
இருக்கவேண்டும்",
என்று பிரம்மா சொன்னார்.
"உன்னிடம் தான் ரொம்ப நாட்கள் இருந்துவிட்டாரே? நான் என்னுடைய சரயு நதிக்கரையில்
வைத்து கொஞ்ச நாட்கள் பூஜை செய்கிறேனே. மேலும் பெருமாள் இங்கிருந்து என்ன
உபயோகம்? அவருடைய தயை, கருணை போன்ற குணங்களை வெளிப்படுத்த சத்யலோகம்
சரியில்லை, பூலோகத்தில் தான் தப்பு பண்றவன் நிறையப் பேர் உள்ளார்கள். பூலோகத்தில்
தான் அவரின் கருணைக்கு வேலை, ஆதலால் பெருமாள் பூலோகத்தில் இருக்கவேண்டும்."
என்று இக்ஷ்வாகு பிடிவாதம் பிடித்தார்.
வேறே வழில்லாமல்
"சரி, பெருமாள் நினைத்தார் என்றால் நாம் என்ன செய்யமுடியும், அவர் விருப்பபடுவதால்
தானே உன் கண்ணில் இத்தனை நாட்கள் படாமல் இன்று பட்டு இருக்கிறார்."
என்று பிரம்மா வேறு வழியன்றி, மனசில்லாமல், இக்ஷ்வாகு எடுத்துச் செல்ல அனுமதித்தார்.
உடனே பிரணவாகார விமானத்தை கருடன் மேல் ஆரோகணித்து அயோத்திக்கு
எழுந்தருளப் பண்ணினார்.இக்ஷ்வாகு. இக்ஷ்வாகு பூஜை செய்தபிறகு, அவன் காலத்திற்கு
பிறகு 35 அரசர்கள் திருவாராதனம் செய்துள்ளார்களாம்.
ஆனால்!!!
பெருமாளுக்கு மனக்குறை!!!
என்னையா மனக்குறை என்கிறீர்களா?
திருவாராதனம் செய்யும் போது என்ன செய்யக்கூடாதாம்?
பேசக்கூடாதாம், முடியுமா? திருவாராதனம் செய்யும் போது தான் போன் வரும், அப்பத்தான்
ஏதாவது சாமானை கடையில் இருந்து வாங்கி வா என்பார்கள்.
புஷ்பம் வாங்கி வந்தவுடன் முகர்ந்து பார்ப்போம், கூடாதாம். இல்லையா பின்னே?
அப்பத்தான் முதுகு அரிக்கும், சொரியக் கூடாது, முடியுமா பாருங்கள்!
இப்படி பலவிதமான அபசாரங்கள் செய்வோம், இத்தனையும் பொறுத்துக் கொள்கிறார் பெருமாள்!
ஆனால் அவன் ஆராதனைக்கு எளியவன்.
வேறே சிந்தனை செய்யாமல், அவன் மீது மட்டும் சிந்தனையுடன் செய்யவேண்டுமாம்.
அந்தக் காலத்திலேயே சரியான முறையில் திருவாராதனம் செய்யவில்லை
போலிருக்கு. அதுதான் பெருமாளுக்கு மனக்குறை என்று சொன்னோம்.
பார்த்தார். தானே தான் போய் திருவாராதானம் செய்ய வேண்டும் என நினைத்தார்.
ராமனாக அவதரிப்பது என்று முடிவெடுத்தார். தசரதனுக்கு மகனாகப் பிறக்கத் தீர்மானித்தார்.
ஓ!!
இதுதான் காரணமா பூலோகத்தில் பிறக்க?
நாங்கள் என்னவோ ராவணனை சம்ஹாரம் செய்ய என்று நினைத்தோம்!
அப்படி இருந்திருந்தால் எங்கு வேண்டுமானாலும் பிறந்து இருக்கலாமே? தசரதனுக்கு
பிறப்பதன் மூலம் தான் நினைத்த மாதிரி இரண்டு காரியங்களையும் பூர்த்தி செய்து
கொண்டார்.
அதுசரிய்யா, எப்ப ரங்கநாதர் ஸ்ரீரங்கத்துக்கு வந்தார்? அதச்சொல்லுமைய்யா! கேட்பது புரியுது!
அயோத்தியில் ராம பட்டாபிஷேகம் முடிவடைகிறது. எல்லாரும் விடை பெற்றுக்
கொள்கிறார்கள். எல்லாருக்கும் அவரவர்களுக்கு ஏற்ப பரிசுகளைக் கொடுத்து
அனுப்புகிறான் ராமன். விபிஷனனை கூப்பிட்டு
"ஆராதாய ஜகந்நாதம் இஷ்வாகு குல தெய்வதம்"
என்று சொல்லி, இக்ஷ்வாகு குலம் ஆராதனம் செய்த பெருமாளை விபிஷனனிடம் கொடுத்தார்.
விபிஷணனும் மகிழ்ச்சியாக தான் ஊர் இலங்கை நோக்கி கிளம்பினான்.

Photo0137
அப்படிப் பறந்து செல்லும் போது இந்த ஊரின் மேல் பயணித்தான். அப்ப இந்த ஊருக்கு
சேஷ பீடம் என்று பெயராம். அந்த சமயம் பங்குனி பிரம்மோத்சவம் உத்சவம் நேரம்.
ராமன் விமானத்தைக் கொடுக்கும் போதே எல்லா உத்சவங்களையும் விடாமல் செய்யும்படி
ஆணையிட்டுள்ளார். எனவே அங்கேயே உத்சவத்தை நடத்த தீர்மானித்து ஊரைப் பார்க்கிறான்.
"வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆளும் சோலை
      கொண்டல்மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
          அண்டர் கோன் அமரும் சோலை அணி
திருவரங்கம் என்னா" 

என்றபடி ஊரின் இரு பக்கமும் காவிரியும் கொள்ளிடமும் (வடதிருக்காவிரி) சூழ்ந்த, பெருக்கெடுத்து ஓடும் நதிகளைப் பார்க்கிறான். அப்படிப்பட்ட இந்த சேஷ பீடத்தில் விமானத்தை ஏளப் பண்ணினான். ஒன்பது நாட்கள் பங்குனி பிரம்மோத்சவத்தை நடத்தினான்.
விமானத்தை எடுத்துக்கொண்டு இலங்கைக்கு பயணிக்கத் தீர்மானித்தான்.
ஆனால்!!!
பெருமாள் அசைவதாகத் தெரியவில்லை. அந்த சமயத்தில் இந்த ஊர் அரசன் தர்மவர்மா
"பெருமாளை இங்கேயே விட்டு விட்டுச் செல்லுமே" என்று விபிஷணனிடம் மன்றாடுகிறான்.
"இல்லை, இல்லை, ராமன் எனக்கு என கொடுத்த பெருமாள், நான் எங்க ஊருக்குத்தான்
எடுத்துச் செல்வேன்" என்கிறான் விபிஷணன்.
"ஒண்ணு பண்ணுவோம், பெருமாளையே கேட்போம். அவன் உன்னோடு வந்தால் நீ எடுத்துப்
போகலாம்" எகிறான் தர்மவ்ர்மா.
"அதுவும் சரிதான்" என்று விபிஷணனும் ஒத்துக் கொண்டு பெருமாளைப் பார்க்கிறார்கள்.
பெருமாள் முகத்தைப் பார்த்தான் விபிஷணன், அவர் இங்கேயே இருக்கத் தீர்மானித்து
விட்டார் என்பதை உணர்ந்து கொண்ட விபிஷணன்,
"சரி நானும் இங்கேயே உங்களுடனேயே இருந்து விடுகிறான்"
என்று பெருமாளிடம் வேண்டுகிறான்.
"அது சரியில்லை, உனக்கு என ஊர் உள்ளது, அதற்காகத் தான் ராமன் உனக்கு
பட்டாபிஷேகம் செய்துள்ளான். எனவே இலங்கைக்குக் கிளம்பு" என்கிறார் பெருமாள்.
"உங்களை எப்படி விட்டுவிட்டுப் போவது" என்கிறான் விபிஷணன்.
"கவலைப் படாதே, இங்கிருந்து கொண்டே உன்னைப்  பார்த்துக்கொள்கிறேன்"
என்று அவனுக்கு அபயப் பிரதானம் கொடுத்து,
   "குடதிசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி
     வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
     கடல்நிறக் கடவுள் எந்தை அரவனைத் துயிலுமா கண்டு"
என்று தொடண்ரடிப்பொடி ஆழ்வார் சொன்னதைப் போல,
"உன்னப் பார்த்துக் கொண்டே இங்கேயே இருக்கிறேன்"
என்று சொல்லி தென் திசை இலங்கையை நோக்கி சயனித்துக் கொண்டிருக்கிறான்,
அன்று தொடக்கமாக இன்று வரை,
          "நல்லார்கள் வாழும் நளிரங்கமாக
             அத்தர் பத்தர் சுற்றி வாழும் அந்தனிற் அரங்கமாக
"
 
          "வண்பெரு வானகம் உய்ய அமரர் உய்ய 
             மண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்ய
       துன்பமிகு துயர் அகல அயர்வு ஒன்றில்லாச் 
          சுகம்வளர அகமகிழும் தொண்டர்வாழ
     அன்போடு தென்திசை நோக்கி பள்ளி கொள்ளும்"

என்று குலசேகரர் சொன்னபடி எல்லாரோடும் சேர்ந்து என்னிக்கு சேவிக்கப் போகிறேனோ?
என்றபடி நம்குலம் இருக்கும் வரை இருந்து, நம் அனைவருக்கும் அருள் பாலித்துக்
கொண்டேதான் இருப்பார் என்பதில் ஐயமில்லை.
ஸ்ரீ. உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து. நன்றியுடன் 

http://krishnalakshmi48.opendrive.com/files/54741267_j0Tcb_7df9/part1margazhi.mp3

https://krishnalakshmi48.opendrive.com/files?54741267_j0Tcb