ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-16. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!! -திருமங்கை ஆழ்வார்.















வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
    பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
    அவர் தம் கலவியெ கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
    உணர்வெணும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
    நாராயணா என்னும் நாமம்.

யார் தெரிந்து கொண்டார், என்ன தெரிந்து கொண்டார்?
எப்படித் தெரிந்து கொண்டார்? யார் சொல்லிக் கொடுத்தார்கள் அவருக்கு?
அப்படி எனன விஷேஷம், அந்த நாமத்தில்? அதனைத் தெரிந்து கொள்ள, தன்னுடைய தவறுகளை மன்னித்த, அவரை எப்படிக் கண்டு கொண்டார்? தன்னுடைய ’ஆடல்மா’  குதிரையில் ஏறி மிக அதிகமான திவ்விய தேசங்களுக்கு சென்று பாசுரங்களைப் பாடியவர்யார்?
என்று பல கேள்விக்ளுக்கு பதில், வேறு யாராக இருக்க முடியும், ‘கலியன்’ என்ற பெயர்  கொண்ட ’திருமஙகையாழ்வாரை”த் தவிர!!!
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் மிக அதிகமான பாசுஙகளை பாடியவர், கிட்டத்தட்ட ஆயிரம் பாசுஙகளுக்கு மேல்,
 எப்படி இறைவனால், நாராயணனால் ஆட்கொள்ளப்பட்டார்
என்பது மிகப் பெரிய கதை!!
திருக்குறையலூர், சோழ நாட்டில் உள்ள சிறிய ஊர், மிகப் பெரிய ஆழ்வாரைக் கொடுக்கும் என்று அவருடைய தந்தை, ஆலிநாடர் கூட, நினைத்து இருக்கமாட்டார். நீலன், அதுதான் தந்தை இட்ட திருநாமம் அவருக்கு. இவருடைய வீரத்துக்கும், விவேகத்துக்கும் உரிய சன்மானத்தை, திருமங்கை என்னும் சிற்றூரை சோழ மன்னன் பரிசாகக் கொடுத்தான்.
’பரகாலன்’ என்ற பட்டப் பெயரோடு வாழ்க்கையை துவங்கிய இவருக்கு விதி என்ன செய்தது!!!!
பாருங்கள்!
சுமங்கலி என்னும் தேவகன்னிகை, தன் பிறப்பு அறிநதவள், ஒரு அந்தணர் வீட்டில் குமுதவல்லி என்னும் பெயரோடு வளர்ந்து வரும் இவர், பரகாலனை மாற்ற வந்தவர் என்றே கொள்ளலாம்.
பரகாலன் குமுதவல்லியை சந்திக்க வேண்டும் என்பது விதி தானே?
என்ன நடந்தது?
கண்டதும் காதல், என்னமோ இந்தக் காலத்தில் மட்டும் தான் நடக்க முடியுமா?
குமுதவல்லியைக் கண்டதும் காதல் கொண்டார், அவள்தான் தன் மனைவி என்பதில் உறுதி கொண்டார்.
'நான் தஙகளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், தங்களுக்குச் சம்மதமா?”
பரகாலன் குமுதவல்லியைப் பார்த்து நேராகவே கேட்கிறார்.
தான் ஒரு வைஷ்ணவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசை கொண்ட குமுதவல்லி, ஒருமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு,
“அதெல்லாம் சரி, நான் உங்களைத் திருமணம் செய்ய வேண்டுமானால்.....”
இழுப்பதைப் பார்த்த பரகாலன் சிறிதே தடுமாறி,
“நீங்கள் என்ன நிபந்தனை போட்டாலும் சம்மதம், அதற்கு நான் தயார்,” என்கிறார்.
“நீங்கள் பஞ்சசம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும், இதுதான் நிபந்தனை,’ என்கிறார் குமுதவல்லி அம்மையார்.
’அப்படி என்றால்.....”,
பரகாலன். இவரோ அந்தணர் அல்ல, அதனால் பஞ்ச ஸ்ம்ஸ்காரம் என்றால்
என்ன என்பது இவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
அதுசரி எத்தனை அந்தணருக்குத் தெரியுங்கிறிஙகளா? அதுவும் சரிதான்.
பெருமாளின் திருஅடையாளங்களான சக்கரம் மற்றும் சங்கு ஆகியவற்றை தங்கள் தோளில் அணிவது, இறைவனின் பனிரெண்டு திருப்பெயர்களை சொல்லிக் கொண்டு பனிரெண்டு இடங்களில் திருமண் அணிதல், தன்னுடைய பெயரை பெருமானின் அல்லது ஆசாரியன் பெயர்கள் ஏதாவது
ஒன்றை குருவின் மூலம் வைக்கப் பெறுதல், மறைபொருளை குருவின் மூலம் காதில் உப்தேசம் பெறுதல், திருவாராதனை செய்யும் முறைகளை முறையாகக் கற்றுக் கொள்ளல்
என்பதே இந்த பஞச ஸ்ம்ஸ்காரம் ஆகும். இப்படிச் செய்தால் ஒருவர் வைஷ்ணவர் என்று பொருள்.
பரகாலனோ அந்தணர் அல்லாதவர்.அவ்ருக்கு யார் இந்த பஞசஸ்ம்ஸ்காரம் செய்து வைப்பார்கள்?
எங்கெங்கோ தேடினார், யாராவது தனக்கு பஞசஸ்ம்ஸ்காரம் செய்து வைப்பார்களா என்று!
ஒருவரும் தயாரில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை?
ஆண்டவன் தானே இந்த விளையாடளை ஆரம்பித்து வைத்தான், அதனால் அவனே தான் இதையும் முடிக்க வேண்டும்.
பார்த்தார், ஆம், அவரையே குருவாகத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானித்து விட்டார்.
திருநரையூர் பெருமானிடம் விண்ணப்பித்தார்,  தனக்கு பஞ்சஸ்ம்ஸ்காரம் செய்து வைககவேண்டும் என.
இறைவனே பஞ்சஸ்ம்ஸ்காரம் செய்து வைத்து ஒரு ரெக்கார்டு உண்டாக்கிவிட்டார் என்றால் பார்த்துக்   கொள்ளுங்கள்
”நீங்கள் சொன்ன மாதிரி நான் அந்தணர் ஆகி விட்டேன், இப்போது திருமணம் செய்து கொள்ளத் தடையில்லையே?”,
மீண்டும் போய் குமுதவல்லியிடம் முறையிட்டார்.
’அதெல்லாம் சரி, இப்போது நீங்கள் ஒரு வருஷத்திற்கு ஆயிரெத்தெட்டு அந்தணர்களுக்கு தினமும் உணவளிக்க வேண்டும், அப்போதுதான் நம் திருமணம்”.
புதிய நிபந்தனையைக் கேட்டு பரகாலன் அசரவில்லை.
“அதற்க்கென்ன செய்துவிட்டால் போயிற்று” என்றார்.
திருமணமும் இனிதாக நடைபெற்றது.
ஆனால்!!!!!!
ஒருத்தருக்கு சாப்பாடு போடுவதே சிரமம், அதுவும் ஆயிரத்தெட்டு பேருக்கு,அதுவும் ஒரு
வருஷத்துக்கு!!!!
முடியுமா?
முடியவில்லை.
தன் செல்வம் கரைந்தது. மன்னனுக்கு கப்பம் கட்ட முடியவில்லை.
பார்த்தார், மன்னன்.  பரகாலனுடன் போரிட்டு அவ்ரைச் சிறை வைத்தார். திரையைக் கொடுக்கிறேன்,
மந்திரியை என்னுடன் காஞ்சீபுரம் அனுப்புங்கள், அங்கு உஙகள் திரையை கொடுக்கிறேன், என்று
மந்திரியைக் வேகவதி ஆற்றின் கரையில் கிடைத்த புதையிலில் ஒரு பகுதியை கப்பமாகக்
கொடுத்து மீதியை அன்னதானத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்.
மீண்டும் பணத்தட்டுப்பாடு.
வெறும் கையால் முழம்போடமுடியுமா?
பார்த்தார், நாலு பேருக்கு நல்லது செய்ய, என்ன செய்தாலும் தகும் என்று ஒரு விதியை சாக்காகக்
கொண்டு வழிப்பறி செய்யத் துவங்கினார்.
அந்த காலத்து ‘ராபின்குட்’ ஆனார்.
செல்வம் உள்ளவர்களை வழிமறித்து, அந்தப் பணத்தில் இருந்து ஏழை அந்தனர்களுக்கு
அன்னமிட்டார்.
விதி யாரையும் விடாது!!
ஆனால் விதியை மாற்றும் சக்தி அவன் ஒருவனுக்கு மட்டும் தான் உண்டு.
பார்த்தான் இறைவன், இவரை ஆட்கொள்ள நேரம் வந்துவிட்டது என, மாறுவேடம் பூண்டு
இறைவனும், இறைவியுமாக மணக்கோலம் பூண்டு எல்லா ஆபரணங்களோடும் திருமணங்கொல்லை
கானகத்தின் வழியே ஆடல் பாடல் இசைக்க செல்கிறான்.
பார்த்தான் பரகாலனும் அவன் கூட்டாளிகளும். நல்ல வேட்டை.
மணமக்களிடமிருந்து எல்லா ஆபரண்ங்களையும் கழட்டச் சொன்னான். பகவான் காலில் இருந்த
மெட்டியை தன் வாயால் கடித்து கழற்றி, நகை மூட்டைகளை கட்டி தூக்க, கனமாக இருந்ததால்
என்ன முயன்றும் முடியவில்லை.
பரகாலன், “என்ன மந்திரவாதியா நீ? என்ன மந்திரம் செய்தாய், இந்த சிறு மூட்டையைத்
தூக்க முடியவில்லை, அந்த மந்திரத்தை எனக்கும் சொல்”.
பரந்தாமன் புன் சிரிப்புடன், “நம் கலியா, அருகில் வா, அந்த மந்திரத்தை உனக்கும் சொல்கிறேன்”,
என்று அருகில் அழைத்து, காதில், “ஓம் நமோ நாராயணாய” என்ற அஷ்டாக்‌ஷர மந்திரத்தை
ஒத, பரகாலன் அப்போதுதான், வந்திருப்பது மானிடன் அல்ல, தன்னை ஆட்கொள்ள் வந்த
பரமன் என்று புரிந்து கொண்டான்.
இறைவன் மீதான பக்தி வெள்ளம் தன்னுள்ளே பாய, பரகால்ன்,
”வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
     பெருந்துயர் இடும்பையில் பிறந்து
 கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
       அவர்தம் கலவியே கருதி
 ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
       உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
 நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
        நாராயணா என்னும் நாமம்”
என்று பாடத் துவஙகினார்.
அத்துடன் நிறுத்திக் கொண்டாரா? இல்லை! பெரிய திருமொழி என்ற வகையில் சுமார் 1100 பாசுரங்களுக்கு
மேல் பாடியுள்ளார். இது போக திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல்,
திருவெழுகூற்றிருக்கை பொரவற்றை பாடியுள்ளார். இதுமட்டுமா! இவர் போகாத ஊர் இல்லை.
தன் ஆடல்மா குதிரையின் மீது ஏறி எல்லா திவ்யதேசங்களையும் பற்றி பாசுரங்கள் இயற்றியுள்ளர்.
  குலம்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
  நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
  வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
   நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
 என்று நாராயனா என்ற சொல் என்னன செய்யும் என்பதை இந்தப் பாசுரத்தில்
சொல்கிறார்.
மாமிசம், எலும்பு, உரோமம் இவைகளால் செய்யப்பட்டு ஒன்பது வாசல் கொண்ட
இந்த சரீரம் விட்டு உயிர் பிரியும் போது உன்னைச் சரண் அடைய் வெண்டும் என்கிறார்.
    ஊனிடை சுவர்வைத்து என்பு தூண் நாட்டி
        உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
      தானுடைக் குரம்பை பிரியும்பொது உன்றன்
        சரணமே சரணம் என்றிருந்தேன்
திருமங்கையாழ்வாரின் எழுகூற்றிருக்கை என்பது கடினமான பாட்டமைப்பு கொண்டது. ஏழு அறையாக்கி
சிறுமிகளின் பாண்டியாட்டம் போல கட்டம் வைத்து புகுந்து வெளிப்படும் அமைப்பு ஆகும். ஒன்றிலிருந்து
ஏழு வரை சொற்கள் ஏறியும் இறக்கியும் சொற்கள் அமைக்கப்படும். இதனை சித்திரக் கவி என்றும்
சொல்வார்கள். இதனை கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு என எழுதினார் என்றும் சொல்வார்கள்.
பல திருக்கோயில்களுக்குச் சென்று அவற்றை செப்பனிட்டு இருக்கிறார். திருவரங்கத்தில்
ஏழு பிரகாரம் உள்ளது. அதில் நான்காவது பிரகாரம் ஆலிநாடன் திருச்சுற்று என்று திருமங்கை
ஆழ்வார் பெயரில் உள்ளது என்றால் இவருடைய பெருமையைப் பாருங்கள்
திருவரஙத்தைப் பற்றி 73 பாசுரங்கள் பாடியுள்ளார். ரங்கனைப் பற்றி மிக அதிகமான் பாசுரங்கள் பாடியவர் என்றும்
சொல்லலாம். திருவரங்கத்தில் வைகுந்த ஏகாதசி உத்சவம் 21 நாட்கள் நடைபெறும், அதனை
முதன்முதலாக ஆரம்பித்து வைத்தவர் திருமஙகை மன்னன் தான். ஒவ்வொரு ஆழ்வாரகளும்
தனித்தனியான வகையில் சிறப்புப் பெற்றவர்கள், அதாவது பெரியாழ்வார், ஆண்டாள் போன்றவகள்
கண்ணனைப் பற்றி அதிகமாகப் பாடியுள்ளார்கள். குலசேகர ஆழ்வார் ராமனைப் பற்றி அதிகமாகப்
பாடியுள்ளார்கள். அதேபோல திருமஙகை ஆழ்வார் அர்ச்சாவதரத்தைப் பற்றி அதிகமான் பாசுரங்களை
இயற்றியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தைப் பற்றியும், திருமங்கை மன்னனைப் பற்றியும் நிறைய எழுதலாம், நேரம்
வரும்போது மீண்டும் எழுதுவோம்.

கருத்துகள் இல்லை: