திங்கள், 11 ஜூன், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-11. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-11. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!
நம்மாழ்வாரின் சரித்திரம். 
 
நம்மாழ்வார், 7ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் அவர் சேனைத்தலைவர் அம்சமாகப் பிறந்தார். தற்போதுள்ள பாண்டிய நாட்டில் உள்ள ஆழ்வார் திருநகரி என்ற திருக்குருகூர் தலத்தில்  அவதரித்தார்.
நம்மாழ்வார், அவதரித்தபோது வாய் திறந்து அழக்கூட இல்லாததால் அவரை இறைவன்  திருவடிகளில் சமர்ப்பித்தனர். அவர் தானாகவே தவழ்ந்து சென்று அருகில் உள்ள  புளியமரத்தின் பொந்தில் போய் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து இருந்தார். அவர் அவ்வாறு  16 ஆண்டு காலம் மோனத்தில் இருந்தார்.
இந்த சமயத்தில் அயோத்தியில் மதுரகவி ஆழ்வார் தெற்குதிசையில் இருந்து ஒரு  அதிசய ஒளியைக் கண்டார்.அதை நோக்கி தன் பயணத்தை மேற்கொண்டார்.
கடைசியில் நம்மாழ்வார் அமர்ந்து இருந்த புளிய மரத்தை அடைந்தார் .
மதரகவியாழ்வாரும் புளிய மரத்தின் பொந்தில் அமர்ந்து  இருந்த சிறுவன் நம்மாழ்வாரைப் பார்த்தவுடன் இவர் இறைவன் அம்சம் எனக் கண்டு
கொண்டார். நம்மாழ்வாரைப் பேச வைக்க புதிர் ஒன்றை வினவினார்.

நம்மாழ்வார்-மதுரகவியாழ்வார்


"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,எதைத் தின்று? எங்கே கிடக்கும்?"

இக்கேள்வியைக் கேட்டவுடன், நம்மாழ்வார், முதன் முறையாகத் தன் திருவாய் திறந்து, விடையளித்தார்.

"அதைத் தின்று; அங்கே கிடக்கும்."

அதாவது, "செத்தது" என்பது நம் உடல்; "சிறியது" என்பது உயிர். உயிரானது உடலினுள்  இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும். என்று, அந்த உயிர் உண்மையை (தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது  இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே
நீங்கா நிலைத்துவிடும்.
பதிலைக் கேட்டதும், மதுரகவியாழ்வாருக்கு, உச்சி குளிர்ந்து, உண்மை விளங்கியது.
அப்பதிலால் ஈர்க்கப்பட்ட மதுரகவியாழ்வார், அந்த கணமே நம்மாழ்வாரின்
திருப்பாதத்தில் விழுந்து வணங்கி,

"என்னைத் தங்கள் சீடனாக ஏற்று, இப்பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க
அருள் புரியவேண்டும்," என்று வேண்டினார்.
நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரைத் தன் சீடனாக ஏற்று அருள் புரிந்தார். நம்மாழ்வார்  பாடும் பாசுரங்களை எல்லாம் ஏட்டுச்சுவடியில் எழுதியவரும், அதை மதுரமான இசையில் பாடியவரும் நம் மதுரகவியாழ்வாரே.
ஆனால், அதற்கு பிறகும் கூட, நம்மாழ்வார் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.

நம்மாழ்வார்

நம்மாழ்வார் தான் இருந்த இடத்தை விட்டு எங்கேயும் போனதில்லை.
எம்பெருமானின் 108 திவ்ய தேசங்களைப் பற்றி நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை  எல்லாம் பாடத்துவங்கின போது, மகாவிஷ்ணு, அன்னை லெட்சுமி தேவியுடன், தன் கருட வாகனத்தில் காட்சியளித்தனர்.
அது மட்டுமல்லாமல், திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில்  தோன்றின.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட (1102) பாடல்கள் நம்மாழ்வாரால்  பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,திருவிருத்தம் -
 இது 100 பாசுரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில், அவர் ரிக் வேதத்தினுடைய  சாராம்சங்களை அமைத்துள்ளார்.
திருவாசிரியம் - இந்நூல் மிகக் குறைவான பாடலைக் கொண்டுள்ளது. அதாவது  7 பாடல்கள் உள்ளன. இதில் யசூர் வேதத்தின்  அம்சங்களைக்கொடுத்தருளியிருக்கிறார்.
பெரிய திருவந்தாதி - இதில் 87 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் அதர்வண வேதத்தின்  கருத்துகளை ருசிக்கலாம்.
விருத்தம், ஆசிரியம், அந்தாதி ஆகிய மூன்றும், ஒரு வகையான செய்யுள் ஆகும.
அவை இறைவனின் பெயரில் பாடப்பெற்றவையால், அவற்றிற்கு திரு என்னும்  அடைமொழி சேர்த்து திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்று அழைக்கப்படுகின்றன.
திருவாய்மொழி - இதில் 1102 பாடல்கள் உள்ளன. இவற்றில் சாம வேதத்தின் சங்கதிகளை சுவைக்கலாம்.
இவ்வாறு, ரிக், யசூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து  தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய  அருளிச்செய்ததினால், நம்மாழ்வார, 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து  இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம்.
இவர் இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் வைத்து பாடினார்.
தாமிரபரணி ஆற்றின் நீரைக் காய்ச்சி ஒரு உருவம் செய்யச் சொன்னார். அதை பார்த்த மதுரகவியாரும், "இது தங்களைப் போல இல்லையே?" என்றார்.
"ஆம்! இது நாம் அல்லோம்! இது நம்மைப் போல் ஒருவன்! நம்மை அத்தனை பேருக்கும்  எடுத்துச் சென்று சேர்க்கப் போகிறவன்!
 "பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்! கலியும் கெடும் கண்டு கொண்மின்" என்று" பின்னாளில் தோன்றப் போகிற உடையவன் இவனே! இவன் பெயர் 
"பவிஷ்யதாச்சார்யன்! "பின்னாள் ஆசான்!" என்று கூறினார்.
"இவர் தான் பின்னாளில் அரங்கனுக்குத் திருத்தொண்டுகள் செய்து பெறும்
புகழ் பெரபோகிறார். இவரை நாளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லுங்கள்"
என்று மதுரகவியாரிடம் சொல்லி விட்டு, மறுமுறை தண்ணீரைக் காய்ச்சி
தன் உருவத்தையும் செய்யச் செய்தார்.
குலமுதல்வன் முதல் தாய் என்றால் ராமானுஜன் வளர்த்த தாய் என்பார்கள்.
          வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்
             ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
          முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
             இதத்தாய் இராமானுசன்!


நம் மாறன், இப்படியே இறைவனைப் பற்றிய இன்சிந்தனையோடு 35 ஆண்டு காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்தார் . அதன் பிறகு இவர் விருப்பத்திற்கிணங்க, இறைவனும் வைகுண்ட ஏகாதசி அன்று இவருக்காகவே சொர்க்கவாசலைத் திறந்து வைத்திருந்து,
நம்மாழ்வாரைத் தம்மொடு இரண்டறக் கலக்கச் செய்துவிட்டார்.

நம்மாழ்வார் அரங்கன் மீது 12 பாசுரங்களை இயற்றி உள்ளார்.

நம்மாழ்வார் கண்ணனைப் பற்றி பாசுரங்கள் பாடியுள்ளார்.

 

கருத்துகள் இல்லை: