வியாழன், 3 மே, 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-7. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-7. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

ஸ்ரீரங்கம் ஏன் என்ற தலைப்பில் ஆறு பகுதிகள் பார்த்தோம். மற்ற ஊர்களை விட ஸ்ரீரங்கம்  ஏன் உயர்ந்தது என்ற கேள்விக்கு முடிவில்லாத பதிலைத் தான்  நாம் பெறமுடியும்,  சொல்லிக்கொண்டே போகலாம்,
பிரம்மத்தை நேரில் பார்க்கமுடியாது. அவன் த்ருஷ்டம் அல்ல, அத்ருஷ்டம். கண்களாலோ, காதுகளாலோ, ஏன்  ஐம்புலன்களாலும் உணரமுடியாது..ஏன்? இவைகள் அளாவுக்கு உட்பட்டவை. பின் எப்படிப்  பார்ப்பது? அதாவது அளவுக்கு உட்பட்ட கருவிகளால் அளவுக்கு உட்படாத பிரம்மத்தைப்
காண முடியாது. சாஸ்த்ரம் ஒன்றுதான் அவன் யார் என்று உணர்த்தும். அவன் இன்னான் , இனியான் என்று உணர்த்தும்.' அப்படிப்பட்ட கண்ணால் காணமுடியாத ஸ்ரீமன் நாராயணனை  எங்கே பார்க்கலாம்? ப்ரமாணம், பிரணவாகார விமானத்தில் சேவித்துக் கொள்ளலாம்.
ரங்கனை ஷேஷியாகவும், தங்களை ஷேஷனாகவும் அனுபவித்துப் பாடியுள்ளார்கள்.
ஸ்ரீரங்கம் பிரணவாகார விவானத்தைப் பார்த்தாலே இந்த தத்துவம் அவர்கள் மனதில் படுமாம்.
ஸ்ரீரங்கம் 108 திவ்ய தேசத்தில் பிரதான ஷேத்ரம். எல்லா விஷயங்களிலும் பிரதானமானதாகும்.
ஆத்மாக்கள் எல்லாவற்றிலும், ஆத்மா வேறு, தேகம் வேறு என்று அறியாமல் இருக்கிறோம். மேலும் ஆத்மா பெருமாளுக்கு அடிமை என்று நாம் நினைப்பதில்லை. இங்கு அடிமையாக  இருப்பது தான் விசேஷம். எல்லாரும் பெருமாளுக்கு அடிமையாக இருக்க ஆசைப்பட  வேண்டும். அவனிடம் என்ன குணம் இருக்கு என்று ரங்கனைத் தேர்ந்தெடுக்கவேண்டும்?
"அவனிடம் என்ன குணம் இருக்கு? அவனோ எங்கோ இருக்கிறான், அவனால் என்ன செய்ய முடியும்? அவனுக்குப் போய் அடிமையாக இருக்கிறேன் என்கிறாயே? பக்கத்து விட்டு மனிதன் உனக்கு எல்லா  உதவிகளையும் செய்யமாட்டானா?" என்று தோழி கேட்கிறாளாம். அதற்கு நம்மாழ்வார்,
.  "நம்பி யைத்,தென் குறுங்குடி நின்ற, அச்
   செம்பொ னேதிக ழும்திரு மூர்த்தியை,
   உம்பர் வானவ ராதியஞ் சோதியை,
   எம்பி ரானை யென் சொல்லி மறப்பனோ!! (திருவாய்மொழி 10ம்பத்து 9வது பாசுரம் -2782)
இத்தனை அழகும்,குணங்களும் கொண்ட ,தென்குறுங்குடி நின்ற, தங்கத்தை உருக்கி வார்த்தால் போன்ற  மேனிகொண்ட உம்பர் வானவர் சோதியை ஆன நித்ய விபூதியில் இருக்கும் எனக்கு எல்லாமும்  செய்த அவனை என்ன சொல்லி மறப்பனோ?"
என்று பதில் கூறுகிறார். நம்மைப் படைத்து, காத்து அனைத்தையும் கொடுப்பவனுக்கு அடிமைத்  தொழில் புரிவதில் தப்பில்லை. ரங்கன் ஆண்டான், தாம் அடிமை, என்று அப்போது நாம் அடியேன்  என்கிறோமோ அப்போதே நாம் புனிதமாகிவிட்டோம் என்று பொருள். இதைத் தான் எல்லா ஆழ்வார்களும் தங்கள் பாசுரங்களிலும் சொல்லி உள்ளார்கள். 

அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார்?
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கத்தை ஆழ்வார்கள் எப்படி அனுபவித்தார்கள்?
தமிழில் ஐந்தாவது வேதமாகிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அரங்கனுக்காகவே 247 பாசுரங்களை  அனுபவித்துப் பாடியுள்ளார்கள். பத்து ஆழ்வார்கள் அரங்கனை மங்களாசாசனம்  செய்துள்ளார்கள்.
அதாவது ரங்கன் ஆண்டான், தான் அடிமை என்ற பாவத்தில் பாடியுள்ளார்கள்.

பதின்மர் பாடிய பெருமாள்"

"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய பாசுரங்கள் 247.
இதில் ஒரு விசேஷம் உள்ளது?
என்ன அப்படிங்கிரிங்களா?
தமிழ் எழுத்துக்களில் உள்ள உயிர், உயிர்மெய் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கையும்  அதுதான். தேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம் என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதி உள்ளார்

"ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்!
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்!
தோலாத தனிவீரன் தொழுத கோயில்!
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்!
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்!
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்!
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்!
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே!

முதலாழ்வார்கள் என்று சொல்லகூடிய பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய  மூவரும் அரங்கனைப் பாடியுள்ளார்கள். இவர்கள் சந்தித்த இடம் திருக்கோவிலூர்.
திருக்கோவிலூர் இடைகழியில் நடந்தது என்ன?
பார்ப்போம்!!!!

கருத்துகள் இல்லை: