புதன், 2 மார்ச், 2011

நம்மாழ்வார்.






அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?

அனைத்துஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்.
"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களைஅனுசரிக்க ஏதுவாக என்னால்முடிந்த அளவு ஒரே இடத்தில். கொடுத்து உள்ளேன்.ஸ்வாமிதேசிகன்அவர்கள் தன்னுடையஅதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறுஎழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே


ஆழ்வார்திருநகரி கோயில்


நம்மாழ்வார்


சடாரி





நம்மாழ்வாரின் சரித்திரம்.

நம்மாழ்வார், 7ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் அவர் சேனைத்தலைவர் அம்சமாகப் பிறந்தார்.
தற்போதுள்ள பாண்டிய நாட்டில் உள்ள ஆழ்வார் திருநகரி என்ற திருக்குருகூர் தலத்தில் அவதரித்தார்.
நம்மாழ்வார், அவதரித்தபோது வாய் திறந்து அழக்கூட இல்லாததால் அவரை இறைவன் திருவடிகளில் சமர்ப்பித்தனர். அவர் தானாகவே தவழ்ந்து சென்று அருகில் உள்ள புளியமரத்தின் பொந்தில் போய் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து இருந்தார். அவர் அவ்வாறு 16 ஆண்டு காலம் மோனத்தில் இருந்தார்.
இந்த சமயத்தில் அயோத்தியில் மதுரகவி ஆழ்வார் தெற்குதிசையில் இருந்து ஒரு அதிசய ஒளியைக் கண்டார்
.
அதை நோக்கி தன் பயணத்தை மேற்கொண்டார்.

கடைசியில் நம்மாழ்வார் அமர்ந்து இருந்த புளிய மரத்தை அடைந்தார் .மதரகவியாழ்வாரும் புளிய மரத்தின் பொந்தில் அமர்ந்து

இருந்த சிறுவன் நம்மாழ்வாரைப் பார்த்தவுடன் இவர் இறைவன் அம்சம் எனக் கண்டு கொண்டார்.
நம்மாழ்வாரைப் பேச வைக்க புதிர் ஒன்றை வினவினார்.

"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,
எதைத் தின்று? எங்கே கிடக்கும்?"

இக்கேள்வியைக் கேட்டவுடன், நம்மாழ்வார், முதன் முறையாகத் தன் திருவாய் திறந்து, விடையளித்தார்.

"அதைத் தின்று; அங்கே கிடக்கும்."

அதாவது, "செத்தது" என்பது நம் உடல்; "சிறியது" என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று

தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே

இன்புறும்.அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும். என்று, அந்த உயிர்

உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு,

அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.

பதிலைக் கேட்டதும், மதுரகவியாழ்வாருக்கு, உச்சி குளிர்ந்து, உண்மை விளங்கியது. அப்பதிலால் ஈர்க்கப்பட்ட

மதுரகவியாழ்வார், அந்த கணமே நம்மாழ்வாரின் திருப்பாதத்தில் விழுந்து வணங்கி, "என்னைத் தங்கள் சீடனாக ஏற்று,

இப்பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க அருள் புரிவாய்," என்று வேண்டினார்.

நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரைத் தன் சீடனாக ஏற்று அருள் புரிந்தார். நம்மாழ்வார் பாடும் பாசுரங்களை எல்லாம்

ஏட்டுச்சுவடியில் எழுதியவரும், அதை மதுரமான இசையில் பாடியவரும் நம் மதுரகவியாழ்வாரே. ஆனால், அதற்கு பிறகும் கூட, நம்மாழ்வார் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.

நம்மாழ்வார் தான் இருந்த இடத்தை விட்டு எங்கேயும் போனதில்லை. எம்பெருமானின் 108 திவ்ய தேசங்களைப் பற்றி

நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போது, மகாவிஷ்ணு, அன்னை லெட்சுமி தேவியுடன்,

தன் கருட வாகனத்தில் காட்சியளித்தனர். அது மட்டுமல்லாமல், திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றின.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட (1102) பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,திருவிருத்தம் - இது 100 பாசுரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில், அவர் ரிக் வேதத்தினுடைய சாராம்சங்களை அமைத்துள்ளார்.

திருவாசிரியம் - இந்நூல் மிகக் குறைவான பாடலைக் கொண்டுள்ளது. அதாவது 7 பாடல்கள் உள்ளன. இதில் யசூர் வேதத்தின் அம்சங்களைக்கொடுத்தருளியிருக்கிறார்.

பெரிய திருவந்தாதி - இதில் 87 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் அதர்வண வேதத்தின் கருத்துகளை ருசிக்கலாம்.

விருத்தம், ஆசிரியம், அந்தாதி ஆகிய மூன்றும், ஒரு வகையான செய்யுள் ஆகும. அவை இறைவனின் பெயரில் பா டப்பெற்றவையால், அவற்றிற்கு திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்று
அழைக்கப்படுகின்றன.

திருவாய்மொழி - இதில் 1102 பாடல்கள் உள்ளன. இவற்றில் சாம வேதத்தின் சங்கதிகளை சுவைக்கலாம்.

இவ்வாறு, ரிக், யசூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து, தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய அருளிச்செய்ததினால், நம்மாழ்வார, 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று
அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம். இவர், இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் வைத்து பாடினார்.

நம் மாறன், இப்படியே இறைவனைப் பற்றிய இன்சிந்தனையோடு 35 ஆண்டு காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு இவர் விருப்பத்திற்கிணங்க, இறைவனும் வைகுண்ட ஏகாதசி அன்று இவருக்காகவே சொர்க்கவாசலைத் திறந்து வைத்திருந்து, நம்மாழ்வாரைத் தம்மொடு இரண்டறக் கலக்கச் செய்துவிட்டார்.

நம்மாழ்வார் அரங்கன் மீது 12 பாசுரங்களை இயற்றி உள்ளார்.

நம்மாழ்வார் பற்றி பலரும் வெவ்வேறு தனியன்கள் இயற்றியுள்ளனர்.

கிடாம்பியாச்சான் திருவிருத்தம் பற்றி எழுதிய தனியன்.

கருவிருத்தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து*
ஒருவிருத்தம்புக் குழலுறுவீர்! உயிரின் பொருள்கட்கு*
ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர் கோனுரைத்த*
திருவிருத்தத்து ஓரடி கற்றிரீர் திருநாட்டகத்தே.
திருவாய்மொழி பற்றிய தனியன்கள்.

நாதமுனிகள் அருளிச்செய்தது.


பக்தாம்ருதம் விஸ்வ ஜனானு மோதனம்*
ஸர்வாரத்ததம் ஸீஸடகோப வாங்க்மயம்*
ஸகஸ்ர ஸாகோப நிஷத்ஸமாகமம்*
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்

ஈஸ்வர மாமுனிகள் அருளிச்செய்தது.

திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்*
மருவினிய வண்பொரு நல்லென்றும்*-அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே* எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து.


சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது.

மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்*
இனத்தாரையல்லா திறைஞ்சேன்,*-தனத்தாலும்
ஏதும் குறைவிலேன்* எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.

அனந்தாழ்வான் அருளிச் செய்தது.

ஏய்ந்த பெருங்கீர்த்தி இராமானுசமுனிதன்*
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன்,*-ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன்வேதம்தரிக்கும்,*
பேராத உள்ளம் பெற..

பட்டர் அருளிச் செய்தவை.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்*
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும்,*-ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த*
இதத்தாய் இராமுனுசன்.

மிக்க விறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,*
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்*
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,*
யாழினிசை வேதத் தியல்.

நம்மாழ்வாரின் திருவரங்கன் பற்றிய திருவிருத்தம்.

1 தண்ணந் துழாய்* வளை கொள்வது யாமிழப்போம் , நடுவே
வண்ணம் துழாவ* ஓர் வாடையுலாவும்,* வள்வாயலகால் -
புள்நந்துழாமே பொருநீர்த்திருவரங்கா! அருளாய்*
எண்ணந் துழாவுமிடத்து,* உளவோபண்டும் இன்னன்னவே? 2505


திருவாய்மொழி பாசுரங்கள்.

2.கங்குலும் பகலும் கண் துயிலறியாள்* கண்ணநீர் கைகளால் இறைக்கும்,*
சங்கு சக்கரங்களென்று கை கூப்பும்* தாமரைக் கண் என்றே தளரும்*
எங்கனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்* இருநிலம் கை
துழாவிருக்கும்,*செங்கயல் பாய்நீர்த் திருவரங்த்தாய்*
இவள்திறத்து என் செய்கின்றாயே? 3464

3.என்செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா! என்னும்*
கண்ணீர்மல்க இருக்கும்,* என்செய்கேன் எறிநீர் திருவரங்கத்தாய்? என்னும்*
வெவ்வுயிர்த்துயிர் உருகும்,* முன்செய்த வினையே! முகப்பாய் என்னும்*
முகில்வண்ணா! தகுவதோ! என்னும்,* முன்செய்து இவ்வுலகம் உண்டுமிழந்தளந்தாய்!* என்கொலாமுடிகின்றது இவட்கே? 3465

4.வட்கிலன் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும் மையாக்கும்,*
உட்குடை அசுரர் உயிரெல்லாம் உண்ட* ஒருவனே! என்னும் உள்ளுருகும்,*
கட்கிலீ உனனைக் காணுமாறு அருளாய்* காகுத்தா! கண்ணனே! என்னும்,*
திட்கொடி மதிள்சூழ் திருவரங்த்தாய்* இவள் திறத்து என் செய்திட்டாய்? 3466

5.இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும்* எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்,*
'கட்டமே காதல்!' என்று மூர்ச்சிக்கும்* கடல்வண்ணா! கடியைகாண் என்னும்,*
வட்டவாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் எனறென்றே மயங்கும்,*
சிட்டனே! செழுநீர்த் திருவரங்த்தாய்!* இவள் திறத்து என் சிந்தித்தாயே? 3467

6.சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்* திருவரங் கத்துள்ளாய்! என்னும்-
வந்திருக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க* வந்திடாய் என்றென்றே மயங்கும்
அந்திப்போது அவுணன் உடலிடந்தானே!* அலைகடல் கடைந்த ஆரமுதே,*
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த* தையலை மையல் செய்தானே! 3468

7.மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே! என்னும்* மா மாயனே! என்னும்,*
செய்யவாய் மணியே என்னும்* தண்புனல்சூழ் திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*
வெய்யவாய் தண்டு சங்குசக்கரம் வில்லேந்தும் விண்ணோர் முதல்! என்னும்,*
பைகொள் பாம்பணையாய்! இவள் திறந்தருளாய்* பாவியேன் செயற்பாலதுவே 3469

8.பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!* பறறிலார் பற்றநின்றனே,*
கால சக்கரத்தாய்! கடலிடங் கொண்ட* கடல்வண்ணா! கண்ணனே! என்னும்
சேல்கொள் தண்புனல்சூழ் திருவரஙகத்தாய்! என்னும்* என்தீர்த்தனே! என்னும்,*
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்* என்னுடைக் கோமளக் கொழுந்தே.* 3470

9.கொழுந்து வானவர்கட்கு என்னும்* குன்றேந்திக் கோநிரை காத்தவன்! என்னும்*
அழுந்தொழும் ஆவி அனல்வெவ்வுயிர்க்கும்* அஞ்சன வண்ணனே! என்னும்*
எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்*எங்கனே நோக்குகேன்? என்னும்*
செழுந்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!* என் செய்கேன் என் திருமகட்கே? 3471

10.என் திருமகள் சேர்மார்வனே! என்னும்* என்னுடைய ஆவியே! என்னும்*
நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட* நிலமகள் கேள்வனே!
என்னும்* அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட* ஆய்மகள் அன்பனே! என்னும்*
தென்திருவரங்கம் கோயில்கொண்டானே!* தெளிகிளேன் முடிவு இவள் தனக்கே. 3472

11.முடிவு இவள் தனக்கொன்றறிகிலேன் என்னும்* மூவுலகாளியே! என்னும்,*
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்* நான்முகக் கடவுளே! என்னும்,*
வடிவுடை வானோர் தலைவனே! என்னும்* வண் திருவரங்கனே! என்னும்*
அடியடையாதாள் போலிவள் அணுகி அடைந்தனள்* முகில்வண்ணன் அடியே. 3473

12.முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்* மொய்புனல் பொருநல்,*
துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்,*வண்பொழில்சூழ் வண்குருகூர்ச் சடகோபன்,*
முகில்வண்ணன் சொன்னசொல்மாலை* ஆயிரத்து இப்பத்தும் வல்லார்*,
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே. 3474

கருத்துகள் இல்லை: