சனி, 25 ஆகஸ்ட், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-14. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!


அரங்கன் 
கருட வாகனம் கேள்விப் பட்டுள்ளோம், ரங்கநாதன் மாசி மாதம்
கருட வகனத்தில் வருவதைக் காண எல்லா ஊர்களிலும் இருந்து பார்க்க
வருவார்கள். "மாசிக் கருடன் காசிக்குப் போனாலும் கிடைக்காது" ன்னு
ஒரு பழமொழி கூட உண்டு. எதனால அப்படி ஒரு பழமொழின்னு தெரியலே
கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அரங்கனை யானை வாகனத்தில் பார்க்க வேண்டுமே? நிஜ யானையில்
வருவது போலவே இருக்கும். யானை வாஹனம் புறப்பட்டுவிட்டால்
எவ்வளவு வேகம்  தெரியுமா? வாயு வேகம், மனோ வேகம் போல அவ்வளவு
வேகத்தில் சென்று நிலைக்குத் வந்து விடுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
கொஞ்சம் சுணங்கினாலும் போச்சு, 
இது போல பெருமாளுக்கு பல வாகனங்கள். எல்லா வாகனங்களும் ஒன்றுக்கொன்று விசேஷம். தான்.
அப்படி முனிவாகனம்-ன்னு கேள்விப்பட்டுள்ளீர்களா?
அதேன்ன புதுசா சொல்றே?-ன்னு சொல்றது கேட்குது.
ஆமாங்க, அது ஒரு தனிக்கதைங்க!!!
என்னது, அரங்கனை ஆராதித்த ஆழ்வார்கள்-ன்னு தலைப்புப்
போட்டுட்டு கதைங்கர.
ஆமாம், இந்தக் கதையே ஒரு ஆழ்வாரைப் பத்திதான்.
சரி,அந்தக்கதையச், சொல்லு, சொல்லு, கேப்போம்.
சொல்றேன்!!!!
லோக சாரங்க முனிவர்ன்னு ஒருத்தர் ஸ்ரீரங்கத்தில் பெருமாளுக்கு கைகங்கர்யம் செய்து கொண்டு இருந்தார். இவர் பெருந்தன அர்ச்சகர், அதனாலே இவர் வெச்சதுதானே  சட்டமாக இருக்கணும்!
தினப்படி பெருமாளுக்கு திருமஞ்சன தீர்த்தம் அம்மா மண்டபம் காவிரியில் இருந்து  கொண்டு வருவது இவரின் முக்கிய கைங்கங்கர்யம்.
இப்படித்தான் ஒருநாள்!!!!
"கதிரவன் குணதிசை வந்தனைந்தான் கனவிருள் அகன்றது காலையம்பொழுதாய்"
என்பதுபோல சூரியன் உதயமாகும் போது, காவிரிக் கரைக்கு குடத்துடன் லோக சாரங்க  முனிவர் வருகிறார்.
ஸ்ரீரங்கம் அருகில் உள்ள உறையூரில் வாழ்ந்து வந்தவர், பாணர் குலத்தில் பிறந்ததனால்  பாணர் என்று பெயர் பெற்று, அரங்கனைப் பற்றிப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். தன் கையில் வீணையைக் கையில் வைத்துக் கொண்டு பண் இசைப்பதில் வல்லவர்,
தான் தாழ்ந்த குலத்தில் பிறந்தபடியால் ஸ்ரீரங்கத்தின் மண்ணை மிதிக்க மாட்டேன்  என்ற வைராக்கியத்துடன் காவிரிக் கரையில் நின்று கொண்டு அரங்கனைப் பற்றி  தன்னை மறந்த நிலையில் பாடிக் கொண்டிருந்தார்.
தன் முன்னே யார் இருக்கிறார்கள் என்பதை அறியாததால், லோக சாரங்க முனிவர்  வந்ததை இவர் அறியவில்லை.
அவரை தினப்படி பார்க்கும் முனிவருக்கு இவர் பெயர் நன்ராகத் தெரிந்ததால்,
குறுக்கே நின்று கொண்டிருக்கும்  பாணனைப் பார்த்து,
"அடேய், பாணா, என்ன குறுக்கே நின்று கொண்டு இருக்கிறாய், விலகி நில்லு"
அரங்கனை தவிர வேறொன்றும் பாணன் காதில் விழாததால்,
"அரங்கனுக்கு எடுத்துச் செல்லும் குடத்தை விடப் போகிறாயா, இல்லையா?"
ஹு,ஹு, ஒண்ணும் காதில் விழவில்லை
இவன் கவனத்தை எப்படி திருத்துவது? யோசித்தார், அவனைத் தொடமுடியாது, தொட்டால் தீட்டாகிவிடும்  
முனிவர். சுற்றுமுற்றும் பார்த்தார், ஆற்றில் கிடந்த சிறு கல்லை எடுத்தார், பாணன்  மீது எறிந்தார். பாணன் முகத்தில் சரியாக, நெத்தியடி என்பார்களே அதுபோல் சரியாக  நெற்றியில் பட, ரத்தம் பீறிட்டு வருகிறது.
அப்போதுதான் தன் நிலைக்கு வந்தான் பாணன். அபசாராம் செய்துவிட்டோம் என்று  நினைத்து அவரிடம் மன்னிப்புக் கேட்டு அவருக்கு வழிவிட்டான்  பாணன். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் அரங்கன்.
"என்ன கருட சந்நிதி எவ்வளவு நாழி ஆகியும் திறக்கப் படவில்லை"
என்று மனதில் நினைத்துக் கொண்டே, பெருமாள் சந்நிதியும் திறக்க படாததைப்  பார்த்த, சாரங்க முனிவர், தான் ஏதோ பெருமாளிடம் அபசாரப்பட்டு விட்டோம் என்பதை  உணர்ந்து கொண்டார்.
என்று இரவு முனிவரின் கனவில்,
"முனிவரே, நீர் அபசாரம் செய்து விட்டீர், நம் பாணனை கல்லால் அடித்துத்
துன்புறுத்தி விட்டீர், முதல் வேலையாக நாளைக்கு பாணனை உம் தோளில் மேல்  எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வாரும்"
என்று ஆணை இடுகிறான் பெருமான்.
மறுநாள் முதல்வேலையாக காவிரிக் கரையில் பாணனைத் தேடுகிறார். அவரை வணங்கி
"தாங்கள் கோவிலுக்கு வர வேண்டும்" என்கிறார்.
"அடியேன் திருவரங்கத்து மண்ணைத் தீண்ட மாட்டேன், தயவு செய்து மன்னிக்கவும்"
இது பாணனின் கூற்று.
"தேவரீர் திருவடி திருவரங்கத்து மண்ணைத் தீண்டாமல் அடியேன் தங்களை
என் தோளின் மேல் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு திருவரங்கனை சேவிக்கலாம்".
லோகசாரங்க முனிவர் பாணனிடம் மன்றாடுகிறார்.
எவ்வளவு தடுத்தும் கேட்காததால், வேறு வழியின்றி, பாணனும் லோகசாரங்க முனிவர் தோள் மீது ஏறிக் கொண்டு, முனிவர் வழி நடத்த, கர்ப்பகிரகம் அடைகிறார்.
பெருமாளும் தன் திவ்ய மங்கள சொருபத்தை ஆழ்வாருக்கு காட்டி அருளுகிறான்.
அதைக் கண்ட பாணனும், பெருமானின் அங்கங்களை ஒவ்வொன்றாக அனுபவித்துப் பாடுகிறார். திருக்கண்கள் முதல் திருவடி வரை ஒவ்வொரு பாசுரத்தாலும் வர்ணித்து பத்து பாசுரங்கள் கொண்ட "அமலாநிதிபிரான்" என்ற பிரபந்தத்தை, பெருமானுக்கு  சமர்ப்பிக்கிறார். இறுதியில்
"என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா" என்று சொல்லி அரங்கனுடன்  சேருகிறார்.
ஆக முனிவரை வாகனமாகக் கொண்டதால் திருப்பாணாழ்வாருக்கு "முனிவாஹனர்"
என்ற பட்டப்பெயறும் உண்டு
திருப்பாணாழ்வார் 

முனிவர் தோளில்  திருப்பாணாழ்வார் 
நன்றி: http://madhavipanthal.blogspot.in

கருத்துகள் இல்லை: