ஞாயிறு, 4 மார்ச், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-3

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-3

"நல்லார்கள் வாழும் நளிரங்கம்"- என்று ஆழ்வார்கள் ஸ்ரீரங்கத்தைப் பற்றி பாசுரங்கள் இயற்றியுள்ளனர்.
"மற்ற ஊர்களில் இல்லாத சிறப்பு என்னய்யா ஸ்ரீரங்கத்தில் உள்ளது?"
என்ற கேள்விக்கு முன்னரே இரு பகுதிகளில் விளக்கி உள்ளோம். அதன் தொடர்ச்சியாக இங்கு மேலும் ஸ்ரீரங்கத்தின் மேன்மையைப் பார்ப்போம்.
கோயில், திருமலை, காஞ்சி, திருநாராயணபுரம் என்று நான்கு ஊர்களைச் சொல்லுவார்கள்.
கோயில் என்றால் ஸ்ரீரங்கத்தைத் தான் குறிக்கும்.இது போக மண்டபம் என்பார்கள்.
அதே போல, புஷ்ப மண்டபம் திருமலை ஆகும். அதனால் தான் திருமலையில் தோமாலா சேவை பிரசித்தி பெற்றது. தியாக மண்டபம் என்று பெயர் பெற்றது
காஞ்சி வரதர். எல்லா முக்கியமான ஆழ்வார்கள், ஆசாரியகள் பிறந்தது காஞ்சியில். ஆனால் கடைசியில் சேர்ந்தது ஸ்ரீரங்கத்தில். அதனால் காஞ்சி தியாக மண்டபம் ஆயிற்று.
 திருநாராயணபுரம் என்று  சொல்லப்படும் மேல்கோட்டை ஞான மண்டபம் என்பார்கள்.
ஆக எல்லாவற்றிலும் முதலாக உள்ளது ஸ்ரீரங்கம் ஆகும்.
108 திவ்ய ஷேத்ரங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். அதனை வளர்த்தால் எல்லா ஷேத்ரங்களையும் வளர்த்தது போல் ஆகும்.அதனாலும் இது முதன்மை பெற்று விளங்குகிறது.

"டாக்டர், ரெண்டு நாளா உடல் நலமில்லாமல் உள்ளது" நான் டாக்டரிடம் போனேன்.
"சோதித்துப் பார்த்து விடுவோம்" என்று டாக்டர் எல்லா சோதனைகளையும் செய்தார்.
"இத்தனை பரிசோதனைகள் செய்ய வேண்டுமா டாக்டர்?"
"நீங்க டாக்டரா, நான் டாக்டரா?"
"அதுக்கில்லை டாக்டர்" ன்னு நான் இழுத்தேன்.
"நீங்கள் எங்கு உள்ளீர்கள்" இது டாக்டர்.
"நான் ஸ்ரீரங்கத்தில் உள்ளேன்,டாக்டர்"
"உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது, சக்கரை வியாதியும் உள்ளது" ன்னு
ஒண்ணொண்ணா ஆரம்பித்தார்.
நான் மூர்ச்சை ஆகாத குறை.
"கவலைப்படாதிர்கள், இதுக்கெல்லாம் நான் சொல்றதை கவனமாகச் செய்தால் வியாதியை  சுலபமாகப் போக்கிடலாம்"
"சொல்லுங்க, டாக்டர்"
"ஒண்ணுமில்லை. தினமும் காலை மாலை நிறைய நடக்கணும். ஸ்ரீரங்கத்து சித்திரை  வீதியை ரெண்டு சுத்து சுத்திட்டு வாங்க போறும், நான் கொடுக்கிற மாத்திரையை விடாம  சாப்பிடுங்க'".
ஆம், ஸ்ரீரங்கம் பெரிய கோயில் என்பதால் வீதிகளும் பெரிது தான்.
ஸ்ரீரங்கம் சித்திரை மற்றும் உத்திரை வீதிகள், எட்டையும் ஒரு தடவை சத்தி வந்தால் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர்  ஆகுமாம். அப்பறம் எந்த வியாதியும் நில்லாமல்  போய் விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

பிள்ளையாருக்கும், முருகனுக்கும் மாம்பழத்தைப் பெற சிவபெருமான் ஒரு போட்டி நடத்தினார். யார் முதலில் உலகத்தைச் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் இந்தப் பழம் என்கிறார்.

முருகன் தனது மயில் வாகனத்தை எடுத்துக் கொண்டு வலம்
வரக் கிளம்புகிறான். புத்திசாலியான பிள்ளையார் நாரதரிடம் கேக்கிறான்,
"உலகம் என்பது என்ன? அம்மை அப்பன் என்பது என்ன?"
"அம்மை அப்பன் என்பதும், உலகம் என்பதும் ஒன்று தான்" என்று நாரதர் கூற,
அம்மை அப்பனனி ஒரு தடவை சுற்றி வந்து தந்தையிடமிருந்து பழத்தைப் பெற்றதைப்  பார்த்த, முருகனுக்கு, கோபம் வந்து பழனி மலைக்குச் செல்கிறான் என்பது நமக்குத்  தெரிந்த கதை தான்.
அது போல ஸ்ரீரங்கம் ஏழு மதில்களைக் கொண்டதால், அதனை பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம், மஹர்லோகம்,ஜநோலோகம், தபோலோகம், ஸத்யலோகம்  என ஏழு  லோகங்களை அடக்கியது என்றும் சொல்லலாம்.
அதனால் ஏழு லோகங்களில் வாழ்ந்த பெருமை ஸ்ரீரங்கத்தில் கிடைக்கும்.
முன்னரே சொல்லியபடி, தொண்டரடிப் ஆழ்வார் தன்னுடைய திருமாலையில், நாம்
"நாம் யாரை வணங்குவது"
என்ற சந்தேகத்திற்கு,
 "சிலையினால் செற்ற தேவனே தேவன் ஆவான்"
என்று,
"யார் அந்த இலங்கை மன்னன் ராவணனை வென்றானோ, அந்த ராமனை வணங்கு"
என ராமனை வணங்கச் சொன்னார். நாம் உடனே,
"ராமன் வாழ்ந்தது  த்ரேதா யுகம், ஆனால் நாம் இருப்பதோ கலியுகம்"
என்றோம்.
"அப்படியா சரி, "கற்றினம் மேய்த்த எந்தைக் கழலிணை பணிமிநீரே"
என்று மாடு மேய்ப்பவனாக, வெண்ணெய் திருடும் சாதாரணமான கண்ணன்
திருவடிகளைப் பற்றுங்கள்"
என்று கண்ணனை பற்றச் சொன்னார்.
நாம் உடனே " இதிலும் குறை உள்ளதே, கண்ணனும் கலியுகத்தில் இல்லையே?
அவனும் துவாபரயுகத்தில் வாழ்ந்தவன் தானே? என்றோம்.
ஆழ்வாரும் உடனே,
" நாட்டினான் தெய்வமெங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
 காட்டினான் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம்"
என்று எல்லா விபவாவதாரங்களுக்கும் பிரதிநிதியாக, எல்லா
அர்ச்சாவதார திவ்ய தேசங்களுக்கும் பிரதிநிதியாக ரங்கநாதன் சேவை
சாதிக்கிறான், அவன் திருவடிகளைப் பற்றுங்கள்"
என்று அரங்கனைக் காட்டினார்.
ஆக,
"அடியார்கள் வாழ! அரங்க நகர் வாழ!
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ!!
கடல் சூழ்ந்த மன்னுலுகம் வாழ!
மணவாள மாமுனியே இன்னும் ஒரு
நூற்றாண்டு இரும்!!!."
என்று கூற்று  சரிதானே!

ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்
ஸ்வாமி தேசிகன்

"ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்!
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்!
தோலாத தனிவீரன் தொழுத கோயில்!
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்!
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்!
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்!
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்!
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே!

கருத்து:
ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து எடுக்கப்பட்டது

கருத்துகள் இல்லை: